Last Updated : 18 Dec, 2018 10:52 AM

 

Published : 18 Dec 2018 10:52 AM
Last Updated : 18 Dec 2018 10:52 AM

தேர்வுக்குத் தயாரா? - சதம் சாத்தியமே! (பிளஸ் 2 கணக்குப் பதிவியல்)

பிளஸ் 2 வணிகவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுமளவுக்கு எளிமையான பாடம்தான் கணக்குப் பதிவியல். சற்று ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு பாடக் கருத்துகளையும் வழிமுறைகளையும் தெளிவாகப் படித்தால் கணக்குப் பதிவியலில் சதம் சாத்தியமே.

கணக்குப் பதிவியல் எழுத்துத் தேர்வு 90 மதிப்பெண்களுக்கானது. புதிய வினாத்தாள் மாதிரி 20 ஒரு மதிப்பெண்களையும் 2, 3 மதிப்பெண் பகுதிகள் தலா 10 வினாக்கள் தரப்பட்டு அவற்றில் தலா 7 வினாக்களுக்குப் பதில் அளிக்குமாறும் அமைந்திருக்கும். 5 மதிப்பெண் பகுதி 7  ‘அல்லது’ வினாக்களைக்கொண்டிருக்கும். 2, 3 மதிப்பெண் பகுதியில் தலா ஒரு கட்டாய வினா இடம்பெற்றுள்ளது.

1 மதிப்பெண்: மறைமுக வினாக்கள்

கணக்குப் பதிவியலில் மொத்தமுள்ள 9 பாடங்களில், பாடத் துக்குக் குறைந்தது 2 வினாக்கள் கேட்கப்படும். இதர 2 வினாக்கள் 1, 3, 4, 9 ஆகிய பாடங்களில் இருந்து கேட்கப்படலாம். இந்தப் பகுதியில் 4 முதல் 6 கணக்குகளும் 3 மறைமுக வினாக்களும் இடம்பெறலாம். 1, 3, 4, 9 பாடங்களில் இருந்து கணக்கு வினாக்கள் கேட்கப்படலாம். 3, 5 மதிப்பெண் கணக்குகளின் சிறு பகுதி 1 மதிப்பெண் பகுதிக்கான கணக்கு வினாவாகவும் கேட்கப்படும்.

எனவே, இதை மனத்தில்கொண்டு 3, 5 மதிப்பெண் கணக்குகளைத் தீர்த்துப் பழகுதல் அவசியம். மறைமுக வினாக்கள் 6-வது பாடத்தில் 'கூட்டாண்மை’ தொடர்பான கணக்குகளில் இருந்து கேட்கப்பட வாய்ப்புண்டு. 1, 3, 6-வது பாடங்களில் உள்ளிருந்தும் ஓரிரு வினாக்கள் கேட்கப்படலாம். 9-வது பாடத்தில்  ‘அழைக்கப்படாத முதல்’ தொடர்பான வினாக்கள், 3-வது பாடத்தில் ‘தேய்மானத் தொகை சொத்து மதிப்பு’ தொடர்பான 1 மதிப்பெண் வினாக்கள் சற்று மாற்றிக் கேட்கப்படலாம்.

2 மதிப்பெண்: எளிமையானது

எளிமையான இந்தப் பகுதியில் ஓரிரு வார்த்தைகள் முதல் ஓரிரு வரிகளில் விடை அடங்கிவிடும். சுமார் 3 கணக்குகள், 2 மறைமுக வினாக்களைத் தவிர பெரும்பாலும் பாடக் கருத்துகளில் இருந்தே வினாக்கள் இடம்பெறும். கட்டாய வினா (வினா எண்.21) எளிமையான முதல் பாடத்திலிருந்தே இடம்பெறும். பெரிய பாடங்களான 6, 9 ஆகியவற்றிலிருந்து தலா 2 வினாக்கள் இடம்பெறலாம்.

3 மதிப்பெண்: கணக்குகளில் கவனம்

பாதிக்கும் மேலானவை கணக்கு வினாக்கள் என்பதால் தேர்வில் நேரத்தையும் சிரத்தையையும் கோரும் பகுதி இது. முதல் பாடத்தில் சரிகட்டுப் பதிவு, மாற்றுப் பதிவு தொடர்பான வினாக்கள், 2-வது பாடத்தில் விடுபட்ட தொகை, 3-வது பாடத்தில் தேய்மான விகிதம், 4-வது பாடத்தில் விகிதம் தொடர்பான கணக்குகள், 5-வது பாடத்தில் ரொக்கத் திட்டப் பட்டியல், 6-வது பாடத்தில் எடுப்பு மீது வட்டி கணக்கிடல், நற்பெயர் கணக்குகள் ஆகியவை கணக்கு வினாக்களில் முக்கியமானவை. 2, 6, 8 பாடங்களில் இருந்து வேறுபாடுகள் தொடர்பான வினாக்களில் ஒன்றும் இடம்பெறும். கட்டாய வினா (வினா எண்.31) முதல் பாடத்திலிருந்தே கேட்கப்படுகிறது.

