Last Updated : 18 Dec, 2018 10:53 AM

 

Published : 18 Dec 2018 10:53 AM
Last Updated : 18 Dec 2018 10:53 AM

சேதி தெரியுமா: ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங் கானா, சட்டீஸ்கர், மிஸோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் டிசம்பர் 11 அன்று வெளியாயின. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது. தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிபெற்றதால், அம்மாநில முதல்வராக மீண்டும் சந்திர சேகர ராவ், டிசம்பர் 13 அன்று பதவியேற்றுக்கொண்டார்.

மிஸோரம் மாநிலத்தில் மிஸோ தேசிய முன்னணிக் கட்சி வெற்றிபெற்றது. ராஜஸ்தானில் முதல்வராக அசோக் கெஹலோத், துணை முதல்வராக சச்சின் பைலட், மத்தியப் பிரதேசத்தில் முதல்வராக கமல்நாத் ஆகியோர் பெயர்களை அறிவித்திருக்கிறது காங்கிரஸ். ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியிருக்கிறது.

seyalpadaadhajpg

மேகேதாட்டு அணை: தடைவிதிக்க முடியாது

காவிரி ஆற்றில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்குத் தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் டிசம்பர் 12 அன்று தெரிவித்தது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செயல்படாத நாடாளுமன்றவாதிகள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை என்று பிஆர்எஸ் சட்ட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்குக்கூட 90 சதவீத வருகைப்பதிவு இல்லை என்றும், இதில் அன்புமணி ராமதாஸ் மிகவும் குறைவான வருகைப் பதிவைக் (46%) கொண்ட தமிழக எம்.பி என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதில் அதிகபட்சமாகத் திருப்பூர் எம்.பி. வி. சத்யபாமா 87% வருகைப் பதிவைப் பெற்றிருக்கிறார். 

413 நீட் தேர்வு பயிற்சி மையங்கள்

தமிழக அரசு நடத்தும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் 26,000 மாணவர்கள் பதிவுசெய்துள்ளனர் என்று மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் டிசம்பர் 10 அன்று தெரிவித்திருக்கிறார். சென்ற ஆண்டு அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்குத் தேர்வானார்கள். இந்த ஆண்டு அப்படியில்லாமல் 500 மாணவர்களாவது தேர்ச்சியடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ரஃபேல்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

பிரான்ஸ் நாட்டிடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14 அன்று தீர்ப்பு வழங்கியது. அத்துடன், இந்த ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிப்பதற்கு சிபிஐக்கு உத்தர விட வேண்டுமென்று கோரிய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG) அறிக்கை வரும் ஜனவரி மாத இறுதியில் வெளியாகிறது.

amitavjpgright

ரிசர்வ் வங்கிக்குப் புதிய ஆளுநர்

ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தன் பதவியைத் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக டிசம்பர் 10 அன்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸை மத்திய அரசு டிசம்பர் 11 அன்று அறிவித்தது. இவர் ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநராக டிசம்பர் 12 அன்று பதவியேற்றுக்கொண்டார்.

அமிதவ் கோஷுக்கு ஞானபீட விருது

2018-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதை எழுத்தாளர் அமிதவ் கோஷ் பெற்றிருப்பதாக பாரதிய ஞானபீடம் டிசம்பர் 14 அன்று அறிவித்தது. அமிதவ் கோஷின் சிறந்த இலக்கியப் பங்களிப்புக்காக இந்த விருது அளிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது ஞானபீட விருதுக் குழு. இந்தியாவின் சமகால ஆங்கில எழுத்தாளர்களில் ஞானபீட விருது பெறும் முதல் எழுத்தாளர் இவர். கொல்கத்தாவில் 1956-ம் ஆண்டு பிறந்த இவர், தற்போது நியூயார்க்கில் வசித்துவருகிறார். ‘தி ஷேடோ லைன்ஸ்’, ‘தி ஹங்க்ரி டைட்’ போன்றவை இவரது முக்கியமான நாவல்கள்.

மீண்டும் பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்க

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேன கலைத்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்று ஏழு பேர் அடங்கிய அந்நாட்டின் உச்ச நீதிமன்ற அமர்வு டிசம்பர் 13 அன்று தீர்ப்பளித்தது. நாடாளுமன்றத்தில் டிசம்பர் 12 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க, 225 உறுப்பினர்களில் 117 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு அக்டோபர் 26 அன்று மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக்கினார். தற்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று டிசம்பர் 16 அன்று இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

விஜய் மல்லையா: இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவு

விஜய் மல்லையாவை இந்தியா விடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் டிசம்பர் 10 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாகத் தொழிலதிபர் விஜய் மல்லலையாவின் இந்திய பாஸ்போர்டை மத்திய அரசு முடக்கிய நிலையில், 2016-ம் ஆண்டு அவர் நாட்டைவிட்டு லண்டனுக்குத் தப்பிச்சென்றார். அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு மேற்கொண்ட சட்டரீதியான நடவடிக்கைகளால், தற்போது லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அவரை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா

பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா, பிரதமர் ஆலோசனைக் குழுவிலிருந்து தன் பதவியை டிசம்பர் 1 அன்று ராஜினாமா செய்துவிட்டதாக டிசம்பர் 11 அன்று ட்விட்டரில் அறிவித்தார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக இருந்த அவர், தான் வேறொரு நிறுவனத்தில் இணைவதாகத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x