Last Updated : 05 Nov, 2018 06:33 PM

 

Published : 05 Nov 2018 06:33 PM
Last Updated : 05 Nov 2018 06:33 PM

தேர்வுக்குத் தயாரா? - உயர் மதிப்பெண்ணுக்கு உதவும் பாடம் (பிளஸ் 2 : உயிரி -தாவரவியல்)

உயிரியல் தேர்வில் விலங்கியலைவிடத் தாவரவியலை மாணவர்கள் எளிமையானதாகக் கருதுவதால், தாவரவியலில் பெறும் உயர் மதிப்பெண்களே உயிரியலின் ஒட்டுமொத்த மதிப்பெண்களை உயர்த்திக்காட்டும்.

புதிய வினாத்தாள் அமைப்பு உயிரியலின் 70 மதிப்பெண்களை, தாவரவியலும் விலங்கியலும் தலா 35 மதிப்பெண்களாகப் பிரித்துக்கொள்கின்றன. ஒரு மதிப்பெண் பகுதியில் 8 வினாக்கள் கேட்கப்படுகின்றன. 2 மதிப்பெண் பகுதியில் கொடுக்கப்பட்ட 6 வினாக்களில் 4 எழுதுமாறும், 3 மதிப்பெண் பகுதி கொடுக்கப்பட்ட 5-லிருந்து 3-க்கு விடையளிக்குமாறும் அமைந்துள்ளன. 5 மதிப்பெண் பகுதியில் ‘அல்லது’ பாணியிலான 2 ஜோடி வினாக்கள் கேட்கப்படுகின்றன.

உயிரி தாவரவியலில் 6 பாடங்கள் உள்ளன. மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையில் கவனித்தால் ஒரு மதிப்பெண் பகுதியானது 1, 5 ஆகிய பாடங்களில் தலா 2 வினாக்களும் ஏனைய பாடங்களில் தலா ஒன்றுமாகக் கேட்கப்பட்டுள்ளன. 2 மதிப்பெண் பகுதியில் 5-வது பாடத்திலிருந்து 2 வினாக்களும் 1, 2, 3, 4 ஆகிய பாடங்களில் தலா 1 வினாவும் கேட்கப்பட்டுள்ளன.

6-வது பாடத்திலிருந்து 2 மதிப்பெண் வினா இடம்பெறவில்லை. ஒட்டுமொத்த வினாத்தாளின் மதிப்பெண்களில் சுமார் 20 சதவீதம் ஆக்கச் சிந்தனைக்கான ‘கிரியேட்டிவ்’ வினாக்களாக எதிர்பார்க்கப்படுகின்றன. இவ்வினாக்கள் 5 மதிப்பெண் தவிர்த்து 1, 2, 3 ஆகிய மதிப்பெண்களில் கலந்திருக்கும். இந்த மதிப்பெண்கள் அடிப்படையிலே மேலும் முக்கியமான பாடக் குறிப்புகளைப் பார்த்துவிடுவோம்.

1 மதிப்பெண் பகுதி

இப்பகுதியில் கிரியேட்டிவ் வினாக்கள் 1 அல்லது 2 இடம்பெறும். புத்தகத்தின் பயிற்சி வினாக்களுக்கு அப்பால் பாடத்தின் உள்ளிருந்தும், வழக்கமான வினாவைச் சிறிது மாற்றியமைத்தும் இவை கேட்கப்படலாம்.

எனவே, பாடத்தை முழுதாகப் படிப்பதும், முக்கியமான கலைச்சொற்கள் வார்த்தை பிரயோகங்கள், அடைப்புக் குறிக்குள் வழங்கப்பட்ட தகவல்கள், தாவரவியல் பெயர்களை அடிக்கோடிட்டுப் படிப்பதும் திருப்புதல் மேற்கொள்வதும் அவசியம். 2, 3, 5 மதிப்பெண் வினாக்களுக்குப் படிக்கும்போது அவற்றிலிருந்து கேட்க வாய்ப்புள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை உணர்ந்து படிப்பது நல்லது.

2, 3 மதிப்பெண் பகுதி

3 மதிப்பெண் வினாவுக்கு இரண்டொரு கருத்துகள் கூடுதலாக எழுதுவது தவிர்த்து, 2, 3 மதிப்பெண் பகுதிகளிடையே பெரிதாக வேறுபாடு இல்லை. 2 மதிப்பெண் பகுதியின் ‘என்றால் என்ன?’ வகை வினாவுக்கு வரையறை எழுதுவதுடன், எடுத்துக்காட்டு இருப்பின் அவற்றைக் குறிப்பிடுவதும் அவசியம். பண்புகள், வகைகள் குறித்த வினாக்களில் ஏதேனும் 2 என்று கேட்டால் மட்டுமே அந்த எண்ணிக் கையில் அவற்றை எழுத வேண்டும். மற்றபடி ஓரிரு உரிய கருத்துகளைக் கூடுதலாக எழுதுவது நல்லது.

