Last Updated : 15 Jan, 2019 10:06 AM

 

Published : 15 Jan 2019 10:06 AM
Last Updated : 15 Jan 2019 10:06 AM

இந்தியாவின் ‘முதல்’ வெற்றிகள்

ஆஸ்திரேலிய மண்ணில் எழுபத்தியொரு ஆண்டு கால காத்திருத்தலுக்கு விடை கொடுத்திருக்கிறது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரில் முதன்முதலாக வெற்றி பெற்று புதிய அத்தியாயத்தைப் படைத்திருக்கிறது. அந்நிய மண்ணில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சில வரலாற்று பதிவுகள்:

> டெஸ்ட் விளையாட 1932-ல் அங்கீகாரம் பெற்ற இந்திய அணி முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் 1947-48-ல்தான் விளையாடியது.

> இதுவரை 12 முறை ஆஸ்திரேலியா சென்றிருக்கிற இந்திய அணி, 8 முறை (1947-48, 1967-68, 1977-78, 1991-92, 1999-2000, 2007-08, 2011-2012, 2014-15) ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

> இந்திய கிரிக்கெட் அணி 3 முறை (1980-81, 1985-86, 2003-04) தொடரை சமன் செய்திருக்கிறது. இந்த முறைதான் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுகாட்டியிருக்கிறது.

> இந்திய டெஸ்ட் அணி 1977-ல் தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 222 ரன்கள் வித்தி யாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

> ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல 71 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இந்தியா, மற்ற நாடுகளில் இவ்வளவு காலத்தை எடுத்துக்கொள்ளவில்லை.

> இந்தியாவின் முதல் அந்நிய மண் டெஸ்ட் தொடர் வெற்றி நியூசிலாந்தில்தான் கிடைத்தது. 1968-ல் மன்சூரலிகான் பட்டோடி தலைமையிலான இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. இதன்பிறகு கடந்த 50 ஆண்டுகளில் நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லவே இல்லை.

> நியூசிலாந்தைத் தொடர்ந்து அடுத்த டெஸ்ட் தொடர் வெற்றி வெஸ்ட்இண்டீஸில் கிடைத்தது. 1971-ல் வென்ஸ்ட்இண்டீஸில் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

> அதே 1971-ல் இன்னொரு சிறப்பான, தரமான சம்பவம் இந்திய கிரிக்கெட்டில் நடந்தது. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை இந்தியா பதிவு செய்தது. வடேகர் தலைமையிலான இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

> இந்த நாடுகளைத் தவிர இந்திய துணைக்கண்டத்தில் உள்ள பிற அணிகளுடனும், வெளிநாட்டு அணிகளுடனும் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருக்கிறது. இதன்படி இலங்கை (1993), வங்கதேசம் (2000), பாகிஸ்தான் (2004), ஜிம்பாப்வே (2005) ஆகிய நாடுகளுக்கு எதிராக வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றிருக்கிறது.

> தென் ஆப்பிரிக்காவில் 1992 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் இந்திய அணி, இதுவரை ஒரு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x