Last Updated : 23 Oct, 2018 11:40 AM

 

Published : 23 Oct 2018 11:40 AM
Last Updated : 23 Oct 2018 11:40 AM

தேர்வுக்குத் தயாரா? - எழுபதுக்கு எழுபது எளிது (பிளஸ் 2- இயற்பியல்)

இயற்பியலில் முழு மதிப்பெண்களைப் பெற பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படைக் கருத்துகளைப் புரிந்து கொள்வதும், கணிதவியலின் முக்கியப் பகுதிகளான வெக்டர்கள், வகையீடு, தொகையீடு போன்றவற்றில் அடிப்படை அறிவு பெற்றிருப்பதும் அவசியமாகும்.

புதிய மாதிரி வினாத்தாள் அடிப்படையிலான இயற்பியல் தேர்வு 2.30 மணி நேரத்தில் 70 மதிப்பெண்களுக்கு விடையளிக்கும்படி அமைந்துள்ளது. மொத்தமுள்ள 10 பாடங்களில் இருந்து 1,2,3 மற்றும் 5 என மதிப்பெண்கள் அடிப்படையில், நான்கு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படுகின்றன.

ஒரு மதிப்பெண் பகுதி- பொருளுணர்ந்து படிக்கவும்

15 ஒரு மதிப்பெண் வினாக்கள், 1,2,4,8,9 ஆகிய பாடங்களில் இருந்து தலா 2 வினாக்களும் ஏனைய பாடங்களில் இருந்து தலா ஒரு வினாவும் கேட்கப்படலாம். முதல் 5 வினாக்களைப் பாட இறுதியில் வழங்கப்பட்டுள்ள தன் மதிப்பீடு பகுதியிலிருந்து எதிர்பார்க்கலாம்.

பெரும்பாலான வினாக்கள் பாட நூலில் உள்ள சூத்திரங்கள், விதிகள் மற்றும் ‘நிறுவப்பட்ட சூத்திரங்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான கருத்துகள்’ ஆகியவற்றிலிருந்து மாணவர்கள் சிந்தித்து விடையெழுதும்படி அமைந்திருக்கும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முழுமையாகப் பதிலளிக்க, பாடம் முழுக்க அனைத்துப் பகுதிகளையும் நன்றாக வாசித்து பொருளுணர்ந்து படிப்பது அவசியம்.

2, 3 மதிப்பெண் பகுதிகள்- கட்டாய வினாவில் கவனம்

மொத்தமுள்ள 10 பாடங்களில் ஏதேனும் 9 பாடங்களில் இருந்து தலா ஒரு கேள்வி கேட்கப்படும். 9 வினாக்களில் ஒன்று கட்டாய வினாவாகும். இரு பகுதிகளிலும் கட்டாய வினா எந்தப் பாடத்திலிருந்தும் கேட்கப்படலாம். பாடப்பகுதியின் அனைத்து தீர்க்கப்பட்ட கணக்குகளையும் தொகுத்துப் படிப்பதன் மூலம் அந்தக் கணக்குகளுக்கோ அவை சார்ந்த வேறு கணக்குகளுக்கோ விடையளிக்க முடியும்.

2 மதிப்பெண் பகுதியின் 9 வினாக்களில் ஒன்று, கொடுக்கப்பட்ட வரைபடத்தில் இருந்து விடையைக் கண்டுபிடித்து எழுதுவதாக அமைந்திருக்கும். 3 மதிப்பெண் பகுதியின் 2 வினாக்கள் 9-வது பாடத்தில் இருந்தே கேட்கப்பட வாய்ப்புள்ளது. பொருளின் பண்புகள் மற்றும் பயன்கள் குறித்து தலா ஒரு வினா இடம்பெற வாய்ப்புள்ளது.

5 மதிப்பெண் பகுதி- தன்மதிப்பீடு வினாக்கள் உதவும்

தலா 5 மதிப்பெண்களுடன் ‘அல்லது ’ பாணியிலான 5 ஜோடி வினாக்கள் இப்பகுதியில் இடம்பெறும். மொத்தம் 10 வினாக்கள் என்பதால் 10 பாடங்களில் இருந்தும் தலா ஒரு வினா இடம்பெற வாய்ப்புள்ளது. முழு மதிப்பெண்ணை இலக்காகக் கொண்ட மாணவர்கள் அனைத்துப் பாடங்களின் 5 மதிப்பெண் வினாக்களையும் படித்தாக வேண்டும். பெரும்பாலான வினாக்கள் புத்தகத்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தன்மதிப்பீடு பகுதியில் இருந்தே கேட்கப்படுவதால் அவற்றில் கூடுதல் திருப்புதல் மேற்கொள்வது அவசியம்.

எப்படிப் படிக்கலாம்?

இப்போது தொடங்கி முறையாகத் திட்டமிட்டால் இயற்பியலில் உயர் மதிப்பெண்களை எட்ட முடியும். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி வினாக்கள் அனைத்துக்கும் தீர்வு கண்டு, அவற்றை முறையாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் தொகுத்து வைத்துக்கொண்டால் படிப்பதற்கும், திருப்புவதற்கும் பெரிதும் உதவும்.

