Last Updated : 15 Jan, 2019 10:06 AM

 

Published : 15 Jan 2019 10:06 AM
Last Updated : 15 Jan 2019 10:06 AM

தேர்வுக்குத் தயாரா? - வீடியோவில் இருந்தும் குறிப்பெடுக்கலாம்! (பிளஸ் 2 உயிரியல் )

பொதுத் தேர்வுக்குத் தயாராகும்போதே நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்புகளையும் மேற்கொள்ளுதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு நல்லது. அந்த வகையில், தாவரவியல், விலங்கியல் பாடங்களை உள்ளடக்கிய உயிரியலுக்கான வழிகாட்டுதல் இதோ:

”பொதுத் தேர்வுக்கான பாடங்களில் ஒன்றாக நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பையும் சேர்த்துக்கொள்வதும் அதற்காக அன்றாடம் ஓரிரு மணி நேரம் ஒதுக்குவதும் அவசியம்” என்கிறார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியை போ.ப்ரீவா.

“பாடங்களைப் புரிந்து படிப்பதுடன் ஒவ்வொரு வினாவில் இருந்தும் கேட்கப்பட்ட வாய்ப்புள்ள வேறு வினாக்களை அடையாளம் காண்பது 2 தேர்வுகளுக்கும் உதவும். பாடம் முழுமைக்கும் வாசித்து முக்கியக் குறிப்புகளை மனவரைபடமாகவோ சிறு குறிப்புகளாகவோ புரியும் வகையில் எழுதி வைத்துக்கொள்வது நல்லது. அத்துடன் அந்தக் குறிப்புகளில் இருந்து கேட்கப்பட்ட வாய்ப்புள்ள வினாக்களையும் அதனருகிலேயே குறித்துக்கொள்வது அவசியம்.

தினசரி நுழைவுத் தேர்வுக்காக ஒதுக்கும் நேரத்தைப் படிக்கவும், எழுதவுமாகச் சரி பாதியாகப் பிரித்துக்கொள்ளலாம். எழுதிப் பார்ப்பதில் முந்தைய வருட, மாதிரி வினாத்தாள்களின் பயிற்சியைச் சேர்த்துக்கொள்ளலாம். நுழைவுத் தேர்வுக்கான வினாக்கள், பொதுத் தேர்வின் தயாரிக்கப்பட்ட, மறைமுக வினாக்களை எதிர்கொள்ள உதவும்.

அதேநேரம் முந்தைய நுழைவுத் தேர்வுகளில் ஒருமுறை கேட்கப்பட்ட வினாக்கள் அப்படியே அடுத்த முறை இடம்பெறுவது அரிது. ஆனால், ஒரு வினாவை எப்படியெல்லாம் நுட்பமாகக் கேட்பார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

thervu-2jpgபோ.ப்ரீவா.right

முக்கியப் பாடத் தலைப்புகள்

‘நீட்’ நுழைவுத் தேர்வு நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தனியாகப் படிப்பது நல்லது. அந்த வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 என இரு பாடநூல்களும் அவசியமாகின்றன. மனித உடற்செயலியல், உடல் அமைப்பு, செயலியல், விலங்கு, தாவர வகைப்பாடு, இனப்பெருக்கம், சூழலியல் உள்ளிட்ட பாடத் தலைப்புகள் முக்கியமானவை. உயிர் மூலக்கூறுகள் என்ற தலைப்பு உயிரியல் மற்றும் வேதியியல் என 2 பாடங்களிலும் உள்ளதால் அவற்றை ஒப்பிட்டுப் படிப்பது அவசியம்.

உயிரி-விலங்கியலில் இல்லாத அறிவியல் தனிப் பிரிவு விலங்கியலில் இருக்கும் முக்கியப் பாடத் தலைப்புகளையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம். பொதுத் தேர்வு, நுழைவுத் தேர்வு என இரண்டுக்கும் போதிய நேரம் ஒதுக்க இயலாமல் தடுமாறும் மாணவர்கள் பின்வரும் அணுகுமுறையைப் பரிசீலிக்கலாம். இரண்டிலும் பொதுவான தலைப்புகளைக் கண்டறிந்து பொதுத் தேர்வுக்கான தயாரிப்பில் அவற்றை மட்டும் சேர்த்துக்கொள்வதும், இதர தலைப்புகளைப் பொதுத் தேர்வு முடிந்த பின்னர் கவனம் செலுத்துவதும் இவர்களுக்கு உதவும்.

