Published : 11 Dec 2018 11:05 AM
Last Updated : 11 Dec 2018 11:05 AM

அந்த நாள் 13: காஞ்சிப் பட்டுக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?

காலம்: பொ.ஆ. 640

“செழியன் இவரைப் பாரு, இவரை உன்னால கண்டுபிடிக்க முடியுதா?”

“சீனாக்காரர் மாதிரி தெரியுறார், குழலி”

“நல்லா பாரு செழியன், தமிழக வரலாறு பத்தின புத்தகங்கள்ல இவரோட படத்தைப் பாத்திருப்பியே”

“யுவான் சுவாங்கா?”

“சரியாச் சொன்னே. ஆனா, அவர் பேரை சுவான் சாங்னுதான் சொல்லணும். சீன பௌத்தப் பயணியான அவரு, பௌத்த மதத்தைப் பத்தித் தெரிஞ்சுக்க இந்தியா வந்தார்.”

“இப்போ அவரு எங்க வேகமா போயிட்டு இருக்காரு”

“பல்லவர்களோட தலைநகரா இருந்த காஞ்சிக்குத்தான். அது ஒரு முக்கியமான பௌத்தத் தலமில்லையா, அங்க இருக்கிற பௌத்த விஹாரத்தைத் தேடிப் போவாரா இருக்கும். இப்ப நாமளும் அந்த ஊருக்குத்தான் போயிட்டு இருக்கோம். வேகவதி ஆத்தங்கரை வந்துடுச்சே. அப்ப இதுதான் காஞ்சி. எவ்ளோ செழிப்பா தண்ணி ஓடுது பாரு.”

“ஆனா, சுவான் சாங் நம்பி வந்த மாதிரி பௌத்த மதம் இங்கே தழைச்சிருக்கிற மாதிரித் தெரியலையே. அதோ அங்க தெரியுற பௌத்த விஹாரம் பாழடைஞ்சு போய்க் கிடைக்கே”

“நீ சொல்றது சரிதான். முன்னாடி இந்த ஊருல பௌத்த விஹாரங்கள்- பௌத்த மடங்களும், அங்கே நிறைய பௌத்த பிக்கு, பிக்குணிகளும் இருந்தாங்க.”

“அவங்கெல்லாம் இப்ப எங்க போனாங்க?”

“மன்னர்கள் எந்த மதத்தை ஆதரிக்கிறாங்களோ, அதுதானே வளரும். ‘காஞ்சி வைணவ வழிபாட்டுத் தலம்’னு சிலப்பதிகாரம் சொல்லுது. ஆனா அதேநேரம், வட இந்திய வணிகர்கள் இந்த ஊருக்குத் தொடர்ச்சியா வந்து போனதன் மூலமா பௌத்த, சமண மதங்களும் தழைக்க ஆரம்பித்தன. அதனாலதான் ‘பௌத்தக் காஞ்சி’, ‘ஜைனக் காஞ்சி’ன்னு முன்னொட்டோட இந்த ஊர் அழைக்கப்பட்டுச்சு.”

“மன்னர்களோட ஆதரவு குறைஞ்ச உடனே, பௌத்த மதமும் சரிஞ்சிடுச்சா?”

“ஆமா, மாமல்லபுரத்தைக் கட்டின மகேந்திர வர்ம பல்லவனே பௌத்த மதத்தை பகடி செஞ்சு ‘மத்த விலாச பிரகசனம்’னு நாடகம் எழுதியிருக்காரே. சமணரா இருந்து, சைவ மதத்தைத் தழுவினவரு அவர்.”

“அப்ப அவர் காலத்துலதான் பௌத்த மதத்துக்கு ஆதரவு குறைஞ்சிருக்கணும்.

அது தெரியாம சுவான் சாங் இங்க வந்துட்டாரு போலருக்கு.”

“ஆனா கற்றறிஞ்ச அறிஞர்களும்

தத்துவ ஞானிகளும் காஞ்சில நிறைய பேர் இருந்தாங்க. பௌத்தர்கள், சமணர்கள், வேதாந்திகள் இடையே மதம், தத்துவம் பத்தி விவாதங்களும் கலந்துரையாடல்களும் நிறைய நடந்திருக்கே.”

“அப்ப, மதங்கள் தழைச்சு இருந்ததுனால, மத வழிபாட்டோட கல்வியும் கலைகளும் சேர்ந்து செழிப்பா இருந்துச்சுனு சொல்லு”.

“அது மட்டுமில்லாம, சுவான் சாங் வந்ததோட

தொடர்பு வெறும் பௌத்த மதத்தோட நின்னுடுச்சுன்னு சொல்ல முடியாது. காஞ்சிவரம் பட்டுச்சேலைகளுக்கும் சீனவுக்கும் இடையிலான தொடர்பு ரொம்ப முக்கியமானது. ஏன்னா, பட்டு உற்பத்தியும் பட்டுத்துணி நெசவும் சீனாவுல ரொம்பப் பிரபலம்.”

“காஞ்சிவரம் பட்டுச்சேலைகள், நவீன காலத்துலயும் தமிழகத்தோட அடையாளமா இருக்கே. இந்தத்

தொடர்பு எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தா ஆச்சரியமாத்தான் இருக்கு குழலி”

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்.

 

பெண்களும் படித்தார்கள்

andha-2jpg100 

பல்லவர்கள் தொழிலுக்கு மட்டுமில்லாமல், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். கணிதம், தத்துவம், சட்டம், இலக்கணம், பொருளியல், வானியல், வேதம், அரசுச் சட்டம், பகுத்தறிவு போன்ற துறைகள் சார்ந்து பள்ளிகளில் அப்போது பாடம் நடத்தப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், வசதி படைத்த பெண்களால், அன்றைக்குக் கல்வி கற்க முடிந்தது. பல்வேறு வகைத் தொழில்கள், கல்வியில் பல்லவர்கள் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.


தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x