Last Updated : 20 Nov, 2018 10:12 AM

 

Published : 20 Nov 2018 10:12 AM
Last Updated : 20 Nov 2018 10:12 AM

தேர்வுக்குத் தயாரா? - நூற்றுக்கு நூறு சுலபமே! (பிளஸ் 2- கணினி அறிவியல்)

‘சென்டம்’ எடுப்பதில் கணிதத்தைவிட வாய்ப்பு அதிகமுள்ள பாடம் கணினி அறிவியல். புதிய வினாத்தாள் மாதிரி ‘ப்ளூ பிரிண்ட்’ அடிப்படையில் இல்லாததால், அனைத்து வினாக்களையும் படிப்பது அவசியம். சுமார் 20 சதவீத வினாக்கள் ஆக்கச் சிந்தனைக்கான ‘கிரியேட்டிவ்’, மறைமுக வினாக்களாக இடம்பெற வாய்ப்புள்ளதால், முழுமையாகப் படிப்பதே உயர் மதிப்பெண்களுக்கு உதவும்.

புதிய வினாத்தாள் அமைப்பு

70 மதிப்பெண்களுக்கான கணினி அறிவியல் வினாத்தாள், ஒரு மதிப்பெண் பகுதியில் 15 வினாக்கள், 2 மதிப்பெண் பகுதியில் கொடுக்கப்பட்ட 9 வினாக்களில் 6-க்கு விடையளிப்பது, 3 மதிப்பெண் பகுதியில் 9-க்கு 6-க்கு விடையளிப்பது மற்றும் 5 மதிப்பெண் பகுதியில் ‘அல்லது’ பாணியிலான 5 ஜோடி வினாக்களுடனும் அமைந்திருக்கிறது. 2 மற்றும் 3 வினாக்களில் தலா ஒரு கட்டாய வினா இடம்பெறுகிறது.

ஸ்டார் ஆபீஸ் பற்றிய முதல் 9 பாடங்கள், ‘C++’ பற்றிய அடுத்த 9 பாடங்கள், இதர 3 பாடங்கள் என 3 பகுதிகளாகக் கணினி அறிவியலை அணுகலாம். படிப்பதற்கும் திருப்புத லுக்கும் இதையே பின்பற்றலாம்.

முழுமையாகப் படிப்போம்

கணினி அறிவியல் புத்தகத்தின் பின்பகுதியில் சில ஒரு மதிப்பெண் வினாக்களே உள்ளன. ஒரு மதிப்பெண் பகுதிக்கு முழுமையாகத் தயாராக இவை போதாது. எனவே, அனைத்துப் பாடப் பகுதிகளையும் முழுமையாகப் படிப்பது அவசியம்.

முதல் பகுதியான ஸ்டார் ஆபீஸ் பாடங்களின் அனைத்து மெனுக்கள் (Menus), கட்டளைகள் (Commands), குறுக்குவழி சாவி சேர்மானங்கள் (Shortcut keys) ஆகியவற்றைத் தனியாகத் தொகுத்துப் படிப்பதும் திருப்புதல் செய்வதும் நல்லது. இதே முறையில் விரிவாக்கங்கள் (Expansions), செயல்பாட்டுப் பொத்தான்கள (Function keys) ஆகியவற்றையும் படிக்கலாம். இவ்வாறு தொகுப்பதை அகர வரிசையில் (Alphabetical order) மேற்கொள்வது படிப்பதற்கும் நினைவுகூரவும் எளிமையாக இருக்கும். குறிப்பாக 8-வது பாடத்தின் அனைத்துப் படிவங்களின் பெயர்கள், உருவாக்கப்பட்ட ஆண்டு, உருவாக்கிய நிறுவனம், அதன் பயன்பாடு, நீட்சி ஆகியவற்றை அட்டவணையிட்டுத் தொகுத்துப் படிக்கலாம்.

இரண்டாம் பகுதியான ‘C++’ பாடங்களில் செயற்குறிகளின் செயல்பாடு, மடக்குக் கூற்றுகளின் செயல்பாடு, அணிகளின் உறுப்புகள் எண்ணிக்கை, நினைவகக் கொள்ளளவுகளைக் கணக்கிடும் முறைகள், நிரலில் பயன்படுத்தப்படும் ஆக்கியின் வகை, அடிப்படை இனக்குழு, தருவிக்கப்பட்ட இனக்குழு ஆகியவை முக்கியமானவை.

தொகுத்துப் படிப்போம்

2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளுக்கு இடையே பெரிதாக வேறுபாடு இல்லாதபோதும், 2 மதிப்பெண் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளிப்பதும் அதையே 3 மதிப்பெண் பகுதியில் இரண்டொரு கருத்துகள் கூடுதலாக எழுதுவதும் அவசியம். இப்பகுதியில் வேறுபாடுகள் தொடர்பான வினாக்கள் அதிகம் இடம்பெறும் என்பதால், அவற்றையும் தனியாகத் தொகுத்துப் படிக்க வேண்டும்.

உணர்ந்து படிப்போம்

5 மதிப்பெண் வினாக்களுக்குப் படிக்கும்போது அவற்றில் அடங்கியுள்ள 1, 2, 3 மதிப்பெண் வினாக்களை அடையாளம் கண்டு படிப்பது முக்கியம். ஒரு 5 மதிப்பெண் வினாவை ஓரிரு 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களாகவும் கேட்கலாம் என்பதால், அவற்றுடன் தொடர்புடையவற்றை அடையாளம் கண்டு படிப்பதும் உதவும்.

