Published : 18 Dec 2018 10:51 AM
Last Updated : 18 Dec 2018 10:51 AM

தேர்வு பயம் இனி இல்லை

மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்றாலே ஒருவித அச்ச உணர்வு தொற்றிக்கொள்வது இயற்கை. அதிலிருந்து மாணவர்களை  விடுவிப்பது ஆசிரியரின் கடமை. அதைப் புரிந்துகொள்கிற ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் தேர்வு நேரத்தில் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர்.

ஆனால், அந்தத் தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளில் பாடத்திட்டங்களின் அடிப்படையில், தேர்வில் வருகின்ற கேள்விகளுக்கு  எப்படி விடையளிப்பது என்பது குறித்துப் பயிற்றுவிக்கப்படுவதில்லை.

இந்தக் குறையைப் போக்கும் விதத்தில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருகே தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் ஆதலையூர் சூரியகுமார் செயல்படுகிறார்.

படமாக மாறுது பாடம்!

10-ம் வகுப்பு தமிழ் உள்ளிட்ட 5 பாடங்களுக்கும் 300 பவர் பாயிண்ட் சிலைடுகளைத் தயாரித்து, அவற்றை ஒளி ஒலி வடிவில் உரிய விளக்கங்களுடன் பயிற்சி அளித்து வருகின்றார்.

இவர் தயாரித்துள்ள கணினி சி.டி.களை  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கணினி மூலமாகவும், புரொஜக்டர்கள் மூல மாகவும் மாணவர்களிடம் போட்டுக் காட்டுவதற்குக் கல்வி இயக்கம் (ஆர்எம்எஸ்ஏ)  நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்துப் பாடங்களிலும்  உள்ள கேள்வித்தாள்களின் அமைப்பு முறை குறித்தும், அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதையும் படமாகக் காட்டி, அதன் பின்னூட்டமாகக் கதை சொல்லும் முறையில், ஒலி ஒளிப் பதிவாக (பவர் பாய்ண்ட் பிரசன்டேசன்) காட்டும்போது, மாணவர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஏற்கெனவே பள்ளியில் நடந்த தேர்வுகளில், தாங்கள் பதில் அளித்த விடைகளுக்கு, கிடைத்த மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களது சந்தேகங்களைப் போக்கிக்கொள்கின்றனர்.

அதன் பின்னர் சூரியகுமார் நேரடியாகவும் மாணவர்களின் சந்தேகத்துக்கு விளக்கமளிப்பதால், மாணவர்களுக்குத் தாம் எழுதப்போகும் அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாளைத் திருத்தப்போகும், ஆசிரியரே நமக்கு நேரில் அறிவுரை கூறி வருகின்ற உணர்வை ஏற்படுத்துகின்றது என்கின்றனர் மாணவர்கள்.

சமநிலை அவசியம்

“பொதுத் தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற் காகவும், எதிர்காலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்கி, பல்கலைக் கழங்களுக்கான தேர்வுகள், அரசுப் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கான  பயிற்சியாகவும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அமைகிறது. இதற்கான முக்கியத்துவத்தை மாணவர்களும் பெற்றோரும் உணர வேண்டும் என்பதற்காகவே,

கல்வித் துறை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு எச்சரிக்கைகள் பல தருகின்றன. இவற்றையும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு உணர்வுகள், பள்ளி நிர்வாகங்களுக் கிடையில் ஏற்படுகிற போட்டிகள் போன்ற வற்றையும் பார்த்து, முதன்முதலாக அரசுப் பொதுத் தேர்வை எழுதப்போகும் 10-ம் வகுப்பு மாணவர்கள் பதற்றமடைகிறார்கள்.

இதைக் கருத்தில்கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களுக்கும் கேள்வித்தாள்கள் எப்படிக் கேட்கப்படுகின்றன, எப்படி அவற்றை எதிர்கொள்வது என்று எளிமையாக விளக்கி உள்ளேன். உதாரணத்துக்கு,  சமூக அறிவியல் பாடத்தில் ஒரு பிரிவில் 4,  5 மதிப்பெண் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பிரிவு உள்ளது.

அதில்  ஒரு சில கேள்விகளுக்கு ஒரு பக்கத்திலும், மற்ற கேள்விகளுக்கு அரைப் பக்கத்திலோ 2 பக்கங்களிலோ, பதிலளித்தால் அதைப் பார்த்த மாத்திரத்திலேயே விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு  மாணவருக்குப் பதில் அளிப்பதில் சமநிலை இல்லை என்று தோன்றும். இதனால் நன்றாக எழுதியிருந்த பதில்களுக்கும் குறைந்த மதிப்பெண் வழங்கிட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நுட்பமான தகவல்களை மாணவர்களுக்குப்  பாடவாரியாகச் சொல்ல வேண்டும். 

மேலும், நிலவரைபடத் தாளில் பகுதிகளைக் குறிப்பது, க்ராப் வரைவது, வடிவக் கணித வரைபடங்கள் வரைவது, படங்களை வரைந்து பாகங்களைக் குறிப்பது போன்றவற்றுக்கான அணுகுமுறைகளையும் மாணவர்கள் தெரிந்துகொண்டால்,  மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்பில்லை. இவற்றைப் புரிய வைக்கும் விதமாக இந்த 2 மணி நேரப் பயிற்சி வகுப்பை பவர்பாயிண்ட் மூலம் தயாரித்திருக்கிறேன்” என்கிறார் சூரியகுமார்.

bayam-2jpgசூரியகுமார்right

கற்றதைப் பகிர்ந்தளிப்பவர்

இதற்கு திருவாரூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளும் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகத் தெரிவித்தார்.

இவர் தயாரித்துள்ள சூரியக் குடும்பங்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள், நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பன போன்ற சி.டி.க்களும் மாணவர்கள், கல்வியாளர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அடிப்படையில் இவர் சமூக அறிவியல் ஆசிரியர். தனக்குப் பள்ளிக் கல்வித் துறையில் அளிக்கப்பட்ட கணினித் திறன் மேம்பாட்டு பயிற்சிதான் இந்த முன்னெடுப்புக்கான தொடக்கப் புள்ளி என்கிறார். தான் கற்றுக்கொண்டதை,  மாணவர் களுக்குப் பயனுள்ளதாக்கிட எடுத்த முயற்சியால் இன்று மாணவர்கள் கையில் இந்த சி.டி.க்கள் கிடைத்துள்ளன.

தொடர்புக்கு: gopalakrishnan.siva@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x