Last Updated : 18 Dec, 2018 10:54 AM

 

Published : 18 Dec 2018 10:54 AM
Last Updated : 18 Dec 2018 10:54 AM

தொழில் புரட்சி 4.0 : இந்திய இளைஞர்கள் தயாரா?

சில வருடங்களுக்கு முன்னர் கற்பனைகூடச் செய்துபார்த்திருக்க முடியாத அளவுக்கான வேலைவாய்ப்புகள் இப்போது உருவாகி உள்ளன.

காலை 9 மணியில் இருந்து மாலை 5 வரை ஒரே அலுவலகத்தில் 20-மேலும் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தோம், ஓய்வுபெற்றோம், பின்னர் அதன் பலனை ஆசுவாசமாக அனுபவித்தோம் என்ற முறையே மறைந்துவருகிறது. டிஜிட்டல் மயமாதலும் தானியங்கலும் (automation) பணி உலகின் உள்கட்டமைப்பையே தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கின்றன.

இந்நிலையில், வேலைவாய்ப்பு, கல்வித் தளத்தில் இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த ‘இந்தியா ஸ்கில்ஸ் அறிக்கை 2019’ என்ற 56 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை அண்மையில் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 50 ஆயிரம் பேரிடமும் 100-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சர்வதேசத் திறன் மதிப்பீட்டு நிறுவனமான Wheebox, மனிதவளத் தொழில்நுட்ப நிறுவனமான PeopleStrong , இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) ஆகியவை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (யு.என்.டி.பி.), அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.), இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (ஏ.ஐ.யு.) உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தி இருக்கின்றன.

புதிய பணி யுகம்

புத்தாண்டில் வேலைவாய்ப்புச் சந்தையில் முக்கியத்துவம் பெறப்போகும் படிப்புகள், எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்போகிறது, ஆண்/பெண் பணியாளர்களின் விகிதாச்சாரம் ஆகியவை இந்த அறிக்கையில் அலசப்பட்டுள்ளன.

புதிய பணி யுகத்தின் ஜனனம் எப்படிப்பட்டது என்பதை ‘Talent Reboot: Jobs & Skills Catching Up With Changing Businesses’ என்ற அத்தியாயம் சுட்டிக்காட்டுகிறது. நிதி சேவை, உற்பத்தி, போக்குவரத் துறை, கப்பல் வாணிபம், பேக்கேஜிங் போன்ற பரிவர்த்தனை தொடர்பான துறைகளில் கிட்டத்தட்ட 40-50 சதவீதம் வரை தானியங்கல் நடைபெற்றிருக்கிறது.

இதனால் டேட்டா எண்ட்ரி பணியாளர், காசாளர், நிதி ஆலோசகர், தொலைவிளம்பரதாரர் (telemarketer), வாடிக்கையாளர் சேவை ஊழியர், தொழிற்சாலைப் பணியாளர், கணினித் துணை நிபுணர், இயந்திரம் ஏதுமின்றிப் பணிபுரிபவர், சில்லறை விற்பனையாளர், விளம்பர விற்பனையாளர் ஆகியோர் பணிபுரியும் முறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால் அவர்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர் என்கிறது இந்த ஆய்வறிக்கை.

திறனைப் புதிப்பித்தல்

இதுவரை பொதுவான மென்பொருள் திறன்களை மட்டுமே அடிப்படைத் தகுதியாக வைத்து வேலைக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துவந்த ஐ.டி. நிறுவனங்கள் இனி ‘இண்டர்நெட் ஆஃப் திங்கஸ்’, ‘செயற்கை நுண்ணறிவு நுட்பம்’, ‘மெய்நிகர் மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டி’ உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பத்தில் திறன்வாய்ந்தவர்களை மட்டுமே நாடும் என்கிறது. இந்தப் போக்கில் வங்கித் துறையும் சில்லறை வியாபாரப் பிரிவுகளும் அடங்குமாம்.

thozil-1jpg

இதில் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்திருப்பது, புதிய ஓட்டத்துக்குத் தோதாக ஏற்கெனவே பணிபுரியும் ஊழியர்களின் திறனைப் புதுப்பித்தல் (reskilling) என்பது. இதற்கான நடவடிக்கைகளைக் கடந்த ஆறாண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்துவருவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஏடி அண்டு டி (AT&T) தன்னுடைய ஊழியர்களின் திறனை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.20 கோடி செலவிடுவதாக இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இதில் உதாரணம் காட்ட ஒரு இந்திய நிறுவனம்கூட இல்லை என்பதுதான் நிதர்சனம் என்கிறார் மனிதவள நிபுணர் டாக்டர் ஆர். கார்த்திகேயன்.

மொரிஷியசிடம் கற்போம்!

“பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பே தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளம் சிறப்பாகப் போடப்பட்டுவிட்டது. ஆனால், அண்மைக்காலமாக நிகழ்ந்துவரும் அதிவேக மாற்றங்களை எதிர்கொள்வதற்குப் போதுமான பணிகள் இங்கு முன்னெடுக்கப்படவில்லை. குறுகிய காலப் பயிலரங்குகளும் அவசரகதிப் பயிற்சிகளும் சில தனியார் நிறுவனங்களால் அளிக்கப்பட்டுவருகின்றன.

ஆனால், அரசாங்கம் இதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. குறிப்பாகப் பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் எந்தப் பெரிய மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. பொறியியல் பாடங்கள் உட்படப் பெருவாரியான பட்டப்படிப்புகளில் இன்னமும் பழைய பாடத்திட்டம்தான் பயிற்றுவிக்கப்படுகிறது.

