Last Updated : 19 Feb, 2019 11:15 AM

 

Published : 19 Feb 2019 11:15 AM
Last Updated : 19 Feb 2019 11:15 AM

தேர்வுக்குத் தயாரா? - கைகொடுக்கும் ஒரு மதிப்பெண்கள் (பத்தாம் வகுப்பு – சமூக அறிவியல்)

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளை 52 மதிப்பெண்களுக்கான ‘ஒரு மதிப்பெண் பகுதி’, 48 மதிப்பெண்களுக்கான ‘கேள்வி பதில் பகுதி’ என 2 பிரிவாகப் பிரித்து அணுகலாம்.

அள்ளித் தரும் 1 மதிப்பெண் பகுதி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் (14), பொருத்துக (10), தலைப்பு வினா (8), காலக்கோடு (5), வரலாறு வரைபடம் (5), புவியியல் வரைபடம் (10) என ஒரு மதிப்பெண் பகுதியில் மொத்தம் 52 மதிப்பெண்களுக்கான வினாக்கள் அமைந்திருக்கும். ஒரு மதிப்பெண் பகுதியை முழுமையாகப் படிப்பதன் மூலமாகவே தேர்ச்சி மட்டுமன்றிக் கணிசமான மதிப்பெண்களையும் உறுதிசெய்துகொள்ளலாம்.

தலைப்பு வினாக்கள்

வரலாற்றுப் பாடங்களிலிருந்து மட்டுமே கேட்கப்படும் ‘தலைப்பு வினாக்கள்’ 8 மதிப்பெண்களுக்கானது. 1, 2, 4, 5, 9, 10 ஆகிய பாடங்களின் தலைப்பு வினாக்கள் முக்கியமானவை.

காலக்கோடு

காலக்கோடு பகுதியைப் பொறுத்தவரை இந்திய வரலாற்று நிகழ்வுகளை நன்கு படித்திருப்பது அவசியம். காலக்கோடு பகுதிக்கு அளவுத் திட்டம் எழுதுவதும் முக்கியம்.

வரைபடங்கள்

வரலாற்றுப் பகுதியைப் பொறுத்தவரை இந்திய வரைபடத்துக்கான விடுதலைப் போராட்ட நிகழ்விடங்கள் முக்கியமானவை. ஆசிய வரைபடத்துக்கு அரேபியா, பர்மா, ஜப்பான், ஹாங்காங், பசிபிக் பெருங்கடல், பார்மோசா, கொரியா, பெய்ஜிங், மங்கோலியா, செங்கடல், சீனா, காண்டன், சாகலின் தீவுகள், நான்கிங், மஞ்சூரியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகியவை முக்கியமானவை.

புவியியல் பகுதியைப் பொறுத்தவரை இந்திய வரைபடத்தின் மலைகள், ஆறுகள், பீடபூமிகள், பணப் பயிர், மென்பொருள் தொழிலகம், இரும்புத் தொழிலகம், துறைமுகம், தீவுகள், கடற்கரைச் சமவெளி, வளைகுடா, நீர்ச்சந்தி, காடுகள், மண், வேளாண் பயிர்கள், காற்று வீசும் திசை, மழை பெறும் பகுதி, பாலைவனம், சிகரம் போன்றவை முக்கியமானவை.

குறுவினாக்களில் முக்கியமானவை

குறுவினாக்களில் முழு மதிப்பெண் பெற வரலாற்றில் 1-8 அல்லது 9-14 பாடங்களின் 2 மதிப்பெண் வினாக்களை முழுவதுமாகப் படிக்க வேண்டும். அதேபோல புவியியலின் 1, 3, 4, 5, 6, 8 பாடங்கள் முக்கியமானவை. இந்த வகையில் குடிமையியலின் 1, 2 பொருளியியலின் 2-வது பாடம் ஆகியவை முக்கியமானவை.

விரிவான வினாக்களில் முக்கியமானவை

வரலாற்றுப் பாடங்களின் காரணங்கள், சாதனைகள், விளைவுகள் போன்ற தலைப்புகளிலான வினாக்களும் புவியியலில் காடுகள், மழைநீர் சேகரிப்பு, இயற்கை வளப் பாதுகாப்பு, வேளாண்மைப் பிரச்சினை, இமயமலை, அமில மழை போன்றவையும் முக்கியம். குடிமையியல், பொருளியலுக்கு முதலிரண்டு பாடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்து அனைத்து வினாக்களையும் படித்தால் அந்தப் பகுதியிலிருந்து கேட்கப்படும் விரிவான விடைகளுக்குப் பதிலளித்து விடலாம்.

மேலும் முக்கியக் குறிப்புகள்

அவசியமின்றிப் பக்கம் பக்கமாக விடைகளை எழுதுவது அதிக மதிப்பெண் தராது. ஒரு பக்கத்தில் 12 முதல் 15 வரிகள்வரை எழுதலாம்.

வேறுபாடு பகுதியில் 2 அல்லது 3 குறிப்புகளை அட்டவணையாக வேறுபடுத்தி எழுத வேண்டும். எடுத்துக்காட்டுகள் இருப்பின் அவற்றையும் எழுதலாம்.

பொருத்துக பகுதியில் வினா - விடை ஜோடிகளை ஒன்றுக்கொன்று இணையாக எழுதுவதும் போதிய இடைவெளிக்குப் பின்னர் அடுத்த வரியை எழுதுவதும் நல்லது.

thervu-2jpgபாடக் குறிப்புகளை வழங்கியவர்: து.நாகராஜ், பட்டதாரி ஆசிரியர் (வரலாறு), ராப்பூசல், புதுக்கோட்டை மாவட்டம்.து.நாகராஜ்right

5 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கும் முன்பாக துணைத் தலைப்புகள் குறிப்பு சட்டகம் அமைத்து எழுதலாம். ஆண்டுகள், நிகழ்வுகள், இடங்கள், பெயர்களைக் கோடிட்டுக் காட்டலாம்.

காலக்கோடு பகுதியை பென்சில் கொண்டு வரைய வேண்டும். வரைபடத்திலும் பென்சில் கொண்டு குறிக்கலாம். புவியியல் வரைபடப் பகுதிகளில் அடையாளக் குறியீடுகளுடன் வரைந்து குறிப்பது அவசியம்.

உள்ளிருந்து கேள்விகள்

பாடத்தின் பின்பகுதி வினாக்களுக்கு அப்பால் பாடங்களுக்கு உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களை மாணவர்கள் சவாலாகக் கருதுவார்கள். சுமார் 8 மதிப்பெண்களுக்கு இம்மாதிரி உள் வினாக்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடங்களின் அடிக்கோடிட்ட பகுதிகள், பெட்டித் தகவல்களைப் படித்திருப்பதன் மூலம் இந்த உள்வினாக்களுக்கு தயாராகலாம். இது தவிரப் பாடங்களை முழுமையாக ஓரிரு முறை வாசித்திருப்பதும் மறைமுகக் கேள்விகளை அடையாளம் காண உதவும். ஆண்டுகள், இடங்கள், திட்டங்கள் (பொருளியல்), புள்ளி விவரங்கள் போன்றவற்றைத் தனியாகத் தொகுத்து வைத்துக்கொண்டு திருப்புதல் செய்வதும் உள் வினாக்களை எதிர்கொள்ள உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x