Last Updated : 16 Oct, 2018 11:31 AM

 

Published : 16 Oct 2018 11:31 AM
Last Updated : 16 Oct 2018 11:31 AM

தேர்வுக்குத் தயாரா? - சுலபமாக ‘சென்டம்’ அடிக்கலாம்! (பிளஸ் 2 கணிதம்)

கணக்குப் பாடம் என்றாலே ‘நூற்றுக்கு நூறு’ மதிப்பெண்கள் நினைவுக்கு வரும். ஆனால், புதிய வினாத்தாள் மாதிரியில் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், புத்தகம் முழுவதையும் படித்தாக வேண்டிய அவசியம் ஆகியவை இந்த சென்டம் கனவுக்குச் சவாலாக உள்ளன. கணக்குப் பாடத்தில் இப்போதிருந்தே உரிய தயாரிப்புகளை மேற்கொண்டால் இந்தச் சவால்களைச் சமாளித்துவிடலாம்.

புதிய வினாத்தாள் அமைப்பு

புதிய கணக்குப் பாட வினாத்தாள், 20 ஒரு மதிப்பெண் வினாக்களுடன் தொடங்குகிறது. அடுத்த பகுதியான 2 மதிப்பெண் வினாக்களில் கொடுக்கப்பட்ட 10 வினாக்களில் 7-க்குப் பதிலளிக்க வேண்டும். 3 மதிப்பெண் வினாக்களில் கொடுக்கப்பட்ட 10 வினாக்களில் இருந்து 7-க்கு விடையளிப்பதாக உள்ளது. நிறைவாக வரும் நான்காம் பகுதியில், ‘அல்லது’ வினாவாக 7 வினாக்கள் தலா 5 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படுகின்றன. இந்த வகையில் 1 மதிப்பெண் வினா பகுதியில் 20, 2 மதிப்பெண்களுக்கு 14, 3 மதிப்பெண் வினாக்களுக்கு 21, 5 மதிப்பெண் வினாக்களுக்கு 35 என மொத்தம் 90 மதிப்பெண்களுக்குக் கணக்குப் பாட வினாத்தாள் அமைந்துள்ளது.

ஒரு மதிப்பெண்: உள் வினாக்கள் உஷார்

கணக்குப் பாடநூல் இரண்டு தொகுதிகளாக மொத்தம் 10 பாடங்களுடனும் அமைந்துள்ளது. இந்த 2 புத்தகங்களின் பிற்பகுதியிலும் முறையே 121, 150 என மொத்தம் 171 ஒரு மதிப்பெண் வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது அவசியம்.

வினாத்தாளின் 20 ஒரு மதிப்பெண் வினாக்களில் 12 வினாக்கள்வரை இந்த 171-ல் இருந்து கேட்கப்படலாம். எஞ்சிய 8 இந்தப் புத்தக வினாக்களுக்கு அப்பால் பாடப் பகுதியின் உள்ளிருந்தோ வழக்கமான வினாவில் சிறு மாற்றங்களுடன் ‘உருவாக்கப்பட்ட வினாக்களாகவோ’ கேட்கப்படலாம்.

உயர் மதிப்பெண் அள்ளிவிடும் மாணவருக்கும் இந்த 8 வினாக்கள் சவாலாக இருக்கும். எனவே, மேற்கண்ட 171 வினாக்களுக்குத் தயாராகும்போது மனப்பாடம் செய்வதைத் தவிர்த்துவிட்டு, கணக்குகளைப் புரிந்து முறையாகத் தீர்ப்பதில் பயிற்சி பெற வேண்டும். இத்தகைய பயிற்சியே ‘உருவாக்கப்படும் வினாக்களை’ எதிர்கொள்ளவும் கைகொடுக்கும். மேலும் பாடப் பகுதிகளில் ‘குறிப்பு’ என்று தனியாக வழங்கப்பட்டுள்ளதையும் கவனித்துப் படித்தால் இந்த 8 வினாக்களின் சவாலைச் சமாளித்துவிடலாம்.

2, 3 மதிப்பெண்: கட்டாய வினாவில் கவனம்

அடுத்து வரும் 2 மதிப்பெண் பகுதியில் கொடுக்கப்பட்ட 10 வினாக்களில் ஒரு கேள்வி (வினா எண்.30) கட்டாய வினா. இது எந்தப் பாடத்திலிருந்தும் கேட்கப்படலாம். மேலும் 10 பாடங்களிலிருந்து தலா ஒரு வினா இடம்பெறும் வகையில் உள்ளதால், இந்தப் பகுதியில் முழுமையாக மதிப்பெண் பெற அனைத்துப் பாடங்களையும் படிப்பது அவசியம்.

