Published : 12 Mar 2019 12:34 PM
Last Updated : 12 Mar 2019 12:34 PM

அந்த நாள் 33: கோயில்கள் எனும் கலைக்கூடங்கள்

காலம்: பொ.ஆ. 1000, தஞ்சாவூர்

“வணக்கம் செழியன். போர் வெற்றி மூலமாவும் ஏற்றுமதி வர்த்தகம் மூலமாவும் சோழர்கள் சேர்த்த பெருஞ்செல்வம், கோயில்களைக் கட்டவும் கலைகளை வளர்க்கவும் பயன்படுத்தப்பட்டது பத்தி போன வாரமே சொல்லியிருந்தேன். பல்லவர்கள், சோழர்கள் காலத்துலதான் தமிழகத்துல கலை பெரும் செழிப்புடன் விளங்குச்சு.”

“இப்ப நாம எங்க போகப் போறோம்”

“பெரிய கோயிலுக்கு...”

“நான் தவழ்ந்து, நடந்து, ஓடின இடமாச்சே”

“இருக்கலாம் செழியன். ஆனாலும் ஒரு வரலாற்று ஆய்வாளருடன் பெரிய கோயிலின் சிறப்புகளைத் தெரிஞ்சுக்கிறதுல ஒண்ணும் தப்பில்லயே”

“நிச்சயமா குழலி, எனக்குத் தெரியாத பல விஷயங்களை நீ சொல்லுவேன்னு தெரியும்”

“தென்னிந்தியக் கோயில்கள் திராவிடக் கட்டிடக் கலைப் பாணில கட்டப்பட்டவை. அதோ தெரியுதே கோபுரம், அது பிரமிடைப் போல முக்கோண வடிவத்துல இருக்குது இல்லையா. அதோட அலங்காரமான தூண்களைக் கொண்ட மண்டபங்கள், கலை அழகு செழித்து நிற்கும் வாயில் கோபுரங்களை எல்லாமே தென்னிந்தியக் கோயில்கள்ல மட்டுமே பார்க்க முடியும்.

கருவறையும் சிகரம்னு சொல்லப்படுற மைய கோபுரமும் இணைந்த பகுதி ஒரு தேரைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும். கருவறைக்கு முன்னாடி இருக்கிறது ‘மகா மண்டபம்', நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் ‘நாட்டிய மண்டபம்', உணவு பரிமாறப் பயன்பட்ட இடம் ‘போக மண்டபம்'. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள் இந்த பாணிக் கோயில்களை நிறைய கட்டியிருக்காங்க."

ஆன்மிகம் மட்டுமல்ல

“பெரிய கோயிலுக்கு முன்னோடியா காஞ்சிபுரத்துல ஏதோ ஒரு கோயில் இருந்ததா சொல்வாங்களே”

“ஆமா, திராவிடக் கட்டிடக் கலைப் பாணில பல்லவர்கள் கட்டிய கைலாசநாதர் கோயில் முன்னோடிக் கோயிலாகக் கருதப்படுது. அந்தக் கோயில் அளித்த உத்வேகத்துலதான் பெரிய கோயில் கட்டப்பட்டதா சொல்லப்படுது.”

“சரி, இப்படிக் கட்டப்பட்ட பெரிய பெரிய கோயில்கள் மக்களோட ஆன்மிக உணர்வுக்கு மட்டும்தானே திருப்தியளிக்கும்?”

“இல்ல. சோழர் காலக் கோயில்கள் ஆன்மிகத் தலங்கிறதத் தாண்டி கலை, பண்பாடு, வர்த்தக மையங்களாகத் திகழ்ந்தன. பூக்கட்டுபவர்கள், நடனக் கலைஞர்கள், ஓதுவார்கள்-பாடகர்கள், சிற்பிகள், தச்சர்கள், சமையலர்கள், கணக்கு வழக்கு பார்ப்பவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள்னு ஒவ்வொரு பெரிய கோயிலுக்கும் வேலை பார்க்க நிறையப் பேர் நியமிக்கப்பட்டிருந்தாங்க. தஞ்சைப் பெரிய கோயில்ல மட்டும் இது மாதிரி 600 பேர் வேலை பார்த்ததா, கோயில்ல இருக்குற ஒரு கல்வெட்டு சொல்லுது.