எஸ்.சி.இ.ஆர்.டி (www.tnscert.org) இணைய தளத்தில் பல்வேறு பாடத் தலைப்புகளும் காணொலிகளாக உள்ளன. புத்தக வாசிப்புக்கு அப்பால் இந்தக் காணொலிகளைக் கவனிப்பதுடன் அவற்றிலிருந்து குறிப்பெடுத்துத் திருப்புதல் மேற்கொள்வது, 2 தேர்வுகளுக்கும் உதவும்.

அதேபோல என்.சி.இ.ஆர்.டி பாட நூல்களை வாங்கிப் புதிதாகப் படிப்பதைவிட யூடியூபில் பாடவாரியாகக் கிடைக்கும் ஏராளமான அனிமேஷன் வீடியோக்களில் இருந்து குறிப்பெடுத்துப் படிப்பது நடைமுறையில் பயனளிக்கும். பொதுத் தேர்வுக்கான பாடத்தலைப்புகளில் கடினமானவற்றைக்கூட இதே வகையில் அணுகலாம்” என்றார் ஆசிரியர் ப்ரீவா.

தாவரவியலைத் தொடர்புபடுத்திப் படியுங்கள்

“நுழைவுத் தேர்வுக்கான 4 பாடங்களில், இதர மூன்றைவிட ஒப்பீட்டளவில் தாவரவியல் பாடம் கடினத் தன்மை குறைவாக இருக்கும்” என்று நம்பிக்கையூட்டுகிறார் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தாவரவியல் ஆசிரியை எஸ்.மலர் விழி.

“பொதுத் தேர்வில் ‘என்றால் என்ன, வேறுபடுத்துக, வரையறுக்க’ என்பதாக இடம்பெறும் வினாக்கள், நுழைவுத் தேர்வில் வரையறை அல்லது படம் கொடுத்து அதிலிருந்து கேட்கப்படும் நடைமுறை சார்ந்த வினாக்களாக இடம்பெறும். எனவே, பொதுத் தேர்வுக்குப் படிக்கும்போது இந்த வாய்ப்புகளையும் உணர்ந்து படிக்க வேண்டும். படம் வரைந்து பாகம் குறிப்பது பொதுத் தேர்வுக்குப் போதும்.

ஆனால், ‘நீட்’டில் பாடம், பாகங்களுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்து படிப்பது அவசியம். தாவரவியலில் ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் போன்றவற்றை ஒப்பிட்டுப் படிப்பது, ‘நீட்’டில் கணக்கீடாக இடம்பெறும். வரையறைகளைப் பிற பாடங்களில் உள்ள ஒத்தக் கருத்துகளுடன் தொடர்புபடுத்தியும் படிக்கலாம்.தேர்வுக்குத் தயாரா? பொது நுழைவுத் தேர்வு - பிளஸ் 2 உயிரியல்போ.ப்ரீவாமுக்கியப் பாடத் தலைப்புகள்

 

thervu-3jpgஎஸ்.மலர் விழி.

முக்கியப் பாடத் தலைப்புகள்

தாவரச் செயலியல், சூழலியல் பாடங்களில் இருந்து நீட் தேர்வுக்கான வினாக்கள் அதிகம் இடம்பெறும். அடுத்து மரபியல், உயிரித் தொழில்நுட்பவியல், உயிரி உலகின் பன்முகத் தன்மை, புற அமைப்பியல் போன்ற பாடங்கள் முக்கியமானவை. இவற்றில் சூழலியல் பாடத்துக்கு என்.சி.ஆர்.டி. புத்தகங்களை அணுகுவது நல்லது.

மனிதவள மேம்பாட்டில் உயிரியல், செல் உயிரியல் பாடங்களில் இருந்தும் கணிசமான வினாக்களை எதிர்பார்க்கலாம்” என்றார் எஸ்.மலர் விழி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x