Published : 19 Mar 2019 11:28 AM
Last Updated : 19 Mar 2019 11:28 AM

அந்த நாள் 34: சொக்க வைக்கும் செப்புத் திருமேனிகள்

காலம்: பொ.ஆ. 1000, தஞ்சாவூர்

“குழலி, சோழர்கள் காலத்துல நிறைய ஏற்றுமதி நடந்துச்சுன்னும் கோயில்களை மையமா வெச்சு நிறைய வேலைகள் நடந்ததாவும் சொன்னே இல்ல. ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி அப்படி என்னென்ன தொழில்கள் செழிப்பா இருந்துச்சுன்னு சொல்லவே இல்லையே குழலி.”

“ஏற்றுமதி வர்த்தகத்துக்குக் கப்பல்களும் கடல் பயணங்களும் அவசியமா இருந்துச்சு. அப்படீன்னா அதுக்கு முன்னாடியே அதுல அவங்களுக்கு எப்படி அனுபவம் கிடைச்சிருக்கும், செழியன்? ”

“கடல் பயண அனுபவமும் கடலில் கலம் செலுத்தும் அனுபவமும் இருந்திருக்கணும்.”

“மீன்பிடித் தொழில் அன்னைக்கு முக்கியமானதா இருந்துச்சு. பெரிய வெட்டுமரங்களைக் கயித்துல கட்டி உருவாக்கப்பட்ட கட்டுமரம் (கட்டப்பட்ட மரம்) மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டுச்சு.”

“காவிரி ஆறும் பாசன வசதிகளும் சிறப்பா இருந்துச்சுன்னு படிச்சேனே. அப்ப உழவுத் தொழிலும் சிறப்பாதான் நடந்திருக்கும், இல்லையா? ”

“நிச்சயமா. அதற்கு அடுத்ததா நெசவுத்தொழிலும் செழிப்பா இருந்திருக்கு. பெண்களும் குழந்தைகளும் நெசவுத் தொழில்ல ஈடுபட்டிருக்காங்க. அவுரி நீலம், மஞ்சள் கிழங்கு, குங்குமம், மஞ்சிட்டி எனும் நீர்ப்பூண்டு, போலி குங்குமப்பூ போன்றவற்றையெல்லாம் நெய்ஞ்ச துணிகளுக்கு இயற்கைச் சாயமேற்றப் பயன்படுத்தியிருக்காங்க. இப்படி நெய்யப்பட்ட துணிகள் ஐரோப்பாவிலும் கிழக்கு ஆசியாவிலும் புகழ்பெற்றதா இருந்திருக்கு.”

“மீன்பிடித்தல், உழவு, நெசவு - இதெல்லாம் தானே மனுசனோட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யுது”

“உண்மைதான். அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆன பின்னாடி, கலையையும் இலக்கியத்தையும் செழிப்பாக்குற வேலைதானே மனுசனுக்குப் பிடிக்கும். சோழர்கள் காலத்துல பெரிய பெரிய கோயில்கள் ஒருபுறம் கட்டப்பட்டுச்சு. இன்னொரு பக்கம் வெண்கலச் சிலை, ஐம்பொன் சிலைகளை வடிக்கும் கலையும் பிரசித்தி பெற்றிருந்துச்சு.”

“இது புதுசா இருக்கே!”

“முருகன், துர்கை, விஷ்ணு, லட்சுமி, நடனமாடும் நடராஜர் சிலை போன்றவற்றையும் ராஜா, ராணியோட சிலைகளையும் இதுபோல வடிச்சிருக்காங்க. சோழர்கள் காலத்துல வடிக்கப்பட்ட இந்தச் சிலைகளுக்கு, ‘சோழர் செப்புத் திருமேனிகள்'னு (Chola Bronzes) பேரு.”

“இந்தச் சிலைகள் எப்படியிருக்கும்? ”

“கோயில் திருவிழாக்கள்ல உற்சவர் சிலைகளை எடுத்துட்டு வருவாங்கள்ல, அந்தச் சிலைகள் மாதிரி இருக்கும். சோழர் செப்புத் திருமேனிகள்ல புகழ்பெற்றது நடனத்தின் கடவுளாகக் கருதப்படும் தாண்டவமாடும் நடராஜர் சிலை.”

andha-2jpg

“ம், இப்ப பார்த்த ஞாபகம் வருது.”

“இந்தச் சிலைகள முதல்ல தேன் மெழுகுல வடிப்பாங்க. அப்புறம் அந்த மெழுகுச் சிலை மேல களிமண் பூச்சு கொடுப்பாங்க. அந்தக் களிமண் பூச்சுல போடப்பட்ட ஒரு துளை வழியா உருக்கின உலோகத்தை ஊத்துவாங்க. அப்போ உள்ளே இருக்குற மெழுகு உருகி வெளில வந்துடும். உலோகம் நல்லா குளிர்ந்த பின்னாடி களிமண் பூச்சை உடைச்சுட்டு உலோகச் சிலையை வெளியே எடுப்பாங்க. அந்தச் சிலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி அழகு சேர்ப்பாங்க.”

“கொஞ்சம் சிக்கலான முறைதான் இல்லையா?”

“ஆமா, இப்படிச் சிலை வடிக்கும் முறைக்கு மெழுகுப் படிவ வார்ப்புனு

(Lost wax process) பேரு. இதை

நீ நேரிலேயே பார்க்கலாம்.”

“அப்படியா? ”

“தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இருக்குற சுவாமிமலைல இன்னைக்கும் செப்புத் திருமேனிகள், ஐம்பொன் சிலைகள் வடிக்கப்படுது. ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி இந்தச் சிலை வடிக்கும் முறை காலம்காலமாகத் தொடர்ந்துகிட்டே இருக்கு செழியன் ”.

“சுவாமிமலை கோயிலுக்குப் போயிருக்கேன். இந்தச் சிலை வடிக்கிறதப் பார்த்ததில்ல. அடுத்த தடவ பார்த்திடுறேன் குழலி ”.

எங்கே பார்க்கலாம்?

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ‘சோழர் செப்புத் திருமேனி'களுக்கு மட்டும் குளிரூட்டப்பட்ட ஒரு தனி அரங்கு உள்ளது. அதேபோல் தஞ்சை அரண்மனைக்கு அருகே உள்ள ‘கலைக் கூட'த்தில் சோழர் செப்புத் திருமேனிகள் பல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் கலை அழகுமிக்க பல்வேறு சிலைகளையும், அக்கால உடை அலங்கார வடிவமைப்பு, முக அமைப்பு போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x