Last Updated : 01 Jan, 2019 11:25 AM

 

Published : 01 Jan 2019 11:25 AM
Last Updated : 01 Jan 2019 11:25 AM

தேர்வுக்குத் தயாரா? - பொருளறிந்து படித்தால் உயர் மதிப்பெண் உறுதி (பிளஸ் 2-பொருளியல்)

அறிவியல் சாராத கலைப் படிப்புகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளியல் உயர்கல்விக்குச் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பிளஸ் 2-வில் படிக்கும் பொருளாதாரத்தின் அடிப்படைகள் மதிப்பெண்களுக்கு அப்பால் உயர்கல்விக்கும் வாழ்க்கைக்கும் உதவும்.

புளு பிரிண்ட் அற்ற தேர்வு முறையால், அனைத்துப் பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு படிப்பதைப் பொருளறிந்து படிப்பது மதிப்பெண்களை வாரித் தரும். மாணவர்கள் செலவிடும் உழைப்புக்கேற்ற மதிப்பெண்கள், பொருளியலில் நிச்சயம் உண்டு.  

வினாத்தாள் அமைப்பு

பொருளியல் வினாத்தாள் 90 மதிப்பெண்களுக்கானது. ஒரு மதிப்பெண் பகுதி 20 வினாக்களுடனும் 2, 3 மதிப்பெண் பகுதி தலா 10 வினாக்களில் இருந்து தலா 7-க்கு பதிலளிப்பதாகவும் அமைந்திருக்கும். 2, 3 மதிப்பெண் பகுதிகளில் தலா ஒரு கட்டாய வினா உண்டு. ‘அல்லது’ வகையிலான 7 வினாக்கள் 5 மதிப்பெண் பகுதியில் அமைந்திருக்கும். 80 சதவீத வினாக்கள் புத்தகத்தின் பின்பகுதி வினாக்களில் இருந்தே கேட்கப்படும். 20 சதவீத வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படும்.

1 மதிப்பெண்

ஒரு மதிப்பெண் பகுதியின் 20 வினாக்களில் 16, புத்தகத்தின் 240 வினாக்களில் இருந்தே கேட்கப்படும். மொத்தமுள்ள 12 பாடங்களில் தலா ஒரு வினாவாகவும், 16-ல் எஞ்சிய 4 வினாக்களை 3, 4, 7, 8, 10 ஆகிய பாடங்களில் இருந்தும் எதிர்பார்க்கலாம். இதர 4 வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்படும். ‘தேவை, அளிப்பு, செலவு, வருவாய்’ ஆகிய 4 தலைப்பிலான வகைகளின் சூத்திரங்கள், அவை பயன்படுத்தும் கணித வினாக்களாகவும் அமையலாம். அறிஞர்களின் பெயர்கள் அதிகமாக உள்ள 1, 9 பாட வினாக்களுக்குப் பதில் அளிக்கையில் பெயர்களை மாற்றி எழுதுவது அதிகம் நடக்கிறது. இதைக் கவனத்தில்கொண்டு எச்சரிக்கையாகப் பதில் அளிப்பது அவசியம்.

thervu-2jpgபாடக் குறிப்புகள் வழங்கியவர்: ஆர்.ரமேஷ், முதுநிலை ஆசிரியர் (பொருளியல்), காந்தி மேல்நிலைப்பள்ளி, திருச்சிற்றம்பலம், விழுப்புரம் மாவட்டம்.

2 மதிப்பெண்

2 மதிப்பெண் பகுதி எளிமையானது. இவை பெரும்பாலும் புத்தகப் பின்பகுதியில் உள்ள 60 வினாக்களில் இருந்தே கேட்கப்படும். இந்த 60-ல் 21 வினாக்கள் 3 வார்த்தைகளிலும், 20 வினாக்கள் 2 வரிகளிலும் சுலபமாகப் பதிலளிக்கும்படி உள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் இடம்பெற்றுள்ள ‘குறுகிய மற்றும் நீண்ட காலம் குறிப்பு வரைக, வாய்ப்புச் செலவு, நீர்மை விருப்பத்திற்கான 3 கோட்பாடு’ ஆகியவை தொடர்பான 3 வினாக்களில் ஏதேனும் ஒன்று அதிகம் கேட்கப்பட வாய்ப்புள்ளது. கட்டாய வினா (வினா எண். 30) எந்தப் பாடத்தில் இருந்தும் கேட்கப்படலாம்.