இதே போன்று பாடங்களில் வரும் சூத்திரங்களையும் தொகுத்துப் படிக்கலாம். காஸ் விதி, ஆம்பியர் விதி, லென்ஸ் விதி என அறிஞர்கள் பெயருடனான ஒரு ’விதி குறித்த வினா’ 2 மதிப்பெண் பகுதியில் கேட்கப்படும் என்பதால் அவற்றையும் தொகுத்துப் படிக்கலாம்.

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள 3 மாதிரி வினாத்தாள்கள், இதர தேர்வுகளின் வினாத்தாள்களையும் படிப்பதுடன், மாதிரி தேர்வுகளை அவ்வப்போது எழுதிப் பார்ப்பது நல்லதொரு பயிற்சியாகும்.

தேர்வறைக்கான கவனக் குறிப்புகள்

மொத்தமுள்ள 150 நிமிடங்களில் 70 மதிப்பெண்களுக்கு விடையளித்தாக வேண்டுமென்பதால், ஒரு மதிப்பெண்ணுக்கு 2 நிமிடங்கள் என்ற அளவில் நேர மேலாண்மையைத் திட்டமிடலாம். நாள்போக்கில் தனக்கான எளிய மற்றும் கடினப் பகுதிகளை அறிந்துகொண்டதும் அதற்கேற்றவாறு இந்த நேர மேலாண்மையில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

5 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கையில், தேவையான இடங்களில் விளக்கப் படங்களையும் எடுத்துக்காட்டுகளையும் குறிப்பிடுவது அவசியம். விளக்கப் படத்தில் பாகங்களைச் சரியாகக் குறிப்பதும் முக்கியம். அனைத்து இயற்பியல் அளவுகளுக்குமான அலகுகளை அறிந்து வைத்திருப்பதுடன், கணக்கின் நிறைவுப் பகுதி போன்ற அவசியமான இடங்களில் அவற்றைக் குறிப்பிடுவது முக்கியம்.

எழுபதுக்கு எழுபது எளிது

முழு மதிப்பெண்ணைக் குறிக்கோளாகக் கொண்ட மாணவர்களுக்கு 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதியில் இடம்பெறும் தலா ஒரு கட்டாய வினா சவாலாக உள்ளது. இவற்றுடன் 2, 3 மதிப்பெண் வினா பகுதியில் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களை எதிர்கொள்ள போதிய தயாரிப்பும் பயிற்சியும் திருப்புதலும் அவசியமாகின்றன.

அம்மாதிரியான பாடப்பகுதிகளைக் கவனமாக வாசித்து குறிப்புகள் எடுத்துக்கொள்வதும், சுயமான கையெழுத்து வழிகாட்டியைத் தயார் செய்வதும் இந்தச் சவால்களைச் சமாளிக்க உதவும்.

பல ஒரு மதிப்பெண் வினாக்கள், நேரடியாக விடையளிப்பதாக அல்லாது சிந்தித்து எழுதுவதாக அமைந்துள்ளது. பாடம் முழுமைக்கும் அவ்வப்போது வாசிப்பதும், முக்கியக் கருத்துகளையும் சூத்திரங்களையும் புரிந்துகொள்வதும் ஒரு மதிப்பெண் பகுதியில் இழப்பைத் தவிர்க்கும்.

தேர்ச்சி நிச்சயம்

இயற்பியல் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற 70-க்கு 15 மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும். 2 தொகுதிகளிலும் படிப்பதற்கு எளிதான ஏதேனும் தலா ஒரு பாடத்தைத் தேர்வு செய்து அவற்றின் அனைத்து 5 மதிப்பெண் வினாக்களையும் படித்தாலே, இரண்டு 5 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளித்து விடலாம்.

அறிஞர்கள் பெயரில் இருக்கும் விதிகளில் ஒன்று 2 மதிப்பெண் பகுதியில் கேட்கப்படுவதால் அவற்றை மட்டும் குறிவைத்துப் படிக்கலாம். பாடங்களின் பண்புகள், பயன்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்துப் படித்தாலே 2 மூன்று மதிப்பெண் வினாக்களுக்குப் பதிலளிக்கலாம். ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் கொடுக்கப்பட்ட தன்மதிப்பீட்டு வினாக்களைப் படித்தாலே 5 ஒரு மதிப்பெண் வினாக்களை எதிர்கொள்ளலாம்.

இவற்றின் மூலம் எளிதாக 20 மதிப்பெண்களை உறுதி செய்யலாம். மேலும், இதர வினாக்களில் தெரிந்த அளவுக்கு விடைப்பளிப்பதன் மூலம் கூடுதல் மதிப்பெண்களையும் பெறலாம்.

புளூ பிரிண்ட் இல்லாதபோதும், வினாத்தாள் அமைப்பின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்துக்கும் சராசரியாக 10 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருப்பதைக் கணிக்க முடிகிறது. எனவே முக்கிய வினாக்களைத் தெரிவு செய்து படிப்பதைக் காட்டிலும், பிடித்த மற்றும் எளிமையான பாடங்களைக் குறிவைத்து அதிலுள்ள அனைத்து வினாக்களுக்கும் படிப்பதன் மூலம் பாடத்துக்கு 10 மதிப்பெண்களை உறுதி செய்யலாம்.

இயற்பியல் பாடத்துக்கான முக்கியக் குறிப்புகளை வழங்கியவர் ஞா.பெர்ஜின். முதுநிலை இயற்பியல் ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சாயல்குடி, ராமநாதபுரம் மாவட்டம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x