Last Updated : 11 Dec, 2018 11:08 AM

 

Published : 11 Dec 2018 11:08 AM
Last Updated : 11 Dec 2018 11:08 AM

தேர்வுக்குத் தயாரா? - வாழ்க்கைக்கு உதவும் வணிகவியல் (பிளஸ் 2 வணிகவியல்)

பிளஸ் 2 வணிகவியல் பாடம் பொதுத் தேர்வுகளுக்கு அப்பாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. குரூப் 1 தேர்வில் விருப்பப் பாடமாகப் பெரும்பாலானோரின் தேர்வாக வணிகவியல் உள்ளது. அரசுப் போட்டித் தேர்வுகள், வங்கிப் பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தயாரிப்பு பெரிதும் உதவும். புதிய வினாத்தாளின் கணிசமான வினாக்களும் இந்த அடிப்படையிலே அமைந்துள்ளன.

வணிகவியல் பாடத்தின் எழுத்துத் தேர்வு 90 மதிப்பெண்களுக்கானது. 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுக்கானது. புதிய மாதிரி வினாத்தாளின் ஒரு மதிப்பெண் பகுதியில் 20 வினாக்கள் இடம்பெறும். 2, 3 மதிப்பெண் பகுதியில் கொடுக்கப்பட்ட தலா 10 வினாக்களிலிருந்து தலா 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

5 மதிப்பெண் பகுதியில் ‘அல்லது’ வகையிலான 7 வினாக்கள் இடம்பெறும். 2 மதிப்பெண் (வினா எண்.21), 3 மதிப்பெண் பகுதியில் (வினா எண்.31) தலா ஒரு கட்டாய வினா இடம்பெறுகிறது. வினாத்தாளின் 20 சதவீத வினாக்கள் நுண்ணறிவைச் சோதிக்கும் வகையிலும், க்ரியேட்டிவ் வினாக்களாகவும் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஒரு மதிப்பெண்: தொலைநோக்கில் தயாராவோம்

அரசு மாதிரி வினாத்தாள் அடிப்படையில் வணிகவியலின் ஒரு மதிப்பெண் வினாக்கள், பிளஸ் 2 தேர்வுக்கு அப்பாலும் கைகொடுப்பவை. எதிர்காலப் போட்டித் தேர்வுகள் பலவற்றுக்கும் இந்த வினாக்களே அடிப்படை என்பதால், அவற்றுக்கும் சேர்த்து இப்போதிருந்தே தயாராகலாம். மொத்தமுள்ள 8 பாடங்களில் 1, 2, 3, 4, 6 ஆகிய பாடங்களில் இருந்து தலா 3 வினாக்கள் இடம்பெறலாம்.

இந்த வகையில் ஒரு மதிப்பெண் பகுதியில் 20-க்கு 15 மதிப்பெண்களுக்குத் தயாராகலாம். இதர 5 வினாக்கள் ஏனைய 3 பாடங்களிலிருந்து கேட்கப்படுகின்றன. இந்த 20 வினாக்களில் சுமார் 25 சதவீதம் மறைமுக வினாக்களாகக் கேட்கப்படலாம். போட்டித் தேர்வு வினாக்களின் அடிப்படையில் 2 கூற்றுகளைக் கொடுத்து அவற்றிலிருந்து விடையளிக்கக் கோரும் வினாக்கள் குறைந்தது 3 இப்பகுதியில் இடம்பெறும்.

2, 3 மதிப்பெண்கள்: வினாவும் முக்கியம்

2 , 3 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை, 8 பாடங்களில் இருந்தும் குறைந்தது தலா ஒரு வினா கேட்கப்படும். 2 மதிப்பெண் பகுதியின் இதர வினாக்கள் 3, 4, 5 ஆகிய பாடங்களில் இருந்தே இடம்பெற வாய்ப்புள்ளது. 2 மதிப்பெண் விடை குறைந்தது இரண்டு கருத்துகளாவது கொண்டதாக அமைய வேண்டும். அதே வினா 3 மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றால் கூடுதலாக ஓரிரு கருத்துகள் எழுத வேண்டும்.

