Last Updated : 16 Oct, 2018 11:30 AM

 

Published : 16 Oct 2018 11:30 AM
Last Updated : 16 Oct 2018 11:30 AM

காந்தி 150: தன்மானத்தைச் சொல்லும் ராட்டை!

‘அரை வேட்டியா, ராட்டையா, கைத்தறியா, தோரோவா, ரஸ்கினா, டால்ஸ்டாயா, பிரம்மச்சரியமா, புலால் தவிர்த்தலா, மாட்டுப் பாலைக் குடிக்க மறுத்தலா அல்லது கழிவறையைச் சுத்தம் செய்தலா?

முழுமையான காந்தியவாதியாக இருக்க இவை எதுவும் போதாது. ஏனென்றால், காந்தி என்பவர், லண்டனின் கலாச்சாரத்தை எதிர்கொள்ளத் திராணி அற்றவராக இருந்த மூன்று ஆண்டுகளாலும், தென் ஆப்பிரிக்காவில் போராளியாக இருந்த 20 ஆண்டுகளாலும் உருவாக்கப்பட்டவர்.

அதுபோன்ற சூழ்நிலை இனி யாருக்கும் வாய்க்காது. எனவே, இந்தியர்கள், தங்களுக்குள்ளேயே காந்தியைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான். அப்படிப் பலர், காந்தி பின்பற்றிய சில விஷயங்களைக் கைக்கொண்டார்கள். அதில் பெரும்பாலும் ராட்டைதான் தேர்வு செய்யப்பட்டது. ஏனென்றால், அதுதான் சுலபமானதும் ‘ஸ்டைல்’ ஆனதும் ஆகும்!’ - இப்படி ஒரு முறை எழுதினார், சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் வி.எஸ்.நைபால்.

அந்த ராட்டைக்கு இந்த ஆண்டு, நூற்றாண்டு. அதை மக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்த்த மகானுக்கோ, இது 150-வது ஆண்டு!

வெள்ளையர்களை எதிர்ப்பதற்கான ஓர் ஆயுதமாக ராட்டையைப் பயன்படுத்தியவர் காந்தி. 1918-ல், பம்பாய் நகரில் முதன்முதலாக ராட்டை ஸ்தாபனம் தொடங்கப்பட்டது. ‘ராட்டையில் நூற்புப் பயிற்சியையும் பிரார்த்தனையையும்விட, வலிமையான ஆயுதம் எதுவும் வேறெதுவுமில்லை’ என்ற காந்தியின் சொல்படி, ‘நூற்பு வேள்வியை’ நடத்தி வருகிறார் கருணாகரன். காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி அவருடன் உரையாடியதிலிருந்து…

வீட்டில் காந்தி!

“பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா ஆறுமுகம், தனியார் அச்சகத்தில் அச்சுக்கோப்பாளராக இருந்தார். வேலை நேரம் போக, தனக்குக் கிடைத்த நேரத்தில் சர்வோதய இயக்கத்தில் சேர்ந்து காந்திய சிந்தனைகளைப் பரப்பி வந்தார். அவரிடமிருந்துதான் நான் காந்தியை அறிந்தேன்.

காந்தியை அப்பா நேரில் பார்த்திருக்கிறார். அவரது சிந்தனைகளால் மட்டுமல்லாது, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இதர தலைவர்களையும் அப்பா மதித்தார். அதனால், எனக்கும் என் அண்ணன், தம்பி, தங்கை ஆகியோருக்கும் தேசத் தலைவர்களின் பெயர்களைத்தான் சூட்டினார். இதனால், வீட்டில் கூப்பிடும் பெயர் வேறாகவும், பள்ளிச் சான்றிதழில் உள்ள பெயர் வேறாகவும் இருக்கும். ‘படேல்’ அப்படித்தான் பத்மநாபன் ஆனார். ‘காமராஜ்’, சுந்தர மூர்த்தி ஆனார். ‘பிரியதர்ஷினி’, ஜெயந்தி ஆனார். ‘காந்தி’ கருணாகரன் ஆனேன்!” என்பவர், காந்தியச் சிந்தனையைப் பரப்பும் முழுநேரச் செயற்பாட்டாளராக இருக்கிறார். அதற்காகப் பல விருதுகளையும் வென்றிருக்கிறார்.

மாற்றம் தந்த படிப்பு

தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் என மாணவப் பருவத்திலிருந்தே பொது வாழ்க்கையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் கருணாகரன்.

