Last Updated : 30 Oct, 2018 12:59 PM

 

Published : 30 Oct 2018 12:59 PM
Last Updated : 30 Oct 2018 12:59 PM

காந்தி 150: காந்தியின் கேள்விகளைச் சுமக்கும் நவகாந்தியவாதி!

‘அதோ ஒரு காந்தி மலக்கூடையைச் சுமந்து செல்கிறார். மற்றுமொரு காந்தி சாக்கடை அடைப்பை அகற்றுகிறார். அதோ ஒரு காந்தி சடலங்களை எரியூட்டுகிறார். எரிந்த சடலங்களின் மிஞ்சிய சாம்பலில் இருந்து ஒரு காந்தி எழுந்துவருகிறார். அவ்வுலகம் காந்திகளால் நிறைந்தது…’ ‘ஆரோகணம்’ சிறுகதையின் கடைசி சில வரிகள்.

இறந்த பின்பு காந்தி என்னவானார் என்ற கற்பனையின் நீட்சியாக ‘ஆரோகணம்’, மேலிருந்து கீழே பாயும் அதிகாரத்திலும் கண்காணிப்பிலும் சிக்கித் தவிக்கும் மக்களின் வாழ்க்கையைக் குறியீட்டின் வழியாகச் சித்தரிக்கும் ‘கூண்டு’ உள்ளிட்ட சிறுகதைகளின் தொகுப்பு ‘அம்புப் படுக்கை’. இப்படி காந்தியும் காந்தியமும் தோய்ந்து படைக்கப்பட்ட ‘அம்புப் படுக்கை’ சிறுகதைத் தொகுப்பை எழுதியதற்காக இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி வழங்கும் ‘யுவ புரஸ்கார்’ விருது சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

காரைக்குடியில் வசிக்கும் இந்த ஆயுர்வேத மருத்துவர் கடந்த ஏழாண்டுகளாக ‘காந்தி இன்று’ என்ற வலைப்பூவை நடத்திவருகிறார். அதில் இவர் மட்டுமின்றி காந்தியவாதிகள், காந்தியச் சிந்தனையாளர்கள் பலரும் எழுதிவருகிறார்கள்.

ஓர் இளைஞரை காந்தி ஏன், எப்படி ஈர்த்தார். எழுத்திலும் செயலிலும் காந்தியின் கொள்கைகளை இவர் பிரதிபலிப்பது ஏன், எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய உலகமயமாக்கல் சூழலுக்குக் காந்தி பொருந்துவாரா என்பது உள்ளிட்டவை குறித்துப் பேசினோம்…

சிந்தனையாளர்கள் அறிமுகப்படுத்திய காந்தி

“புதுக்கோட்டை அருகில் உள்ள அரிமளம் கிராமத்தில் பிறந்து, காரைக்குடியில் வளர்ந்து, சென்னையில் ஆயுர்வேதம் படித்து காரைக்குடிக்கே திரும்பியவன் நான். வாசிப்பில் ஆர்வம் சிறுவயதிலேயே தொடங்கிவிட்டாலும் எழுத்துப் பணியில் இறங்கியது அன்னா ஹசாரே இயக்கம் பரவிய காலகட்டத்தில்தான்.

அவருடன் நேரடியான தொடர்பு இல்லாதபோதும் அவருக்கு ஆதரவாகப் பல கட்டுரைகளை என்னுடைய வலைப்பூவில் எழுதிவந்தேன். ஒரு கட்டத்தில் அந்த இயக்கம் நீர்த்துப்போனதால் மனதளவில் அதிலிருந்து முற்றிலுமாக விலகித் தீவிரமான வாசிப்பையும் எழுத்தையும் தேடிச் சென்றேன். 2011-ல் ‘காந்தி இன்று’ வலைப்பூவை நானும் நண்பர் ‘நட்பாஸ்’ என்ற பாஸ்கர் நடராஜனும் சேர்ந்து ஆரம்பித்தோம்.

காந்தி தொடர்பாக இணையத்தில் பதிவேற்றப்படும் ஆய்வுக் கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பிரதியெடுத்துப் பதிவிடுவது, சுட்டிகளைப் பதிவேற்றுவது என்பதாகத்தான் தொடங்கினோம்.

இப்படித் தேடிப் படித்தபோது மகரந்த் பரஞ்சபே, ஆஷிஷ் நந்தி, ராமச்சந்திர குஹா உள்ளிட்டோர் அறிமுகப்படுத்திய காந்தி என் ஆளுமை மீது மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்தினார். அடுத்த கட்டமாக காந்தி குறித்த இவர்களுடைய கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினோம். வெறுமனே மொழிபெயர்ப்பாக இல்லாமல் அந்தக் கட்டுரைகளில் உள்ள கருத்துகள் சம்பந்தமாக எங்களுடைய எண்ணங்களையும் சேர்த்து விவாதப் புள்ளிகளை உருவாக்க முயன்றோம்” என்கிறார் சுனில் கிருஷ்ணன்.

கதராடையும் குல்லாவும்

காந்தியச் சிந்தனைகளை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டபோது அவரைப் புரட்டிப்போட்ட சிந்தனைகளை எதிர்கொண்டது உண்டா என்று கேட்டபோது, “காந்தியவாதி என்றாலே கதராடையும் குல்லாவும் அணிந்திருப்பார் என்ற எண்ணம் நம் மனதில் பதிந்துவிட்டது.

