Published : 19 Feb 2019 10:41 AM
Last Updated : 19 Feb 2019 10:41 AM

காந்தி 150: திரையில் காந்தி

காந்தியைப் பற்றி ஆங்கிலத்திலும் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவரைப் போலவே அவரைப் பற்றிய படங்கள் பலவும் உலகப் புகழ்பெற்றவை. காந்தி, அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றியும் காந்தியை ஒரு கதாபாத்திரமாக உள்ளடக்கியும் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் முக்கியமானவற்றின் தொகுப்பு:

Nine Hours to Rama (1963)

பிரித்தானியத் தயாரிப்பான இந்தத் திரைப்படத்தில் காந்தி ஒரு கதாபாத்திரமாக வருகிறார். காந்தியை நாதுராம் கோட்ஸே சுட்டுக் கொல்வது தொடர்பான முடிவை எடுக்க வைத்த கோட்ஸேவினுடைய வாழ்க்கையின் ஒன்பது மணி நேரத்தை ஒட்டி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் கனடாவைச் சேர்ந்த மார்க் ராப்ஸன். அமெரிக்க வரலாற்றாசிரியர் ஸ்டான்லி வால்பர்ட் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

Gandhi (1982)

காந்தியைப் பற்றிய திரைப்படம் என்று சொன்னவுடன் உடனடியாக நினைவுக்குவரக்கூடியது இங்கிலாந்தின் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய இந்தப் படம்தான். பிரிட்டன்-இந்தியக் கூட்டுத் தயாரிப்பான இந்தப் படத்தில் பென் கிங்ஸ்லி காந்தியாக நடித்திருந்தார். சிறந்த படம், நடிகர், இயக்குநர் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்ற இந்தப் படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

gandhi-3jpg

The Making of the Mahatma(1996)

இந்திய விடுதலைப் போராட்டத்தைக் கையிலெடுப்பதற்கு முன் ஒரு வருடப் பணி ஒப்பந்தத்தில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற காந்தி அங்கு ஐரோப்பிய காலனி அரசுகளால் ஒடுக்கப்பட்ட இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். மகாத்மா என்று போற்றப்படும் அளவுக்கு காந்தியைச் செதுக்கியவை தென்னாப்பிரிக்காவில் அவர் வாழ்ந்த 21 ஆண்டுகள்தாம். இதை வைத்து ஃபாத்திமா மிர் எழுதிய நூல் ‘The Apprenticeship of a Mahatma’. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு ஷ்யாம் பெனகல் இயக்கிய இந்தப் படம் இந்தோ-தென்னாப்பிரிக்கக் கூட்டுத் தயாரிப்பு.

ஹே ராம் (2000)

நடிகர் கமல்ஹாசன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, தயாரித்து, இயக்கிய இந்தத் திரைப்படம் காந்தியைப் பற்றிய தமிழ் சினிமாவின் முக்கியமான தடங்களில் ஒன்று. தேசப் பிரிவினையின்போது வெடித்த மத வன்முறைக்குத் தன் மனைவியைப் பறிகொடுத்த சாகேத் ராமன் என்ற புனைவுக் கதாபாத்திரத்தின் வழியே காந்தியைக் கொன்றவர்கள் யார், அவர்களது சித்தாந்தம் என்ன என்பதைத் துணிச்சலாகவும் படைப்புரீதியிலும் விவரித்த திரைப்படம். தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படத்தில் நசீரூதின் ஷா, ஷாருக் கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி உள்ளிட்ட இந்தி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

லகே ரஹோ முன்னாபாய் (2006)

‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.’ என்ற இந்திப் படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படத்தில் காந்தியின் ஆத்மாவால் ஆட்கொள்ளப்படும் ரவுடியான முன்னாபாய் அகிம்சை, அமைதி, சுத்தம் போன்ற காந்தியக் கொள்கைகளை வலியுறுத்துகிறார். வணிகரீதியாகப் பெரும் வெற்றியைப் பெற்றதுடன், காந்தியக் கொள்கைகளின் சமகாலப் பொருத்தத்தை வெகுஜன சினிமா சட்டகத்துக்குள் இருந்து விளக்கியதற்காகப் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி.

Gandhi My Father (2007)

உலகம் போற்றும் தலைவரான காந்தி ஒரு நல்ல குடும்பத் தலைவராக இருக்கவில்லை என்பது பல காந்தியவாதிகளே ஏற்றுக்கொள்ளும் உண்மை. மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கும் அவருடைய மூத்த மகன் ஹரிலால் காந்திக்கும் இடையிலான பிணக்குகள் நிறைந்த உறவை விவரித்த இந்தப் படம், சந்துலால் பாகுபாய் தலால் என்பவர் எழுதிய ஹரிலாலின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. பாலிவுட் நடிகர் அனில் கபூர் தயாரித்த இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது.

gandhi-2jpgright

Gandhi To Hitler (2011)

இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் ராகேஷ் ரஞ்சன் குமார். ‘Dear Friend Hitler’ என்ற தலைப்பில் இந்தியாவில் வெளியானது. சர்வதேச ஊடகங்களில் எதிர்மறையான விமர்சனத்தையே பெற்றாலும், காந்தியின் வாழ்க்கையில் அதிகம் அறியப்படாத பக்கங்களைப் பேசியதால், இது முக்கியமான படமாகக் கருதப்படுகிறது.

Welcome Back Gandhi (2014)

காமராஜரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கிய ஏ.பாலகிருஷ்ணன் சமகாலத் தமிழகத்தில் காந்தி வாழ்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையின் அடிப்படையில் இயக்கிய திரைப்படம் இது. எஸ்.கனகராஜ் என்பவர் காந்தியாகவும், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் தமிழக முதல்வராகவும் நடித்திருந்த இந்தப் படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x