Last Updated : 19 Mar, 2019 11:22 AM

 

Published : 19 Mar 2019 11:22 AM
Last Updated : 19 Mar 2019 11:22 AM

ஆங்கில​ம் அறிவோமே 255: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கேட்டாரே ஒரு கேள்வி

“ரயிலில் டிக்கெட் பரிசோதனை செய்ய வருபவர்களை T.T.R. என்று கூறுகிறோமே, இதற்கான விரிவாக்கம் என்ன?  பலரிடமும் கேட்டுப் பார்த்தேன் விளங்கவில்லை”.

வாசகரே, அது உண்மையில்  T.T.E.  அதாவது Travelling Ticket Examiner. இது எப்படி T.T.R ஆக மாறியிருக்கக் கூடும் என்பதற்கான ஓர் ஊகம். தமிழில் மரியாதை நிமித்தமாக ‘-யார்’ என்று பெயருடன் சேர்த்துக் கூறுவதுண்டு.  ஒளவை-ஒளவையார், நாச்சி-நாச்சியார் என்பதுபோல. ஒருவேளை T.T.E.–யார் என்பது காலப்போக்கில் T.T.R. என்பதாகச் சுருங்கியிருக்குமோ?  தமிழ்நாட்டில்தான் T.T.R. என்று கூறுகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

****************

“சமையல் கலையில் grate என்றாலும், garnish என்றாலும் ஒன்றுதானா?’’

இல்லை.  Grate என்றால் ஒன்றைச் சிறு துண்டாக்குதல் என்று பொருள். Grate என்பதும், shred என்பதும் ஒரே பொருள் கொண்ட சொற்கள் எனலாம். Garnish என்றால் உணவின் மீது வண்ணமயமாகவும், அழகாகவும் எதையாவது சேர்த்து அதைப் பார்ப்பதற்கு அழகாக்குவது என்று பொருள்.

“How does that sound? என்பதை எந்தப் பொருளில் பயன்படுத்துகிறார்கள்?”

நண்பரே, நீங்கள் ஒரு யோசனையை முன்வைக்கிறீர்கள்.  இது குறித்த பிறரின் கருத்தை அறிய விரும்புகிறீர்கள்.  அப்போது அந்த வாக்கியத்தைப் பயன்படுத்துகிறீர்கள்.

“We could have the dinner at a hotel and then go to a movie. How does that sound?”

உங்களின் மேற்கண்ட கேள்விக்கு “That sounds great” என்று பதில் வந்தால், உங்கள் ஆலோசனை உற்சாகத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று பொருள்.

மாறாக “முடியாதே.  எனக்கு வேறு பல வேலைகள் இருக்கின்றன” என்பதுபோல் பதில் வந்தால் “That sounds great” என்று நீங்கள் கூறக் கூடாது!   “O never mind” என்று கூறலாம்.  “O never mind.  We will go tomorrow”.

****************

“ஆங்கில இலக்கியத்தில் interjection என்ற ஒன்று இருக்கிறதே.  அது பற்றிக் கொஞ்சம் கூற முடியுமா?’’ எனக் கேட்கிறார் வாசகர் ஒருவர்.

வியப்பு அல்லது வேறு சில உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் சொல் அல்லது சொற்றொடரைத்தான் (phrase) இப்படிக் குறிப்பிடுகிறோம். அது வாக்கியத்தின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும் அந்தச் சொல்லை நீக்கிவிட்டாலும் அது முழுமையான வாக்கியமாகவே இருக்கும்.

இப்போதெல்லாம் “Hey dude, what’s up?” என்பதைச் சகஜமாகக் கேட்க முடிகிறது. Dude என்பது ஒரு மனிதனைக் குறிக்கிறது.  Hey dude, what’s up? என்றால் அது பேச்சு வழக்கில் ‘என்னய்யா, என்ன சமாச்சாரம்?’’ என்பதற்குச் சமம். இதில் hey என்பது interjection.  ஒருவர் உங்கள் காலை மிதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.  ‘’Ouch! Do not step on my foot” என்று நீங்கள் கூறலாம்.  (கதறலாம்).  இதில் ouch என்பது interjection.

மிக அழுத்தமான உணர்வை வெளிப்படுத்தினால் அந்தச் சொல்லைத் தொடர்ந்து ஓர் ஆச்சரியக் குறியையும் பயன்படுத்துவோம்.  இல்லை என்றால் கால்புள்ளியைப் (comma)  பயன்படுத்துவோம்.

Dammit! He is incorrigible (incorrigible என்றால் திருத்தவே முடியாத), Hey dude, போல.

 

சிப்ஸ்

# Typo என்றால்?

தட்டச்சில் நேர்ந்த பிழை (Typographical mistake)

# ஒரு கட்டுரையை truncate செய்வது என்றால்?

அதன் நீளத்தைக் குறைப்பது

# Oily tongue என்றால்?

பிறரை அர்த்தமின்றிப் புகழ்ந்துகொண்டே இருக்கும் நாக்கு.

 

தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x