ஆனால், நவீன காந்தியவாதிக்கு இத்தகைய இறுக்கமான காந்திய அடையாளங்கள் தேவை இல்லை என்று, ‘நவகாந்திய வாழ்க்கை முறை’ மூலம் புரியவைத்தவர் எழுத்தாளர் மகரந்த் பரஞ்சபே. அடையாளங்களுக்குப் பதிலாக காந்தியின் கேள்விகளைத் தனதாக்கிக்கொள்பவரே நவகாந்தியவாதி.

தன்னுடைய எழுத்துகள் மூலம் ‘தேவைக்கு மட்டுமே பூமி தரும், பேராசைக்குத் தராது’ என்ற சூழலியல் சார்ந்த புரிதலையும் அரசுக்கும் மக்களுக்குமான உறவு, அதிகாரம் பரவலாக்கப்பட்ட உறவாக இருக்க வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளையும் முன்வைத்தார். அதைப் படித்தபோது அடையாளங்களைவிட உள்ளடக்கம் முக்கியம் என்பதை உணர்ந்தேன்” என்கிறார்.

இதேபோல காந்தியை ரத்தமும் சதையுமான மனிதராக, குறும்புக்காரக் கிழவராக அணுக ராமச்சந்திர குஹாவின் எழுத்துகள் உதவுகின்றன என்கிறார் சுனில் கிருஷ்ணன். காந்தியின் சித்தாந்தத்தை அலசும் புத்தகங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி காந்தியின் வாழ்க்கைக் கதை தொடர்பாக இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கும் புத்தகங்கள் குறித்தும் ‘காந்தி இன்று’ வலைப்பூவில் இவர் பதிவேற்றிவருகிறார்.

மாணவர்களைத் தேடி

எழுத்தைக் கடந்தும் சமூகத்தில் காந்தியச் சிந்தனையைக் கொண்டு சேர்க்க முயன்றுவருகிறார். பள்ளி, கல்லூரிகளில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்திவருகிறார். ‘பிளாஸ்டிக் தவிர்ப்போம்’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி மாணவர்களோடு இணைந்து தன்னுடைய சுற்றுப்புறத்தின் தெருவோரத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளுதல், அப்பகுதி வாழ் மக்களின் வீடுதோறும் சென்று பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை சுனில் முன்னெடுத்துவருகிறார்.

இன்றும் காந்தி தேவையா?

சூழலியல், கல்வி, பொருளாதாரக் கொள்கைகள், வாழ்க்கை முறை….என வெவ்வேறு கோணங்களில் காந்தியை ‘காந்தி இன்று’ கடந்த ஏழாண்டுகளாக விவாதித்துவருகிறது. இப்படிப்பட்ட பெரிய திட்டங்களில் அல்லாமல், இன்றைய அன்றாடத்தில் காந்தி தேவையா என்ற கேள்விக்குப் பதில் இருக்கவே செய்கிறது என்று உறுதியாகச் சொல்கிறார் சுனில் கிருஷ்ணன்.

“இன்று எதற்கெடுத் தாலும் எதிரியைக் கட்டமைக்கும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் உலகம் துருவமடைந்துகொண்டே போகிறது. ஆனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடும்போதுகூட விடுதலை என்பது இந்தியர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஆங்கிலேயர்களுக்கும் முக்கியம் என்றவர் காந்தி. அவரிடம் எதிர்நிலைகளுக்கு வேலை இல்லை.

உதாரணத்துக்கு, தீண்டாமைக்கு சாஸ்திரங்களில் விளக்கம் இருக்கிறது என்றவர் லால் நாத். அவர், தீண்டாமையை எதிர்த்து காந்தி பேசிய இடங்களுக்கெல்லாம் சென்று கறுப்புக்கொடி காட்டியவர். காந்தி அஜ்மீர் சென்றபோது, ‘நீங்கள் பேசும் மேடையில் எங்களுடைய தரப்பையும் சொல்லவும் மேடை தாருங்கள்’ என்று கேட்ட லால் நாத்துக்கு அனுமதி அளித்தார் காந்தி. ஆனால், அந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடையே சண்டை மூண்டது.

லால் நாத் பேசவிடாமல் தாக்கப்பட்டார். அப்போது எதிர்த் தரப்பையும் கேட்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தி, லால் நாத் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்தார். இப்படி ‘தம் மக்கள்/ பிறர் மக்கள்’ என்ற வேற்றுமை பாராதவர் காந்தி.

உற்றுநோக்கினால் இதுவே மிகச் சிறந்த தலைமைப் பண்பு. தன்னம்பிக்கை மிக்க தலைவனுக்கு எதிரி தேவை இல்லை. அவர் தன்னுடைய பலத்தை நம்புவார். தன்னுடைய பலவீனத்தை எதிர்த்துப் போராடுவார்.

சுயசோதனை, சுயதூய்மை, தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளுதல், பொறுப்பேற்றுக்கொள்ளுதல் ஆகிய பண்புகளை ஏற்று நிற்பார். இத்தகைய காந்தியப் பண்புகள் பொருந்தியவரே இன்றைய உலகுக்கு வழிகாட்டக்கூடியவர் என்பதால் காந்தி இன்று அவசியம்” என்கிறார் காந்தியின் கேள்விகளைச் சுமக்கும் இந்த நவகாந்தியவாதி!

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x