Last Updated : 27 Nov, 2018 10:12 AM

 

Published : 27 Nov 2018 10:12 AM
Last Updated : 27 Nov 2018 10:12 AM

தேர்வுக்குத் தயாரா? - தாராள மதிப்பெண் தரும் பாடம் (பிளஸ் 2- தாவரவியல்)

அறிவியல் பிரிவு மாணவர்கள் தாவரவியல் பாடத்தைப் புரிந்து படிப்பது தேர்வில் முழு மதிப்பெண்களைப் பெற்றுத் தருவதுடன், பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கும் உதவியாக அமையும்.

புதிய வினாத்தாள் அமைப்பு

ஒரு மதிப்பெண் பகுதியில் 15 வினாக்கள் கேட்கப்படுகின்றன. 2, 3 மதிப்பெண் பகுதிகள் தலா 9 வினாக்களில் இருந்து தலா 6 வினாக்களுக்குப் பதில் அளிக்குமாறு அமைந்துள்ளன. 2, 3 மதிப்பெண் வினாக்களில் தலா ஒன்று கட்டாய வினாவாக இடம்பெறுகிறது. 5 மதிப்பெண் பகுதியில் அல்லது பாணியிலான 5 ஜோடி வினாக்கள் அமைந்துள்ளன. தாவரவியல் வினாத்தாளில் சுமார் 20 சதவீதம்வரை ‘கிரியேட்டிவ்’ வகை வினாக்களை எதிர்பார்க்கலாம்.

1 மதிப்பெண்- முழுமையாகப் படிக்க வேண்டும்

ஒரு மதிப்பெண் பகுதியில் முழு மதிப்பெண்கள் பெறப் பாடங்களை முழுமையாகப் படிப்பது அவசியம். மொத்தமுள்ள 6 பாடங்களில் இருந்து கேட்கப்படும் 15 வினாக்களில், 3 வரையிலான வினாக்கள் கிரியேட்டிவ் வகையாக அமையும். முதல், கடைசிப் பாடங்களில் இருந்தே இந்த வகை வினாக்கள் கேட்கப்பட அதிக வாய்ப்புண்டு. அரசு மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையில் பார்க்கையில் 1, 3, 5 ஆகிய பாடங்களில் தலா 3 கேள்விகளும் இதர பாடங்களில் தலா 2 கேள்விகளும் கேட்கப்பட வாய்ப்புள்ளது.

பாடம் தோறும் பயிற்சி வினாக்களை முழுமையாகவும் தெளிவாகவும் புரிந்து படிப்பது அவசியம். அத்துடன் அறிஞர்களின் பெயர்கள், முக்கியமான கலைச்சொற்கள், மருத்துவத் தாவரத்தின் பெயர்கள் ஆகியவற்றைத் தொகுத்துப் படிப்பதும் அவ்வப்போது திருப்புதல் மேற்கொள்வதும் முக்கியம்.

2 மதிப்பெண்: எடுத்துக்காட்டு அவசியமல்ல

2 மதிப்பெண்களைப் பொறுத்தவரை 1, 3, 5 ஆகிய பாடங்களில் இருந்து தலா 2 வினாக்களும் இதர பாடங்களிலிருந்து தலா 1 வினாவும் கேட்கப்பட வாய்ப்புள்ளது. கட்டாய வினா (வினா எண்.22) எந்தப் பாடத்திலிருந்தும் கேட்கப்படலாம் என்ற போதும் 1, 5 ஆகிய பாடங்களிலிருந்து கேட்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கேட்கப்படும் ‘என்றால் என்ன?’ வகை வினாக்களுக்கு வரையறை எழுதினால் போதுமானது. எடுத்துக்காட்டு எழுத வேண்டிய அவசியமில்லை.

thervu-2jpgபாடக் குறிப்புகளை வழங்கியவர்: செ.ராஜேந்திரன், முதுகலை ஆசிரியர் (தாவரவியல்), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.right

3 மதிப்பெண்: கட்டாய வினாவில் கவனம்

1, 3, 5 ஆகிய பாடங்களில் இருந்து தலா 2 வினாக்களும் இதர பாடங்களிலிருந்து தலா 1 வினாவும் கேட்க வாய்ப்பு உள்ளது. ‘வேறுபாடுகள்’, ‘முக்கியத்துவம்’ சார்ந்த வினாக்களை இந்தப் பகுதியில் எதிர்பார்க்கலாம். எடுத்துக்காட்டாக ‘DNA-RNA, இருவித்திலை-ஒருவித்திலை, மியூஸா-ராவனெல்லா’ போன்ற வேறுபாடு வினாக்களைச் சொல்லலாம்.