அது மட்டுமில்ல கோயில்களைச் சார்ந்து பள்ளிகள், விவாதக் கூடங்கள், கவியரங்குகள், நடனம், இசைக் கச்சேரிகள் போன்றவையும் நடந்தன. பெரிய கோயில்கள்ல தேவரடியார்கள் மூலமா நடனமும் மரபுப் பாடகர்கள் வழியாக இசையும் செழிப்பா இருந்துச்சு. அத்தோட கோயிலோட  தேவைகளுக்காகப் பல கிராமங்கள் எழுதி வைக்கப்பட்டு, அவற்றிலிருந்து கிடைச்ச வருமானம் கோயிலை நடத்தப் பயன்பட்டிருக்கு.”

“இத்தனை விஷயங்களுமா கோயில்கள்ல இருந்துச்சு, குழலி”

“ஆமா, எல்லாத்துக்குமே ஆதாரம் இருக்கு. சுருக்கமா ஒரு ஊர், நகரத்தோட மையமா கோயில்கள் அன்னைக்குத் திகழ்ந்திருக்கு. இன்னைக்கும்கூடப் பெரிய கோயில்களை மையமா கொண்ட ஊர்கள், அவற்றைச் சுத்தியே இயங்குறதைப் பார்க்கலாம். பூ, பூஜை பொருட்கள் விற்பவர்கள் தொடங்கி கைவினைக் கலைஞர்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், விடுதிகள் போன்றவையெல்லாம் கோயில்களை மையமிட்டுத்தானே செயல்படுகின்றன.

தஞ்சாவூரும் தஞ்சைப் பெரிய கோயிலும் இதுக்கு நல்ல எடுத்துக்காட்டு. தஞ்சை சுற்றுவட்டாரத்துல உள்ள பிரபலமான பல ஊர்கள்,  கோயில்களை மையமா வைச்சு இயங்குறதை இன்னைக்கும் பார்க்க முடியுமே செழியன்.”

 

நிழல் விழுமா, விழாதா?

பெரிய கோயில் யுனெஸ்கோ மரபுச் சின்னமாகச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மாமல்லபுரத்துக்கு அடுத்ததாகத் தமிழகத்தில் உலக மரபுச் சின்னமாக அங்கீகாரம் பெற்ற கலைப்புதையல் இது.

அதேநேரம் பெரிய கோயில் குறித்து நிறைய மூட நம்பிக்கைகள், கட்டுக்கதைகள் உண்டு. பெரிய கோயில் முன்புள்ள நந்தி வளர்ந்துகொண்டே இருக்கிறது என்பது, அப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதைதான். மற்றொன்று பெரிய கோயிலின் மைய கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்ற மூடநம்பிக்கை. பூமியிலிருந்து எழுந்து நிற்கும் எந்த ஒரு பொருளின் நிழலும் இயல்பாகக் கீழே விழத்தான் செய்யும். அதற்கு உள்ள விதிவிலக்குகளில், பெரிய கோயில் கோபுரம் இல்லை.

பெரிய கோயிலின் மைய கோபுரத்தின் நிழல் தினசரி கீழே விழுந்துகொண்டுதான் இருக்கிறது. சந்தேகம் இருப்பவர்கள் நேரில் போகும்போது இதைப் பரிசோதித்துப் பார்க்கலாம். விஷயம் என்னவென்றால், மைய கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள முடி போன்ற கல், 80,000 கிலோ எடை கொண்ட ஒற்றைக் கல். இந்த ஒற்றைக் கல் மிகவும் உறுதியானது என்பதைச் சொல்ல, 'இதன் நிழல்கூடக் கீழே விழாது' என்று ஒரு வழக்கு முன்பொரு காலத்தில் உருவாகி இருக்கலாம். அது பின்னர் மருவி 'நிழல் கீழே விழாது' என்றாகிவிட்டது.

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x