3 மதிப்பெண் பகுதியில் இடம்பெறும் கட்டாய வினா, முந்தைய வருடங்களின் வினாத்தாள்களில் முதல் பாடத்திலிருந்தே கேட்கப்பட்டுள்ளது. அதுவே, புதிய வினாத்தாள் மாதிரிகளில் 3-வது பாடத்திலிருந்தும் வந்துள்ளது. எனவே, கட்டாய வினாவைப் பொறுத்தவரை இந்த 2 பாடங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் தரலாம்.

5 மதிப்பெண் பகுதி

1, 2, 4, 5 ஆகிய 4 பாடங்களில் இருந்தே 5 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. இந்த 4 பாடங்களில் முதல் இரண்டு மற்றும் கடைசி 2 பாடங்களில் தங்களுக்கு எளிமையான தலா ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இதன் மூலம் மெல்லக் கற்கும் மாணவரும் 5 மதிப்பெண் பகுதியில் முழு மதிப்பெண் பெற வாய்ப்பாகிறது.

‘அல்லது’ வினாக்களில் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும்போது, படங்களை வரையக் கோரும் வினாவுக்குப் பதிலாக ‘வேறுபாடு எழுதுக’ என்பதான விரைவில் எழுதும் வினாக்களுக்கு முன்னுரிமை தரலாம். வேறு சிலதில் நீண்ட விளக்கத்துக்குப் பதிலாகப் படத்தை மட்டுமே வரையக்கூடிய வினாவைத் தேர்ந்தெடுப்பவர்கள், உரிய சிறு விளக்கத்தை எழுதியபின் படத்தை வரைவது முழு மதிப்பெண் பெற்றுத்தரும்.

படம் வரைதலில் கவனம்

3, 5 மதிப்பெண் பகுதிகளில் இடம்பெறும் படம் வரைதல் வினாக்களில், படத்துடன் சரியாகப் பாகம் குறிப்பதும் அவசியம். இது தவிர எங்கெல்லாம் படம் வரைய வாய்ப்புண்டோ அங்கெல்லாம் வரைவது அவசியம். வினாவைப் பொறுத்துப் படம் வரைந்து பாகம் குறிக்கலாம்; கூடுதலாக விளக்கத்தையும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு ‘குரோமோசோமின் அமைப்பை விளக்குக’ என்ற வினாவுக்கு விளக்கத்துடன் படம் வரைந்து பாகம் குறிக்க வேண்டும்.

‘குரோமோசோமின் அமைப்பை வரைக’ என்ற வினாவுக்கு விளக்கம் தேவையில்லை; படமும், பாகம் குறித்தலும் போதுமானவை. வழக்கமான பென்சில் தவிர்த்து வண்ண பென்சில்களுக்குத் தேர்வில் அனுமதி கிடையாது. அலங்கரிப்பது, அழகுபடுத்துவது என நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

பாகம் குறிக்கையில் நன்கு தெரிந்தவற்றை மட்டுமே குறிக்க வேண்டும். படம் வரையப் போதிய பயிற்சி இருந்தால் மட்டுமே தேர்வறையில் பதற்றமின்றி விரைவாகப் படங்களை வரைய முடியும்.

பொதுவான குறிப்புகள்

பொருளாதார முக்கியத்துவம் தொடர்பான வினாக்களுக்குத் தாவரவியல் பெயர்களை எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும். தாவரத்தின் சாதாரணப் பெயர்களை எழுதினால் மதிப்பெண் குறைய வாய்ப்பாகும். முதல் பாடத்தில் 4 குடும்பங்களின் மலர் வரைபடம் மற்றும் வாய்ப்பாடுகளைப் புரிந்து படிப்பது, தேர்வில் உரிய கலைச்சொல் விளக்கத்தை எழுதவும் உதவும்.

கலைச்சொற்களைக் கூடுமானவரை பொருளறிந்து படித்தால் குழப்பமின்றியும் சுலபமாகவும் படிக்க முடியும். தாவரவியல் பெயர்கள் படிப்பதற்கு எனச் சுவாரசியமான மனப்பாட முறைகளைச் சுயமாக உருவாக்கிக் கொள்ளலாம். தாவரவியல் பெயர்களைத் தனியாகத் தொகுத்து வைத்துக்கொண்டு, தினசரி ஒருமுறை பார்த்துவருவதும் திருப்புதலுக்குக் கைகொடுக்கும்.

பாடக்குறிப்புகளை வழங்கியவர்: எஸ்.மலர் விழி, முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, செண்பகராமன்புதூர், கன்னியாகுமரி மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x