“கல்லூரியில் படிக்கும்போது பல்வேறு காந்திய அமைப்புகளுடன் தொடர்பு கிடைத்தது. அது காந்தியைப் பற்றிய எனது அறிவை விசாலப்படுத்தியது. கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், சென்னையிலுள்ள ‘காந்தி அமைதி மைய’த்தில் முழுநேரத் தன்னார்வலராகச் சுமார் 9 ஆண்டுகள் பணியாற்றினேன்.

அங்கு, ஆச்சார்ய கிருபாளினியிடம் தனிச் செயலராக இருந்த என்.கிருஷ்ணசுவாமியின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் டெல்லி ‘காந்தி அமைதி மைய’த்தில் செயலராக இருந்தார். அவர் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் நான் அவருக்கு உதவியாளராகச் செல்வேன். அப்போது இதர காந்திய அமைப்புகளுடன் இணைந்து, மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு போன்ற காந்திய சிந்தனைகளைப் பரப்புவதற்காக இதர மாநிலங்களில் நடைபெறும் முகாம்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்தப் பயணங்களின்போது, மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் ‘காந்தியக் கல்வி நிறுவனம்’ இருப்பது எனக்குத் தெரிய வந்தது. அங்கு காந்தியின் சிந்தனையில் உருவான ‘ஆதாரக் கல்விக் கொள்கை’யின் அடிப்படையில், காந்தியச் சிந்தனைகள் குறித்து ஓராண்டு படிப்பு நடத்தப்பட்டுவருகிறது. அங்கு சேர்ந்து காந்தியை ஆழமாகக் கற்கத் தொடங்கினேன். சுசிலா நாயர், வினோபாஜியின் சீடர் ஆச்சார்யா பால் விஜய் என காந்தியுடன் இருந்தவர்கள் பலர் எங்களுக்கு ஆசிரியர்களாக இருந்து போதித்தனர்” என்பவர், அங்குதான் ராட்டையில் நூல் நூற்கவும் கற்றுக்கொண்டார்.

அமைதியின் சின்னம்

கருணாகரனின் கையில் எப்போதும் ஒரு ராட்டை இருக்கும். புத்தக வடிவில், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக் கூடிய ஒரு ராட்டை அது. ரயில் நிலையமோ இசைக் கச்சேரியோ… எங்கு இடமும் நேரமும் கிடைக்கிறதோ அங்கே உட்கார்ந்து நூல் நூற்கத் தொடங்கிவிடுகிறார் கருணா.

“குஜராத் ‘சபர்மதி ஆசிரமம்’, மகாராஷ்டிரா ‘சேவா கிராமம்’ ஆகிய இரண்டு இடங்களில் மட்டும்தான் இதுபோன்ற எளிமையான ராட்டைகள் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரையில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ராட்டைகள் தமிழகத்தில் கிடைக்கச் செய்ய நான் முயன்று வருகிறேன்” என்பவர், இந்த ராட்டையைப் பள்ளி, கல்லூரிகளுக்குக் கொண்டு சென்று, மாணவர்களிடையே காந்தியச் சிந்தனைகளை விதைத்து வருகிறார்.

“இந்தச் சின்ன ராட்டையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று பலரும் கேட்கிறார்கள். ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் இதில் நூல் நூற்கலாம். அப்போது, உங்களின் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை மட்டுப்படும். ஆன்ம சக்தி வலுப்படும். ‘அமைதியின் சின்ன’மாக இதைப் பார்த்தவர் காந்தி. அதனால்தான் அவர் வடிவமைத்த கொடியில் ராட்டையை வைத்தார்.

இதில் நூற்கப்படும் நூலைக்கொண்டு, காதி மாலை, கைக்குட்டை, சால்வை போன்ற கைவினைப் பொருட்களைத் தயாரித்துச் சிறிய அளவில் சிறுதொழில் முனைவோராகவும் வலம் வரலாம்.

மாணவர்கள் பலர், ‘இது என்ன மெஷின்?’ என்று கேட்பார்கள். ‘இது மெஷின் அல்ல… மெஷினுக்கு எதிரானது’ என்று சொல்வேன். ஆம்… சுயதொழிலால் கிடைக்கும் பெருமையையும், அதனால் அதிகரிக்கும் தன்மானத்தையும் மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்க, இது நல்ல ஆயுதம்!” என்கிறார் இந்த ‘ராட்டை’க்காரர்!

தொடர்புக்கு: 9566222346

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x