Last Updated : 19 Feb, 2019 11:34 AM

 

Published : 19 Feb 2019 11:34 AM
Last Updated : 19 Feb 2019 11:34 AM

வெற்றி முகம்: தேவை தொலைநோக்குப் பார்வையே! - பார்வையற்ற முதல் ஐ.எப்.எஸ். அதிகாரி பெனோ ஜெபின்

பெற்றோரின் ஊக்குவிப்பும் நம்முடைய விடாமுயற்சியும் ஒன்றிணைந்தால் வானமே எல்லை என்பதை நிரூபித்திருப்பவர் பெனோ ஜெபின். முழுவதுமாகப் பார்வை இல்லாதபோதும் குடிமைப் பணி அதிகாரியாக உயர்ந்திருப்பவர். இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி.

சென்னையில் பிறந்து வளர்ந்து படித்தவர். இந்திய அரசு சார்பில் ஐ.எப்.எஸ். அதிகாரியாக பாரிஸில் பணிபுரிந்து, தற்போது பதவி உயர்வு பெற்று டெல்லி திரும்பியுள்ளார். புதுச்சேரிக்கு வந்திருந்த இவர் தன் கனவைத் துரத்தி எட்டிப்பிடித்த ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “பொதுவாக நம்முடைய கனவு நனவாக நமக்கு ஒத்துழைப்புத் தரும் பெற்றோர் கிடைப்பதே வரம். அதிலும் என்னுடைய பெற்றோர் என் கனவு மெய்ப்படக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

பொழுதுபோக்கு என்ற ஆசையே இல்லாமல் என் உயர்வையே தனது வாழ்வாகக் கொண்டார் என் தந்தை. அவர்தான் என்னைக் காலையும் மாலையும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வீட்டுக்குக் கூட்டி வருவார். எல்.கே.ஜி. முதல் சிவில் சர்வீஸ்வரை தினந்தோறும் ஆறு மணி நேரம் எனக்குப் படித்துக் காட்டுவார் என் தாய். சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் சிறுவயதிலேயே எனக்கு ஏற்பட்டது. கேளிக்கைகளில் மட்டும் நேரத்தைக் கழிக்காமல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.எப்.எஸ். ஆனேன்” என்கிறார்.

சிவில் சர்வீஸ் கனவு நிறைவேற அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை முயற்சி, உழைப்பு, ஆற்றல். இதுவே தன்னுடைய வெற்றியின் ரகசியம் என்கிறார் சாதிக்க கண் பார்வையைவிடத் தொலைநோக்குப் பார்வையே முக்கியம் என்பதை நிரூபித்துக்காட்டி இருக்கும் இந்தச் சாதனைப் பெண்.

தன்னுடைய அனுபவத்தில் இருந்து இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் பெனோ ஜெபின் ஐ.எப்.எஸ். பகிர்ந்துகொண்டவை:

vetrijpg

இளைஞர்களே…

# சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்ல, செய்தித்தாள் படியுங்கள். எல்லாச் செய்திகளையும் படித்து மூளையில் ஏற்ற வேண்டும் என்பது அர்த்தமல்ல. படிக்கும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, செயற்கைக்கோள் செலுத்துகிறார்கள் என்றால் அதன் சிறப்பு, அதன் பயன், கூடுதல் திறன் போன்ற தகவல்களைத் தெரிந்துகொண்டால்போதும். அதே நேரத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புத் தொடர்பாக ஏன், எதற்கு, எப்படி, யார் செய்தார், குறிக்கோள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

# ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் செய்தியை வானொலியில் கேளுங்கள். செய்தி அலசல் கேட்டால் பல தகவல்கள் கிடைக்கும். வார்த்தைகளைக் கற்றுகொள்ள முடியும். ஆங்கில மொழி ஆற்றல் பெருகும்.

# வேகமாகப் பேசுவதைவிடச் சிறப்பாகத் தொடர்புகொள்ளும் திறன் தேவை. சொல்வதைத் தெளிவாக விளக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள்.

# என்.சி.இ.ஆர்.டி. பள்ளி நூல்களைப் படியுங்கள்.

# முந்தைய ஆண்டு கேள்வித்தாளைப் படியுங்கள்.

# முதல்நிலைத் தேர்வில் சரியான விடையைக் கண்டறிவதைவிட, தவறான பதில்களை விலக்குங்கள். அந்தத் திறனுக்கு முந்தைய கேள்வித்தாள்களை அலசுங்கள்.

# முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு தனித்தனியானவை அல்ல. ஒன்றேதான் என நினைத்துப் படியுங்கள்.

பெற்றோர்களே…

# நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு குழந்தைகளை மட்டும் படிக்கச் சொல்லாதீர்.

# குழந்தைகளின் முயற்சியை ஊக்குவியுங்கள். அவளுடைய படிப்புக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x