விடையளிக்க வேண்டிய 7 வினாக்களில் மூன்றேனும் வழக்கமான புத்தக வினாக்களுக்கு அப்பாலிருந்து கேட்கப்பட வாய்ப்புண்டு. இதுபோல 3 மதிப்பெண் பகுதியும் அமைந்துள்ளது. விடையளித்தாக வேண்டிய 7 வினாக்களில் ஒன்று (வி.எண்.40) கட்டாய வினா.

5 மதிப்பெண்: பெரிய பாடத்தில் கூடுதல் கவனம்

‘அல்லது’ மாதிரியிலான 7 வினாக்களாக, மொத்தம் 14 வினாக்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும். நீண்ட பாடங்களான 2, 4, 5, 8 ஆகியவற்றில் இருந்து தலா 2 வினாக்களும் ஏனைய 6 பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வியும் இடம்பெறும். பெரிய பாடங்களில் கூடுதல் கவனம் தந்து படித்தால் 5 மதிப்பெண் பகுதியில் தடுமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

தேர்ச்சி நிச்சயம்

முதல் பாடத்திலிருந்து 2, 3 மதிப்பெண்களில் தலா ஒரு வினா நிச்சயம் இடம்பெறும் என்பதால், இந்தப் பாடத்தின் அனைத்து வினாக்களையும் தயார் செய்தால் 5 மதிப்பெண்கள் நிச்சயம். இதுபோல 3, 6, 9 ஆகிய பாடங்களிலும் தலா 5 மதிப்பெண்களை உறுதிசெய்யலாம். இந்த வகையில் மொத்தம் 20 மதிப்பெண்களுக்குத் தயாராகலாம்.

இவற்றுடன் எளிமையான பாடங்களான 1, 3, 9 ஆகியவற்றின் அனைத்து வினாக்களையும் படித்தால் 90-க்கு 30 மதிப்பெண்கள் உறுதி. ஒரு மதிப்பெண் பகுதியில் 7 மதிப்பெண்கள் வரை பெறுவது எளிது. இந்த வகையில் இப்போதிருந்தே படிக்கத் தொடங்கினால் எத்தகைய மாணவரும் தேர்ச்சிக்கு அப்பால் கூடுதலான மதிப்பெண்களையும் பெற முடியும்.

5 மதிப்பெண்களை அள்ள வழி

5 மதிப்பெண் பகுதிக்குத் தயார் செய்வதில் சராசரி, மெல்லக் கற்கும் மாணவர்கள் தடுமாற்றத்தை உணருகின்றனர். முறையான திட்டமிடல் இந்தத் தடுமாற்றத்தைத் தவிர்க்கும். இரண்டாவது பாடத்தின் 20 ஐந்து மதிப்பெண் வினாக்களையும் முழுமையாகப் படித்தால், அவற்றிலிருந்து 1 அல்லது 2 வினாவை எதிர்பார்க்கலாம். இதே வகையில் 3-வது பாடத்தின் 20, 9-வது பாடத்தின் 15 வினாக்களை மட்டுமே படித்து அவற்றிலிருந்து தலா ஒரு ஐந்து மதிப்பெண் வினாவுக்கு விடையளிக்கலாம்.

நான்காவது பாடத்தின் ‘பரவளையம் மற்றும் நீள் வட்டம்’ என்ற அலகின் மாதிரி வினாக்களில், பரவளையத்தின் 10, நீள்வட்டத்தின் 18 வினாக்களை மட்டுமே படித்து ஒரு 5 மதிப்பெண் வினாவை உறுதி செய்யலாம். இதுபோல 7-வது பாடத்தின் ‘பரப்பு மற்றும் கன அளவு காணல்’ என்ற தலைப்பின் (பயிற்சி 7.4) எளிமையான கணக்குகளில் இருந்தும் ஒரு 5 மதிப்பெண் வினாவை எதிர்பார்க்கலாம்.

கணக்குப் பாடத்திற்கான முக்கியக் குறிப்புகளை வழங்கியவர் - இரா.வீராச்சாமி. முதுநிலைக் கணித ஆசிரியர், ஹைராத்துல் ஜமாலியா கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x