மொரிஷியஸ் போன்ற குட்டி நாட்டில்கூட அனைவருக்கும் கல்வி அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. டிஜிட்டலைசேஷன், ஆட்டோமேஷன் ஆகியவற்றுக்குத் தங்களுடைய தொழிலாளர்களைத் தகவமைக்கும் பொறுப்பை அந்நாட்டு அரசே முழுக்க ஏற்றுச் செயலாற்றிவருகிறது. தனியார் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வேலை ஆட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதாக மட்டும் அவர்கள் இந்தப் போக்கை அணுகவில்லை. தங்கள் தேசத்து மக்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று கருதுகிறார்கள்” என்கிறார் கார்த்திகேயன்.

வடிவமைப்பாளர்களுக்கு மவுசு

‘India Hiring Intent -2019’ என்ற அத்தியாயத்தில் எந்தெந்தத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உள்ளன, அதற்கு உரிய கல்வித் தகுதிகள் ஆகியவை அலசப்பட்டுள்ளன. கடந்த இரண்டாண்டு களைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் பணியமர்த்தும் நடவடிக்கைகளை மென்பொருள் நிறுவனங்கள் செய்யப்போகின்றன என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனலட்டிக்ஸ், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் 15-20 சதவீதம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

குறிப்பாக, டிஜிட்டல் மயமாக்கத்தால் சுற்றுலாத் துறை, மொபைல் போன் துறை, விருந்தோம்பல் துறை (hospitality) ஆகியவற்றுக்கான செயலிகளை வடிவமைத்தல், இணையதளங்களை உருவாக்குதல், மென்பொருள்களைக் கட்டமைத்தல் உள்ளிட்ட புதிய பணிகளில் ஈடுபட வேண்டிவந்திருக்கிறது. இதனால் கணிசமான எண்ணிக்கையில் டிஜிட்டல் வடிவமைப்பாளர்கள் தேவைப்படுவார்கள்.

மற்றபடி இந்தப் பணிகளுக்கு 45 சதவீதம்வரை பொறியியல் மற்றும் பொதுப் படிப்புகள் படித்தவர்களே தேர்வுசெய்யப்படுவார்கள். அதேநேரத்தில் முன்பைக்காட்டிலும் மேலாண்மைத் துறைப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும். பாலிடெக்னிக் படித்தவர்களுக்கோ உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளில் மட்டுமே வாய்ப்பு கணிசமாகத் தென்படுகிறது.

பெண்கள் எங்கே?

பெண்களுக்கான பணிவாய்ப்பை அலசும், ‘Gender Diversity Report’ என்ற அத்தியாயம் இதில் உள்ளது. தற்போது 24 சதவீதம் மட்டுமே பெண்கள் பணிபுரிவதாகவும் ஆண்களுக்கு இணையாகப் பெண்களை வரவேற்கும் தொழில் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் முதல் இடத்தில் இருப்பதாகவும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

thozhil-2jpgright

மறுபுறம் பெண்கள் பணிபுரிய விரும்பும் நகரங்களின் பட்டியலில் பெங்களூருவும் சென்னையும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஐ.டி. துறையில் பணிபுரியும் இந்தியப் பெண்கள் குறித்த துல்லியமான கணக்கெடுப்பு தொழிலாளர் நலத்துறையிடமே இல்லாத நிலையில் இத்தகைய ஆய்வுகளால் பெரிய பயனில்லை என்கிறார் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ப.பரிமளா.

“48 சதவீதம் பெண்கள் பணி உலகில் கால் பதித்தால்தான் இந்தியப் பொருளாதாரம் 10 சதவீதம்வரை வளர்ச்சி அடையும் என்கிற ஆய்வு முடிவு நெடுங்காலமாகச் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், பெருநிறுவனப் பணிகளைப் பொறுத்தமட்டில் திருமணம், குடும்பப் பொறுப்பு உள்ளிட்டவை பெண் ஊழியர்களின் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைகளாக இன்றும் நீடிக்கின்றன.

இதனால் ஆரம்ப நிலை வேலைகளில் ஆண் ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தைப் பெண் ஊழியர்கள் பெற முடிந்தாலும் குழுத் தலைவர், மேலாளர் போன்ற உயர் பதவிகளுக்குப் பெண்கள் மிக அரிதாகவே பரிந்துரைக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக அவர்களுடைய சம்பள உயர்வும் மட்டுப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மயத்தின் காரணமாக ரீஸ்கில்லிங்க் திட்டத்தை ஒரு சில நிறுவனங்கள் முன்னெடுத்தாலும் கூடுதல் பணிநேரம் ஒதுக்கக்கூடியவர்களுக்கு மட்டுமே அந்த மேம்பாட்டுப் பயிற்சிகள் கிடைக்கின்றன.

இதனால் பெர்ஃபாமன்ஸ் அப்ரைசலின்போதும் பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆக வெறும் ஆணுக்கு இணையாகப் பெண்களையும் வரவேற்கிறோம் என்று சொல்வதில் மாற்றம் நிகழ்ந்துவிடாது” என்கிறார் பரிமளா.

பணிவாய்ப்புச் சந்தையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களுக்கு மாணவர்களும் ஊழியர்களும் தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். இது ஒருபுறம் இருக்க, நான்காம் தொழில் புரட்சி என்று சொல்லும் அளவுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய மாற்றத்துக்கு ஏற்ப கல்வி அமைப்பை மேம்படுத்துவதும் தனியார் மற்றும் பொதுத் துறையில் பணிவாய்ப்பு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் உரிய பயிற்சி அளித்து, அவர்களுடைய பணியை உறுதிசெய்வதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x