Last Updated : 04 Dec, 2018 10:57 AM

 

Published : 04 Dec 2018 10:57 AM
Last Updated : 04 Dec 2018 10:57 AM

சேதி தெரியுமா? - மேகேதாட்டு அணையை எதிர்த்து வழக்கு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவுத் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அளித்திருந்த ஒப்புதலை எதிர்த்துத் தமிழக அரசு நவம்பர் 30 அன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. கர்நாடக அரசு 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை ரூ. 5,912 கோடி செலவில் கட்டப்படும் என்று 2013-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தைப் பரிசீலித்த மத்திய நீர் ஆணையம் நவம்பர் 22 அன்று அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது.

நீட்: வயது வரம்புத் தளர்வு

தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வைப் பொதுப் பிரிவைச் சேர்ந்த 25 வயதைக் கடந்தவர்களும் எழுதலாம் என்ற இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் நவம்பர் 29 அன்று பிறப்பித்தது. அத்துடன், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தையும் ஒரு வாரத்துக்கு (டிசம்பர் 7 வரை) நீட்டிக்குமாறு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வயது வரம்புத் தளர்வுக்கான இடைக்கால உத்தரவு என்பது இறுதித் தீர்ப்பைப் பொறுத்து மாறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பண மதிப்பிழப்பு: கொடுமையான நிதி அதிர்ச்சி

2016-ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மாபெரும் கொடுமையான நிதி அதிர்ச்சி என்று முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகான ஏழு காலாண்டுகளில் 8 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

பி.எஸ்.எல்.வி. சி-43 வெற்றி

பி.எஸ்.எல்.வி. சி-43 ஏவுகணை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக நவம்பர் 29 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. எட்டு நாடுகளைச் சேர்ந்த 31 செயற்கைக்கோள்களை இந்த ஏவுகணை சுமந்து சென்றது. அத்துடன், இந்தியாவின் ஹைசிஸ் (Hyper Spectral Imaging Satellite – means ‘Sharp Eye’) செயற்கைக்கோளும் இந்த ஏவுகணையில் செலுத்தப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவின் 23 செயற்கைக்கோள்கள் இந்த பி.எஸ்.எல்.வி. சி-43 ஏவுகணையுடன் விண்ணில் செலுத்தப்பட்டன.

விவசாயப் பிரச்சினை: கூட்டப்படுமா நாடாளுமன்றம்?

 நாடாளுமன்றத்தில் விவசாயப் பிரச்சினைகளைப் பேசுவதற்குச் சிறப்புக் கூட்டம் கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நவம்பர் 29 அன்று டெல்லியில் பேரணி நடத்தினர். தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். விவசாயக் கடன் தள்ளுபடி, உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் இந்தப் பேரணி நடைபெற்றது.

யூ.பி.எஸ்.சி.யின் புதிய தலைவர்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) புதிய தலைவராக அரவிந்த் சக்சேனாவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 28 அன்று நியமித்தார். அவரது பதவிக்காலம் 2020, ஆகஸ்ட் 7 அன்றுடன் நிறைவடைகிறது. அவர் 2018 ஜூன் மாதத்திலிருந்து யூ.பி.எஸ்.சி.யின் செயல் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

மிசோரம், மத்தியப் பிரதேச தேர்தல்கள்

மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 28 அன்று நிறைவடைந்தது. மிசோரம் மாநிலத்தில் நாற்பது தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாயின. மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 74.6 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தல் முடிவு டிசம்பர் 11 அன்று வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x