Last Updated : 30 Oct, 2018 12:59 PM

 

Published : 30 Oct 2018 12:59 PM
Last Updated : 30 Oct 2018 12:59 PM

தேர்வுக்குத் தயாரா? - ஒருங்கிணைத்துப் படிப்பது உதவும் (பிளஸ் 2 வேதியியல்)

வேதியியல் வினாத்தாள் மொத்தம் 70 மதிப்பெண்களுக்கானது. அதில் முதல் பகுதி, 15 ஒரு மதிப்பெண்களுக்கானது. தலா 2 மதிப்பெண்களுக்கான இரண்டாவது பகுதியில் கொடுக்கப்பட்ட 9 வினாக்களில் 6-க்குப் பதிலளிக்க வேண்டும்.

தலா 3 மதிப்பெண்களுக்கான மூன்றாவது பகுதியும் அதே போன்று 9-ல் 6-க்கு விடையளிக்க வேண்டும். நான்காவது பகுதியில், ‘அல்லது’ பாணியிலான தலா 5 மதிப்பெண்களுக்கான ஐந்து வினாக்கள் இடம்பெற்றுள்ளன. பகுதி 2, 3-ல் தலா ஒரு கட்டாய வினா இடம்பெறுகிறது.

வேதியியல் பாடத்தைப் பொறுத்தவரை, ஒரு மதிப்பெண் தவிர்த்து இதர மதிப்பெண் வினாக்களுக்குத் தயார் செய்யும்போது ஒருங்கிணைந்த தயாரிப்பாக மேற்கொள்ளலாம். அதாவது குறிப்பிட்ட சிறு / குறுவினா 2, 3 மதிப்பெண் பகுதியில் எதில் வேண்டுமானாலும் இடம்பெறலாம் என்பதையும், ஒரு 5 மதிப்பெண் வினாவானது இரண்டு 3 மதிப்பெண் வினாவாகக் கேட்கப்படுவதையும் மனத்தில் வைத்துப் படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பாட வாரியாக முக்கியக் குறிப்புகளைப் பார்க்கலாம்.

சிறு / குறு வினாக்களில் முக்கியமானவை

முழு மதிப்பெண்களுக்குப் பாட நூல் முழுமையும் படித்தாக வேண்டும் என்றாலும், திருப்புதலின்போதும் தேர்வு நேரத்திலும் முக்கிய வினாக்களைக் கூடுதல் கவனம் தந்து படிப்பது நல்லது. அத்தகைய முக்கிய சிறு / குறு வினாக்களுக்கான பாடப் பகுதிகளை இங்கே பார்க்கலாம்.

பாடம் 1: டி-பிராக்ளெ சமன்பாடு, நைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறின் இனக்கலப்பைக் கண்டறியும் ஆற்றல் வரைபடம், ஹைட்ரஜன் பிணைப்பு.

பாடம் 2: தனிமங்களின் அயனியாக்கும் திறனை ஒப்பிடும் வினாக்கள், எலெக்ட்ரான் நாட்டம், எலெக்ட்ரான் கவர்தன்மை.

பாடம் 3: பாஸ்பரஸின் சேர்மங்கள், மந்தவாயுக்கள் பகுதிகளிலிருந்து தலா ஒரு 3 மதிப்பெண் வினா இடம்பெறலாம். புளூரின் ஆக்ஸிஜனேற்ற தன்மை, பாஸ்பரஸின் சேர்மங்கள், பாஸ்பீன் சேர்மத்தின் பயன்களும் ஒடுக்கும் தன்மையும்.

பாடம் 4: d-தொகுதி தனிமங்களின் பொதுப் பண்புகளில் இருந்து ஒரு வினாவுக்கு வாய்ப்புண்டு.

பாடம் 7: சிதைவு மாறிலி, Q மதிப்புகளின் கணக்குகள், உட்கரு வினை வகைகள், ஹைட்ரஜன் குண்டு, கதிரியக்க கார்பன் கால நிர்ணய முறை.

பாடம் 8: கண்ணாடியின் பண்புகள், அதிமின் கடத்திகள், ஸ்காட்கி குறைபாடு, பிராங்கல் குறைபாடு, உலோகப் படிகங்கள், மூலக்கூறு படிகங்கள்.

பாடம் 9: என்ட்ரோப்பி மாற்றங்கள், டிரவுட்டன் விதி கணக்கீடுகள், திட்ட என்ட்ரோப்பி வரையறை , வினை நிகழும் தன்மை.

பாடம் 10: வினைக்குணகம், வினைவேக மாறிலி, லீசாட்லியர் கொள்கை.

பாடம் 11: வினைபடி அரைவாழ்வு காலம் கணக்குகள், அர்ஹீனியஸ் சமன்பாடு, கிளர்வுகொள் ஆற்றல், போலிமுதல்வகை வினைகள்.

பாடம் 12: கூழ்மங்களின் பண்புகள் பயன்கள் மற்றும் வினையூக்கியின் வகைகள், பால்மங்கள்.

பாடம் 13: pH கணக்குகள், தாங்கல் செயல்முறைகள், பாரடே விதிகள், கோல்ராச் விதி, நியமக் கடத்துதிறன், சமானக் கடத்துதிறன், குறைகடத்திகள்.

பாடம் 15: E, Z மாற்றியங்கள், மீசோ கலவை, சுழிமாய் கலவை, எனஸ்சியோமர்.