அதேபோல் ‘திடீர் மாற்ற முக்கியத்துவம், பிளாய்டின் முக்கியத்துவம், ஹெர்பேரியம் முக்கியத்துவம்’ போன்ற ‘முக்கியத்துவ’ வினாக்களையும் சொல்லலாம். இந்த வினாக்களைத் தனியாகப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது திருப்புதலுக்கு உதவும். கட்டாய வினாவை (வினா எண்.27) 1, 3, 5 ஆகிய பாடங்களில் இருந்து எதிர்பார்க்கலாம்.

அந்த வினாவும் ‘படம் வரைந்து பாகங்கள் குறி’ வகையாகவே இருக்கும். முக்கியமாக tRNA, சிறப்பு வகை குரோமோசோம், பேபேசி வண்ணத்துப் பூச்சி வடிவ அல்லிவட்டம், பசுங்கணிகம் அமைப்பு’ ஆகிய படங்களைக் கேட்க வாய்ப்புண்டு. 3 மதிப்பெண்களைப் பொறுத்தவரை வினாவில் எடுத்துக்காட்டு கேட்கவில்லை என்றாலும் அவற்றைக் குறிப்பிட்டு எழுதுவது அவசியம்.

5 மதிப்பெண்: மதிப்பெண்களை அள்ளித் தரும்

இதர பகுதிகளைவிட 5 மதிப்பெண் பகுதியில் மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. அனைத்தும் நேரடி வினாக்களாகவே அமைந்திருக்கும். 1, 2, 4, 5 ஆகிய பாடங்களில் இருந்து தலா 2 வினாக்களையும் இதர பாடங்களில் இருந்து தலா 1 வினாவையும் எதிர்பார்க்கலாம். இவற்றில் ஒன்று, ‘படம் வரைந்து பாகம் குறி’ வகை வினாவாகவும் மற்றொன்று ‘வேறுபாடுகள்’ குறித்ததாகவும் அமையும்.

படம் வரைதலில் பயிற்சி

3, 5 மதிப்பெண் பகுதிகளில் படம் வரைந்து பாகம் குறிக்கும் வினாக்களுக்கு முன்னுரிமை தந்து பதில் அளிக்கலாம். இந்த மாதிரி வினாக்களில் முழு மதிப்பெண்கள் பெறுவது சாத்தியம் என்பதால் இந்த முன்னுரிமை. ஆனால், படங்கள் வரைந்து பாகம் குறிப்பதில் போதிய பயிற்சி இருந்தால் மட்டுமே இந்த முழு மதிப்பெண் சாத்தியமாகும். மேலும் படத்தை பென்சிலில் மட்டுமே வரைய வேண்டும். பாகம் குறிக்கையில் நன்கு அறிந்த பாகங்களை மட்டுமே குறிப்பது மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கும்.

தேர்ச்சி நிச்சயம்

தாவரவியல் தேர்வில் தேர்ச்சி என்பது 70-க்கு 15 மதிப்பெண்களாகும். 4, 5, 6 ஆகிய 3 பாடங்களின் 5 மதிப்பெண் வினாக்களை மட்டுமே குறிவைத்துப் படித்தால் குறைந்தது 10 மதிப்பெண் பெற்றுவிடலாம். 5 மதிப்பெண் வினாப் பகுதி எளிதானது என்பதால், ஒவ்வொரு வினாவிலும் பொதிந்திருக்கும் 1, 2, 3 மதிப்பெண் வினாக்களை அடையாளம்கண்டு படிப்பதன் மூலம் கணிசமான கூடுதல் மதிப்பெண்களையும் குவிக்கலாம்.

 

பொதுவான கவனக் குறிப்புகள்

முதல் பாடத்தில் பொருளாதார முக்கியத்துவம் தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்கும்போது, தாவரவியல் பெயர்களை எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் சாத்தியமாகும். மலர் வரைபடம், மலர் வாய்ப்புகளைப் புரிந்து படிப்பதுடன் தவறில்லாது எழுதிப் பழக வேண்டும். கடைசிப் பாடத்தில் பொருளாதார முக்கியத்துவங்களைப் படிப்பது எளிது என்பதால் அனைவரும் அவை தொடர்பான வினாக்களில் முழு மதிப்பெண் பெறலாம். ‘மருத்துவ நுண்ணுயிர்கள்’ தொடர்பான வினாவுக்குப் பத்தியாக எழுதாமல், அட்டவணை வகையில் பதில் எழுதுவது நல்லது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x