ஸ்டார் ஆபீஸ் பாடங்களின் முதல் 7 பாடங்களிலிருந்து 3 வினாக்களும், ‘C++’ பாடங்களின் 12 முதல் 18 வரையிலான பாடங்களிலிருந்து 2 வினாக்களும் 5 மதிப்பெண் பகுதியில் எதிர்பார்க்கலாம்.

ஸ்டார் ஆபீஸ் பாட வினாக்களுக்கு மெனுக்கள், கட்டளைகள், குறுக்குவழிகள் உள்ளிட்டவற்றை எழுதுவது அவசியம். அனைத்துக் கட்டளைகளும் ஒரே மாதிரியான உரையைக் கொண்டிருந்தாலும், பயன்பாடுக்கேற்ப அவை வெவ்வேறாகச் செயல்படும். எனவே, கட்டளைகளை அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளுடன் உணர்ந்து படிப்பது நல்லது. சில வினாக்கள் ‘உரையாடல் பெட்டிப் படங்கள்’ மூலமாகவும் கேட்கப்படலாம் என்பதால், அவற்றையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

மொழியால் நேரும் பிழை

கணினி அறிவியல் பாடங்களின் பல சொற்களை நடைமுறைப் பயன்பாட்டிலிருக்கும் ஆங்கில வார்த்தைகளாகவே மாணவர்கள் அறிந்திருப்பார்கள். இதனால் தேர்வுத்தாளில் அவற்றைத் தமிழில் எழுதும் முயற்சியில் சிலர் தவறாக எழுதிவிடுகிறார்கள். ‘சுட்டெலி’ எனத் தமிழில் எழுத வேண்டியதை ‘மௌஸ்’ என்று எழுதினாலும் முழு மதிப்பெண் உண்டு. மொழித் தடுமாற்றத்தில் தவறானதை எழுதினால் மட்டுமே மதிப்பெண் இழக்க நேரிடும்.

அதே போன்று ‘C++’ பகுதியின்

12-ம் பாடத்தில் if, switch, for, while ஆகிய கூற்றுகளை உள்ளபடி படிக்கும் மாணவர்கள், வினாத்தாளில் அவை தமிழில் கேட்கப்படும்போதும் மொழித் தடுமாற்றமும் விடையில் தவறிழைப்பதும் நடக்கிறது. எனவே, வினாத்தாளில் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்ட வினாக்களைச் சரிபார்ப்பதன் மூலம் இந்தத் தடுமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

தேர்ச்சி நிச்சயம்

கணினி அறிவியலில் சுமார் 104 நேரடி சிறு வினாக்கள் அமைந்துள்ளன. இவற்றை மட்டுமே படித்தால் 1, 2, 3 வினாக்களில் குறைந்தது 20 மதிபெண்களுக்கு விடையளிக்கலாம்.

ஸ்டார் ஆபீஸ் பாட வினாக்கள் மெல்லக் கற்கும் மாணவர்கள் விடையளிக்கும் அளவுக்கு எளிமையானது. முந்தைய ஆண்டுகளின் முக்கிய வினாக்களில் பயிற்சி பெறுவதும் உதவும். குறிப்பாக, 7-வது பாடமான தரவுத் தளத்தில் வகைகள், கையாளுதல், அட்டவணை, வினவல், படிவம் ஆகியவற்றைப் படிநிலைகளில் எழுதி வைத்துப் படிக்கலாம்.

கணினி அறிவியலின் சிறப்பம்சமாக, செய்முறைத் தேர்வுக்குப் படிக்கும் ஸ்டார் ஆபீஸ் மற்றும் ‘C++’ நிரல்களை தியரி தேர்வுக்கும் பயன்படுத்தி கணிசமான மதிப்பெண்களை அள்ளலாம்.

குழப்ப வினாக்களில் கவனம்

குழப்பத்துக்கு வழிசெய்யும் ஒரே மாதிரியான இருவேறு வினாக்களைப் படிப்பதில் கவனம் அவசியம். உதாரணத்துக்கு ‘ஆவணத்தைத் தட்டச்சு செய்யும்போது எழுத்துப் பிழையைச் சரி செய்வது எவ்வாறு?’; ‘ஆவணத்தைத் தட்டச்சு செய்த பிறகு எழுத்துப் பிழையை எவ்வாறு சரி செய்யலாம்?’ ஆகிய வினாக்களுக்கு மாணவர்கள் மாற்றி விடையளிக்கிறார்கள்.

மதிப்பு மூலம் அழைத்தல் (call by value ), குறிப்பு மூலம் அழைத்தல் (call by reference) ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை உணர்ந்துகொள்வதும் செயற்கூறு பணிமிகுப்பு (function overloading), ஆக்கி பணிமிகுப்பு (constructor overloading) ஆகியவற்றைப் படிக்கும்போது நிரலின் சிறு வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதும் படிப்பதை எளிமையாக்கும்.

பாடக் குறிப்புகளை வழங்கியவர்: எஸ்.சுரேந்திரன், கணினி அறிவியல் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, மாதவலாயம், கன்னியாகுமரி மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x