2, 3 மதிப்பெண் பகுதிகளில் பொதுவாக 3 முதல் 6 வரையிலான பாடங்கள் முக்கியமானவை. ‘வரைவிலக்கணம், என்றால் என்ன, வேறுபடுத்துக’ குறித்த வினாக்கள் இப்பகுதிகளில் முக்கியமாகக் கேட்கப்படுகின்றன. 2 மதிப்பெண் பகுதியில் க்ரியேட்டிவ் வகை வினாவாக, விடையிலிருந்தே வினாவை அடையாளம் காண்பதாகவும் கேட்கப்படலாம். எனவே, இப்போதிருந்தே வினாவுக்கான விடை மட்டுமன்றி, விடைக்கான வினாவையும் கவனத்தில் கொண்டு படிக்கலாம்.

5 மதிப்பெண்: அல்லதில் எது நல்லது?

பாடங்களை முழுமையாகப் புரிந்துகொண்டாலே சொந்தமாக எழுதும் அளவுக்கு வணிகவியலின் 5 மதிப்பெண் பகுதி எளிமையானது. 1, 2, 3, 7, 8 ஆகிய 5 பாடங்களை நன்கு படித்தாலே இப்பகுதியின் 5 வினாக்களுக்கு விடையளிக்கலாம். ஏனைய 3 பாடங்களைப் படித்தால் மிச்சமுள்ள 2 வினாக்களுக்கு விடையளிக்கலாம். ‘சிறப்பியல்புகள், வேறுபடுத்துக, வகைப்படுத்தல், நன்மைகள், கோட்பாடுகள், குறைபாடுகள், உரிமை-கடமைகள்’ வகையிலான வினாக்கள் கேட்கப்படும்.

குறைந்து 5 முக்கிய பாடக்குறிப்புகளை உரிய தலைப்புடன் எழுதினாலே முழு மதிப்பெண் பெறலாம். ‘அல்லது’ வினாக்களில் உரியதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமும் பயிற்சியும் தேவை. நன்கு படித்த, எழுதுவதற்கு எளிமையான வினாக்களுக்கு முன்னுரிமை தருவது அவசியம். 2, 3 மதிப்பெண்களை முழுமையாகப் படித்தாலே 5 மதிப்பெண் வினாக்களில் பெரும்பாலானவற்றுக்குப் பதில் அளித்துவிடலாம். இப்பகுதியின் விடைகளுக்கு உரிய தலைப்பு எழுதுவது அவசியம்.

தேர்ச்சி நிச்சயம்

மெல்லக் கற்கும் மாணவர்கள் ஒரு மதிப்பெண் பகுதியில் எளிதாக 10 மதிப்பெண்கள்வரை பெற்றுவிடலாம். 2, 3 மதிப்பெண் வினாக்களுக்குப் படிக்கையில் அதில் அடங்கிய ஒரு மதிப்பெண் வினாக்களையும் அடையாளம் கண்டு படிப்பது நல்லது. இந்த அடிப்படையில் 5 மதிப்பெண் பகுதியின் தெரிந்த வினாக்களுக்குத் தாங்கள் அறிந்த அளவுக்கு எழுதினாலே கணிசமான மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெற்றுவிடலாம்.

 

thervujpgபாடக் குறிப்புகளை வழங்கியவர்: என்.கோவிந்தசாமி, முதுகலை ஆசிரியர் (வணிகவியல்), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கராபுரம், விழுப்புரம் மாவட்டம்.right

முழு மதிப்பெண் பெற

வணிகவியலில் முழு மதிப்பெண்கள் பெறப் புத்தகத்தின் பின்பகுதி வினாக்களுடன், பாடம்தோறும் உள்ள முக்கியக் கருத்துகளை அடையாளம் கண்டு அவற்றைத் தனியே குறிப்பெடுத்து, தொகுத்துப் படிப்பது அவசியம். 5 மதிப்பெண் வினாக்களுக்கு Flow chart வரைந்தும் விடையளிக்கலாம்.

தேவையான இடங்களில் நடப்புச் செய்திகள் அல்லது தகவல்களைச் சேர்த்தோ பாடப் பகுதியுடன் அவற்றை ஒப்பிட்டோ எழுதலாம்.

இந்த முனைப்புகள் எந்த வகையிலும் மதிப்பெண் சரிய வாய்ப்பில்லாது, முழு மதிப்பெண்களுக்கு வழி செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x