Last Updated : 08 Jan, 2019 10:47 AM

 

Published : 08 Jan 2019 10:47 AM
Last Updated : 08 Jan 2019 10:47 AM

தேர்வுக்குத் தயாரா? - பொதுத் தேர்வு+நுழைவுத் தேர்வு: ஒரு சேரத் தயாராகலாம்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களில் கணிசமானோர் கூடுதலாக ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத் தகுதித் தேர்வுகளுக்கும் தயாராக வேண்டியுள்ளது. இதற்காக அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தனிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருகின்றன.

மாணவர்களின் இந்த இரட்டை நெருக்கடியைத் தணிக்க, இப்போதிருந்தே 2 தேர்வுகளுக்கும் ஒரு சேரத் தயாராவது உதவும். அந்த நோக்கில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான பாடங்களைப் படிக்கும்போதே, அதில் பொது நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்பையும் சேர்ப்பதற்கான ஆலோசனைகளை இங்கே பார்ப்போம்.

வேண்டாமே மனப்பாடம்

பொது நுழைவுத் தேர்வுகளை உத்தேசித்தே, பொதுத் தேர்வுக்கான புதிய வினாத்தாள் மாதிரியில் புளூ பிரிண்ட் அடிப்படைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, மனப்பாடம் செய்யும் முறைக்கு மாற்றாகப் புரிந்துகொண்டு படிப்பதும், உயர் நிலைச் சிந்தனை, ‘ரீஸனிங்’ எனப்படும் காரண காரியம் அடிப்படையிலான கற்றலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

சொந்தமாகக் குறிப்புகள் எடுத்து வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் தேர்வுக்குப் படிப்பதும் திருப்புதல் மேற்கொள்வதும் 2 தேர்வுகளுக்கும் ஒரு சேர உதவும். அதுபோன்றே, மனவரைபடம் அடிப்படையில் புரிந்துகொள்வது குழப்பங்களைத் தவிர்க்க உதவும். குழுவாக அமர்ந்து படிப்பதும், படித்ததைப் பகிர்ந்துகொண்டு விவாதிப்பதும், ஐயங்களைப் போக்கிக்கொள்வதும் தேர்வு சிரமங்களைக் குறைக்கும்.

முக்கியமாகக் கொள்குறிவகை அடிப்படையிலான ஒவ்வொரு 1 மதிப்பெண் பகுதிக்குத் தயாராவதும் கூடுதலாக, 3 வினாக்களுக்குத் தயாராக உதவும். மேலும், 2, 3, 5 மதிப்பெண் வினாக்களுக்குப் படிக்கும்போதும் அவற்றில் அடங்கியுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை அடையாளம் காண்பதும் அவசியம்.

thervu-2jpgஎன்.வி.எஸ்.கிருஷ்ணன்

பொதுவான பாடப் பகுதிகளில் கவனம்

“பொதுத் தேர்வு, ‘நீட்’ தேர்வில் இடம்பெற வாய்ப்புள்ள பொதுவான பாடப்பகுதிகளை ஆசிரியர் அல்லது வழிகாட்டி உதவியுடன் அடையாளங்கண்டு அவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்” என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம் பாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியரான என்.வி.எஸ்.கிருஷ்ணன்.

“உதாரணத்துக்கு மோல் கொள்கை, கரிம வேதி வினைகள், தனிம வரிசை அட்டவணை, வேதிப்பிணைப்பு, அணைவுச் சேர்மங்கள், மின்வேதியியல், சமநிலை உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம்.

பாடக் குறிப்புகள் எடுக்கும்போது சுருக்கமான, விரிவான என 2 விதமாக அவற்றை மேற்கொண்டால், 2 தேர்வுகளுக்குமான வேகமான திருப்புதலுக்கு அவை உதவும். பாடங்களை முதல் முயற்சியிலேயே ஆழ்ந்து படிப்பதும் புரிந்துகொள்வதும் பொதுத் தேர்வுக்கு அப்பால் எந்தவொரு நுழைவுத் தேர்வையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும்” என்கிறார்.

இரட்டைப் பலனுக்கு

“எந்தவொரு பாடத்தையும் அதன் உட்பிரிவுகள் அனைத்தையும் ஒரு ஒழுங்கின்கீழ் வரிசைப்படுத்தி, அதன் அடிப்படையில் படித்துப் புரிந்துகொள்வது குழப்பங்களைத் தவிர்த்துத் தெளிவாக நினைவில் கொள்ள உதவும்” என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியரான

“பாடப் பொருள் சார்ந்த அவசியமான குறிப்புகளுடன், சமன்பாடுகள், வாய்ப்பாடுகள், மாறிலிகள் உள்ளிட்டவற்றையும் ஒரு குறிப்பேட்டில் வரிசையாக எழுதிக்கொள்ள வேண்டும். பிறகு சமன்பாடுகள் கூறும் உண்மைகள், தொடர்கள் ஆகியவற்றை வேறு மையினால் சமன்பாடுகளுக்கு எதிரே அல்லது பக்கத்தில் வரிசைப்படுத்தலாம். சோதனை விளக்கங்கள், கொள்கை விளக்கங்கள் அடங்கிய பாடப்பகுதிக்கு அதற்கான படங்களை வரைவதன் மூலம் முக்கியமான பகுதிகளையும் பிரிவுகளுக்கும் ரீஸனிங் தருவது எளிதாகும்.

thervu-3jpgவெ.ஸ்ரீதரன்.right

விளக்கப் பாடங்களாக இருப்பின் முக்கியச் சொற்றொடர்களை அடிக்கோடிடுவதும் நினைவுகூரலுக்கு உதவும். பாடத்தில் உள்ள விதிகள், ஒற்றுமை வேற்றுமைகளை இவ்வாறே தனியாகப் பட்டியலிடலாம். கணக்கீடுகளைப் பொறுத்தவரை எடுத்துக்காட்டுகளில் தொடங்கிப் பயிற்சிக் கணக்குகளைத் தீர்க்கப் பழக வேண்டும். கணக்குகளில் அலகுகள் தவறக் கூடாது.

ஒரு பாடக்கருத்து வேறு சில பாடங்களில் அடங்கியிருப்பதையும் குறித்துக்கொள்ளலாம். பொதுத் தேர்வுக்கான மாதிரித் தேர்வுகளில் விரைவாகப் பதிலளித்துப் பழகுவது நுழைவுத் தேர்வு நேர மேலாண்மைக்கும் உதவும்.

 நுழைவுத் தேர்வுக்கு என ஆன்லைனில் கிடைக்கும் மாதிரித் தேர்வுகள், காணொலிகள் ஆகியவை பொதுத் தேர்வுக்கான பாடக்கருத்துகளை விசாலமாகப் புரிந்துகொள்ள உதவும். இவ்வாறு பயிற்சி, முயற்சிகளைத் தொடர்ந்தால் இரட்டைப் பலன் உறுதி” என்றார் ஆசிரியர் வெ.ஸ்ரீதரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x