Last Updated : 19 Mar, 2019 11:26 AM

 

Published : 19 Mar 2019 11:26 AM
Last Updated : 19 Mar 2019 11:26 AM

தேர்வுக்குத் தயாரா? - தேவையில்லை தேர்வு பயம்

தேர்வுக் காலத்தில் பள்ளி மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவதற்கு இணையாக மனநலத்துக்கும் கவனம் அளிப்பது அவசியம்.

தேர்வு நோக்கிலான மன அழுத்தம் என்பது ஒரு வகையில் ஆக்கப்பூர்வமாக உதவும். ஏனெனில் பாடத்தில் கவனத்தைக் குவிக்கவும், மூளையின் ஆற்றலைத் திரட்டவும் அது கைகொடுக்கும். ஆனால், அளவுக்கு அதிகமான மன அழுத்தம் தேர்வு குறித்த அச்சத்தை அதிகமாக்கி, தேர்வுக்குத் தயாராகும் செயல்களையும் தேர்வெழுதும் திறனையும் பாதிக்கக்கூடும். இந்த மிகையான தேர்வு அச்சம் மாணவர்களைச் சூழாது இருக்க அவர்களின் குடும்பத்தினர் உதவுவது அவசியம்.

எதிர்மறை தவிர்க்க

அதிக மதிப்பெண்களுக்காக மாணவரை உந்தும் வழக்கமான அழுத்தங்களைத் தேர்வுக் காலத்தில் தவிர்ப்பது நல்லது. கடைசி நேரத்தில் விழுந்து விழுந்து படித்து ஆகப்போவது ஏதுமில்லை. அதனால், அதுவரை படித்ததைத் திருப்பிப் பார்க்கத் தோதான சூழலை வழங்குவதே போதுமானது.

சோர்வடையும் நேரத்தில் பாடம் சார்ந்த தனித் திறமைகள், முந்தைய வெற்றிகள் என உத்வேகமூட்டும் சிலவற்றை நினைவூட்டுவதும் உதவும். எதிர்மறையாகப் பேசுவோர், மட்டம் தட்டுவோரை மாணவர் அருகில் அனுமதிக்க வேண்டாம். ‘வினாத்தாள் வெளியானது… கடினமான வினாக்கள் அதிகம் கேட்பார்கள்… தேர்வு நாளன்று விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது...’ என்பது போன்ற சக மாணவர்கள் கிளப்பும் புரளிகளுக்குக் காதுகொடுக்க வேண்டாம். 

பதற்றம் தணிக்க…

மாதிரித் தேர்வுகளை அதிகம் எழுதிப் பழகுவது, மதிப்பெண்கள் உயர்வுக்கு மட்டுமன்றித் தேர்வு தொடர்பான அச்சம் அகலவும் உதவும். மாதிரித் தேர்வின்போதும், படித்ததை எழுதிப்பார்க்கும் வேளைகளிலும் தேர்வறையைக் கற்பனை செய்துகொண்டு எழுதிப் பழகுவதும் நல்லது. இரவோ பகலோ எப்போது முழுமனதோடு படிக்க முடிகிறதோ அப்போதெல்லாம் தாராளமாகப் படிக்கலாம்.

நெருக்கடியிலும் தெளிவு!

தேர்வு நேரம் என்றில்லை, பொதுவாகவே வளரிளம் பருவத்தினருக்குக் கவனச்சிதறல், பதற்றம் உள்ளிட்டவை ஏற்படுவது அந்த வயது வளர்ச்சிக்கான இயல்பான மாற்றமே. இதுவே தேர்வுக் காலத்தில் Performance Anxiety எனப்படும் செயல்திறன் சார்ந்த பதற்றமாக வெளிப்படும். அதீத எதிர்பார்ப்புகளால் இந்தப் பதற்றம், மன அழுத்தத்துக்கு இட்டுச்செல்லும்.

thervu-2jpg என்.ரஹ்மான்கான், பள்ளி மாணவருக்கான உளவியல் ஆலோசகர், முதன்மைக் கல்வி அலுவலகம், தஞ்சாவூர் மாவட்டம்.

இதனால் நடுக்கமடையும் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பில்லாது மதிப்பெண்களில் சறுக்குவது நடக்கிறது. தெளிவான மனநிலை எந்தவொரு நெருக்கடியான சூழலிலும் மூளையைச் சிறப்பாகச் செயல்பட அனுமதிக்கும். பதற்றம் மிகுந்த மனநிலை படித்ததை மறக்கடிக்கச் செய்துவிடும்.

எனவே, தேர்வுச் சூழல் சார்ந்த இயல்பான பதற்றத்தை மாணவர்கள் புரிந்துகொள்வது அவற்றைச் சமாளிக்க உதவும்.

ஒரு மணி நேரப் படிப்புக்கு இடையே ஐந்தாறு நிமிடங்களாவது இடைவேளை எடுத்துக்கொண்டு இளைப்பாறி மனத்தை லேசாக்கிக்கொள்ளலாம். அவ்வப்போது சிறு நடை செல்வது, மூக்கு நுனியில் கவனம் குவிக்கும் மூச்சுப் பயிற்சி செய்வது போன்றவை தேர்வு நேர மன இறுக்கத்தைக் குறைக்கும். அவசியமானால் படிப்பதற்கு முன்பாக சில நிமிடம் மனதுக்கு உற்சாகமூட்டும் இசை கேட்கலாம்.

ஆனால், தேர்வு தினங்களில் பாட்டு கேட்டவாறு படிப்பதைத் தவிர்க்க வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்திப் படிக்கத் தன்னைத்தானே ஊக்குவிப்பது, எதிர்கால இலக்கைக் கற்பனை செய்து பார்ப்பது போன்றவையும் உதவும். தேர்வறைக்குள் நுழைந்ததும் மனத்தைத் தளர்வாக வைத்துக்கொண்டு தேர்வை எழுத ஆரம்பிக்கலாம். நேர மேலாண்மையைச் சரியாகப் பின்பற்றுவதும் தேர்வறைப் பதற்றத்தைக் குறைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x