5 மதிப்பெண்: முக்கிய வினாக்கள்

இதுவரையிலான வினாத்தாள்களின் அடிப்படையில், முதல் 5 பாடங்களில் இருந்து குறைந்தது 4 ஐந்து மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது. முதல் பாடத்திலிருந்து 2 வினாக்கள் இடம்பெறும். அவை ‘வாராக் கடன், ஐயக்கடன், தள்ளுபடி’ தொடர்பான ஒரு கணக்கு வினாவாகவும் ‘குறைந்த சரிகட்டுதலுடன் இறுதிக் கணக்குகள் தயாரித்தல்’ தொடர்பான இன்னொரு கணக்காகவும் இடம்பெறும்.

அதேபோன்று 2-வது பாடத்தில் ‘லாப நட்ட அறிக்கை சார்ந்த கணக்கு, ஒற்றைப் பதிவு முறையில் இறுதிக் கணக்கு தயாரித்தல்’ ஆகியவற்றில் இருந்து ஒரு கணக்கும் இடம்பெறும். முதலிரண்டு பாடங்களின் இந்தக் கணக்குகளில் போதிய பயிற்சி மேற்கொண்டாலே 3 ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு எளிமையாகத் தயாராகலாம். இந்த வரிசையில் 6-வது பாடத்தின் ‘லாப நட்டப் பகிர்வு கணக்கு தயாரித்தல்’, 9-வது பாடத்தின் ‘பங்கு ஒறுப்பிழப்பு, மறுவெளியீடு மற்றும் முதலினக் காப்பு’ ஆகியவையும் முக்கியம்.

தேர்ச்சி நிச்சயம்

தேர்ச்சியை உறுதிசெய்ய விரும்பும் மாணவர்களுக்கு முதல் 2 பாடங்கள் முக்கியமானவை. அதிலும் முதல் பாடத்திலிருந்து மட்டுமே 2 அல்லது 3 ஒரு மதிப்பெண் வினாக்கள், 2 கட்டாய வினாக்கள், 5 மதிப்பெண் பகுதியின் 2 கணக்குகள் எனக் குறைந்தது 15 மதிப்பெண்களை உறுதிசெய்யலாம். 2-வது பாடத்திலிருந்து இரண்டு 1 மதிப்பெண் வினாக்கள், தலா ஒரு 2, 3, 5 மதிப்பெண் வினாக்களுக்கும் தயாராகலாம்.

thervu-2jpgபாடக் குறிப்புகளை வழங்கியவர்: அ.பழனிவேலு, முதுகலை ஆசிரியர் (வணிகவியல்), அரசு மேல்நிலைப்பள்ளி, நடுக்குப்பம் மரக்காணம், விழுப்புரம் மாவட்டம்.

எனவே, முதலிரண்டு பாடங்களை முழுமையாகப் படித்தாலே தேர்ச்சியை உறுதிசெய்துகொள்ளலாம். இவற்றுடன் பாடநூலின் பிற்பகுதி வினாக்களில் இருந்தே கேட்கப்படும் 12 ஒரு மதிப்பெண் வினாக்கள், 7 இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கும் சுலபமாகத் தயாராகலாம். ‘கூட்டாளி சேர்ப்பு-விலகல்’ தொடர்பான 5 மதிப்பெண் கணக்கில், வினாவில் இருந்தே விடைகளைக் கண்டறிந்து எழுதப் பழகலாம்.

நேர மேலாண்மை

ஒரு மதிப்பெண் பகுதிக்கு 10, 2 மதிப்பெண் பகுதிக்கு 15, 3 மதிப்பெண் பகுதிக்கு 40, 5 மதிப்பெண் பகுதிக்கு 70 என நிமிடங்களை ஒதுக்கினால் திருப்புதலுக்கு 15 நிமிடங்கள் கிடைக்கும். தேர்வின் தொடக்கத்தில் வினாத்தாள் வாசிப்புக்கு வழங்கப்படும் 15 நிமிட அவகாசத்தில் எளிமையானவற்றையும் முழு மதிப்பெண்கள் கிடைக்கக்கூடிய கணக்குகளையும் அடையாளம் கண்டுகொண்டால் உரிய நேரத்தில் பதற்றமின்றித் தேர்வு எழுதலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x