3 மதிப்பெண்

‘நன்மைகள், தீமைகள், வகைகள், பணிகள், முறைகள்’ ஆகியவை அடிப்படையிலான வினாக்கள் இந்தப் பகுதியில் அதிகம் இடம்பெறும். ‘பாயிண்ட்’களாக விடையளிப்பது முழு மதிப்பெண் தரும். 10-ல் 4 வினாக்கள் 2, 6, 7, 8, 10, 12 ஆகிய பாடங்களில் இருந்தே கேட்கப்பட வாய்ப்புள்ளது. அதிலும் 10, 12 பாட வினாக்கள் எளிமையானவை. கட்டாய வினா (வினா எண்.40) புரிதலின் அடிப்படையிலான வினாவாக அமைய அதிக வாய்ப்புண்டு. முழு மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் கட்டாய வினாவில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

5 மதிப்பெண்

பொருளாதார விதிகள் அடங்கிய 3, 4 ஆகிய பாடங்களில் இருந்து தலா ஒரு வினா இடம்பெற வாய்ப்புண்டு. ‘அல்லது’ வினாக்களில் 2 வினாக்களும் இடம்பெற வாய்ப்புள்ள 3, 8 பாடங்களில் கவனம் செலுத்துவது நல்லது. 7-வது பாடம் 3, 5 மதிப்பெண்களுக்கு முக்கியமானது. முந்தைய வினாத்தாள் மாதிரியின் 20 மதிப்பெண் வினாக்கள் இம்முறை 5 மதிப்பெண் பகுதியில் கேட்கப்படுவதால், விடைகளைச் சுருக்கமாகவும் செறிவாகவும் எழுதுவது அவசியம்.

முழு மதிப்பெண்ணுக்கு

‘சாய்ஸ்’ வினாக்களில் அனைத்துக்குமே பதில் தெரிந்தால், அவற்றில் எளிமையானவற்றைத் தேர்ந்தெடுத்து விடையளிப்பது நல்லது. அட்டவணைகளைவிடத் துணைத் தலைப்புகள் கொண்ட வினாக்கள் எழுத எளிமையானவை. அட்டவணை வினாக்களுக்குப் பதிலளிப்பதானால், அவற்றில் துல்லியமாகத் தீர்க்க முடிந்ததைக் கண்டறிந்து எழுதுவது அவசியம்.

இதற்குத் தேர்வின் தொடக்கத்தில் ஒதுக்கப்படும் வினாத்தாள் வாசிப்பதற்கான 10 நிமிடங்கள் உதவும். ஒரு மதிப்பெண் பகுதியில் அவசரத்தில் தவறாக விடையளிப்பது, ஒரு வினாவுக்கு முழுமையாக விடையளித்ததை உறுதிசெய்யாமல் அடுத்த வினாவுக்குப் பறப்பது ஆகியவை மதிப்பெண் சரிவைத் தரும்.

தேர்வறைக் கவனக் குறிப்புகள்

விடைத்தாளைத் தனித்து அடையாளம் காட்டும் வகையில் எந்தச் செயலையும் மேற்கொள்ளக் கூடாது. அதிகமாக அடிக்கோடிடுவது, அலங்கரிப்பதைத் தவிர்க்கலாம். கறுப்பு, நீலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மைப் பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். ஒரு மதிப்பெண் பகுதியில் வினா எண்ணைக் குறிப்பிட்டு உரிய ‘ஆப்ஷன்’ உடன் விடையை எழுதினால் மட்டுமே மதிப்பெண் கிடைக்கும்.

 

நேர மேலாண்மை

1 மதிப்பெண் பகுதிக்கு 15, 2 மதிப்பெண்களுக்கு 15, 3 மதிப்பெண்களுக்கு 40, 5 மதிப்பெண்களுக்கு 70 என நிமிடங்களைப் பிரித்து ஒதுக்கினால், எஞ்சிய 10 நிமிடங்கள் சரி பார்த்தலுக்கு உதவும்.

 

தேர்ச்சி நிச்சயம்

புத்தகப் பின்பகுதியின் 240 ஒரு மதிப்பெண் வினாக்களில் இருந்து, 15 மதிப்பெண்கள் வரை எடுப்பது எளிது. இதேபோல 2 மதிப்பெண் பகுதிக்கு 2, 5, 6, 7 பாடங்களின் 18 வினாக்களில் நான்கும் 3 மதிப்பெண் பகுதிக்கு 2, 7, 10, 12 பாடங்களின் 20 வினாக்களில் இருந்து நான்கும் 5 மதிப்பெண் பகுதிக்கு 3, 4 பாடங்களின் 7 வினாக்களில் இரண்டுமாக வினாக்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இவற்றைப் படித்ததும் 5 மதிப்பெண்களில் 8, 11 பாடங்களின் 11 வினாக்களில் இருந்து 3 வினாக்களுக்கும் தயாராகலாம். தேர்ச்சிக்கு 25 மதிப்பெண்கள் போதுமென்றாலும், இவ்வாறு தயாராகும் 60 மதிப்பெண்களில் எப்படியும் 50 மதிப்பெண்களை உறுதி செய்யலாம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x