பாடம் 16: டவ் முறை, ரீமன் டீமன், கோல் வினைகள்.

பாடம் 19: ஹைட்ராகஸி, ஆக்ஸாலிக், லாக்டிக், சாலிசிலிக் அமிலங்கள் தயாரிப்பு.

பாடம் 20: பென்சீன் டையசோனியம் குளோரைடு, அனிலின் சேர்மங்களின் வினைகள்.

பாடம் 22: மருத்துவத் துறையில் வேதியியலின் பயன்கள், பியூனா ரப்பர்கள், சாயங்கள்.

5 மதிப்பெண் முக்கியப் பாடப்பகுதிகள்

கனிம வேதியியலில் 1, 2, 5, 6, 7 பாடங்களும் இயற்பியல் வேதியியலில் 8, 9, 10, 12, 13, 14 பாடங்களும் கரிம வேதியியலில் 17, 21, 22, பாடங்களும் முக்கியமானவை. மேலும் 5 மதிப்பெண் பகுதிக்கெனப் பாடவாரியாகக் கவனம்கொள்ள வேண்டியவற்றையும் பார்க்கலாம்:

பாடம்1-ல்  ‘ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜனின் மூலக்கூறு உருவாதலை மூலக்கூறு ஆர்பிட்டல் கொள்கையின் படி விளக்கும்’ வினாவுக்கும்  ‘மூலக்கூறு ஆர்பிட்டல் கொள்கை’ வினாவுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து படிக்க வேண்டும். அதே போன்று பாடம் 5-ல் லாந்தனைடுகள்-ஆக்டினைடுகள் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து படிக்க வேண்டும். பாடம் 6: ஹீமோகுளோபின்கள், குளோரோபில் பகுதி அல்லது அணைவுச் சேர்மங்கள் பகுதியிலிருந்து ஒரு 5 மதிப்பெண் வினாவுக்கு வாய்ப்புள்ளது.

பாடம் 9: வெப்ப இயக்கவியலின் பல்வேறு கூற்றுகள், சிறப்பியல்புகள்.

பாடம் 10: Kp, Kc தொடர்பை வருவித்தல், அம்மோனியா உருவாதல் (ஹேபர் முறை).

பாடம் 11: வினைவகையின் சிறப்பியல்புகள், பல்வேறு சமன்பாடுகளின் வருவித்தல்கள்.

பாடம் 14: IUPAC வழிமுறைகள், emf கணக்கீடுகள், நெர்ன்ஸ்ட் சமன்பாடு வருவித்தல்.

பாடம் 17: டைஎத்தில் ஈதர், அனிசோல் தயாரிப்பு முறைகள், வேறுபாடுகள், C4H10ன் மாற்றியங்கள்.

பாடம் 18: கான்னிசாரோ, ஹாப்மென் புரோமமைடு, எஸ்டராக்குதல், கோல் வினைகள்.

பாடம் 19: HVZ வினை, ப்ரிடல் கிராப்ட்ஸ் அசிட்டைலேற்ற வினைகள்.

பாடம் 22: மயக்க மருந்துகள் பற்றிய குறிப்புகள், ராக்கெட் எரிபொருள் பண்பு கள் சிறப்பியல்புகள், பியூனா ரப்பர்கள்.

பொதுவான கவனக் குறிப்புகள்

வேதியியலில் சமன்பாடுகளை எழுதிப் படிப்பது அவசியம். கரிம வேதியியலில் சரியான சமன்பாடுகளை எழுதுவதன் மூலம், குறைவான நேரத்தில் விடையளித்து முழு மதிப்பெண்களைப் பெற முடியும். கனிம வேதியலின் வினாக்களுக்குச் சமன் செய்யப்பட்ட அல்லது சமன் செய்யப்படாத சமன்பாடுகளைக் கண்டிப்பாக எழுத வேண்டும்.

வினைத் தொகுதி மாற்றங்கள், வினைகளுக்கான வினைக்காரணி, பெயரிடப்பட்ட வினைகள் ஆகியவற்றைத் தொகுத்துப் படிக்கலாம். இயற்பியல் வேதியியல் பாடத்தின் முக்கியமான வார்த்தைகளை (key word) விடையளிப்பில் பயன்படுத்த வேண்டும். முந்தைய பொதுத் தேர்வுகளின் வினாத்தாளில் இருந்து திருப்புதல் மேற்கொள்வது தேர்வுக்கான முறையான பயிற்சியாக அமையும்.

 

தேர்ச்சி நிச்சயம்

அனைத்துப் பாடங்களின் ஒரு மதிப்பெண் வினாக்களுடன் 5, 7, 8, 9, 10, 11, 13, 15, 22 ஆகிய பாடங்களின் 2, 3, 5 மதிப்பெண் வினாக்களைக் குறிவைத்துப் படித்தால் எளிதாக 35 மதிப்பெண்கள் பெற முடியும். இவற்றுடன் 2, 3, 4, 6, 16, 19 பாடங்களையும் சேர்த்துக்கொண்டால் சுலபமாக 50 மதிப்பெண்கள் பெறலாம்.


exam-2jpgவேதியியல் பாடத்திற்கான முக்கியக் குறிப்புகளை வழங்கியவர் முனைவர் ஆர்.உவரிஸ்குமார். முதுநிலை ஆசிரியர் (வேதியியல்), நகராட்சி மேல்நிலைப் பள்ளி, சேலையூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x