Published : 09 Oct 2018 11:38 AM
Last Updated : 09 Oct 2018 11:38 AM

அந்த நாள் 04: நம்மை வெட்கப்பட வைக்கும் சிந்துவெளி

அன்புள்ள குழலி,

‘கதிரியக்க கார்பன் ஆயுள் கணிப்பு முறை’ (Carbon dating, Radiocarbon dating) பற்றிப் போன கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாய். அது இயற்கைப் பொருட்களின் ஆயுளைக் கணிக்கும் முறை. இந்த முறையைப் பயன்படுத்தி 60,000 ஆண்டுகள் வரையிலான பொருட்களின் ஆயுளைக் கணிக்க முடியும். இந்த முறையை 1940-களில் வில்லார்டு லிப்பி என்ற விஞ்ஞானி கண்டறிந்தார். அதற்காக வேதியியலுக்கான நோபல் பரிசும் அவருக்குக் கிடைத்தது.

அண்டக் கதிர்களுடன் (cosmic ray) வளிமண்டல நைட்ரஜன் வினைபுரிவதால், கதிரியக்க கார்பன் தொடர்ந்து உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது. ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களும் தாவரப்பொருட்களும் பிறகு அவற்றின் வழியாக மற்ற உயிரினங்களும் கதிரியக்க கார்பனைப் பெறுகின்றன. ஒரு தாவரமோ உயிரினமோ இறக்கும்போது, சுற்றுச்சூழலுடனான இந்த கார்பன் பரிமாற்றம் நின்றுபோகிறது. அதற்குப் பிறகு, கதிரியக்க கார்பன் அளவு அவற்றில் குறையத் தொடங்குகிறது. மிகவும் பழைய மாதிரியில் கதிரியக்க கார்பன் குறைந்த அளவிலேயே காணப்படும்.

சரி, ஒரு கேள்வி. சிந்துவெளி மக்களின் மொழியும் தெரியாது, கல்வெட்டு போன்ற ஆதாரங்களும் அவர்கள் காலத்தில் உருவாகியிருக்கவில்லை. அப்புறம் எப்படிச் சிந்துவெளி நகரங்கள், கட்டிடங்கள் பற்றியெல்லாம் நமக்குத் தெரிய வந்தது?

அன்புடன்,
செழியன்
 

andha naal 2jpg100 

அன்புள்ள செழியா,

‘கதிரியக்க கார்பன் ஆயுள் கணிப்பு முறை’ குறித்து விளக்கியதற்கு நன்றி. அப்புறம், சிந்துவெளி நகரங்களுக்கான ஆதாரங்கள் பற்றியெல்லாம் கேட்டிருந்தாய். சிந்துவெளி நகரங்கள் தொல்லியல் பகுதிகளாக இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்றன. அந்தக் கட்டிடங்களை இப்போதும்கூட நேரடியாகப் பார்க்கலாம். நீ விரும்பினா, அடுத்த விடுமுறைக்கு நாம ரெண்டு பேரும் சிந்துவெளி நகரங்களுக்கு ஒரு உலா போகலாமே.

சிந்துவெளியின் சிறப்பே அதன் கட்டிடங்களும் நகரமைப்பும்தான் என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன். அவை எவ்வளவு நேர்த்தியானவை தெரியுமா? சிந்துவெளி நாகரிகத்தின் பெரும்பாலான நகரங்கள் ஒரே மாதிரி திட்டமிட்டுக் கட்டப்பட்டிருந்தன. தெருக்கள் நேர்கோடுகளைப் போல உருவாக்கப்பட்டிருந்தன. ஒவ்வோர் ஊரிலும் இரண்டு முதன்மைச் சாலைகள். ஒன்று வடக்கிலிருந்து தெற்காகவும் மற்றொன்று கிழக்கிலிருந்து மேற்காகவும் போயின. இன்றைய மூன்றுவழி நெடுஞ்சாலைகள் அளவுக்கு, அவை அகலமாக இருந்தன. அவற்றின் இரு புறங்களிலும் சிறிய தெருக்கள் கிளைத்தன. தெருக்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் கிணறுகள், நிழல் தரும் மரங்கள் இருந்திருக்கின்றன.

முதன்மைச் சாலைகளில் மாட்டு வண்டிகள், ஒட்டக வண்டிகளுடன் மக்களும் சென்றிருக்கிறார்கள். இதுக்கெல்லாம் ஆதாரம் என்னன்னு உன் மனசுக்குள்ள கேள்வி வரும். சிந்துவெளி நாகரிகத்தினர் உருவாக்கி, அந்தக் காலக் குழந்தைகள் விளையாடிய களிமண் மாட்டு வண்டி பொம்மைகள் கிடைத்துள்ளன. இன்றைக்கும் கோயில் திருவிழாக்கள்ல பார்க்கிறோமே, அதே மாதிரி பொம்மைகள்.

மொட்டை மாடி, குளியலறை

சிந்துவெளியில் எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருந்துள்ளன. ஒரு சதுர முற்றம், அதைச் சுற்றி மற்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போதும் மரபார்ந்த நமது வீடுகளில் இந்த அம்சத்தைக் காண முடியும். முற்றம் வைப்பதற்கு முக்கியக் காரணம், சூரிய வெளிச்சத்தை வரவேற்கத்தான். மேற்கூரைக்குச் செல்ல படிகள் இருந்துள்ளதால், மொட்டை மாடியையும் அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள்.

இன்றைக்கு இருப்பதுபோல் கட்டிடக் கலை நிபுணர்களும் வடிவமைப்பாளர்களும் அன்றைக்கு இல்லை. எந்தப் பெரிய அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலத்திலேயே இந்த வீடுகள் திட்டமிட்டு, நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்ததை நினைத்து ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளரா வியந்து போகிறேன்.

வெப்பமண்டலப் பகுதியில் வாழ்ந்த அம்மக்கள் குளிப்பதில் அதிக அக்கறை காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் குளியலறை இருந்துள்ளது. அத்துடன் பெருமளவிலான மக்கள் குளிப்பதற்காக மொஹஞ்சதாரோவில் பெரிய குளமும் இருந்திருக்கு.

தூய்மையின் காவலர்கள்

இவை எல்லாவற்றையும் தாண்டி, கழிவுநீரை வெளியேற்றத் திட்டவட்டமான வடிவமைப்பு அந்தக் காலத்திலேயே இருந்ததுதான் மிகப் பெரிய ஆச்சரியம். வீட்டிலிருந்து நிலத்தடி சாக்கடை வழியாகக் கழிவுநீர் வெளியேறியது. இதற்காகச் சுடுமண் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், இந்தக் கழிவுநீர் அமைப்புகளில் ஏற்படும் அடைப்பை நீக்க, தற்போது உள்ளதைப் போலவே சாக்கடைத் திறப்புகளும் இருந்திருக்கு. அவற்றின் வழியா சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட்டிருக்கின்றன.

உலகின் முதல் கழிவுநீர் வெளியேற்றும் அமைப்பு இதுதான். சிறந்த பொறியியல் அறிவைக் கொண்ட சமூகத்தால்தான் இதுபோன்ற அமைப்பைச் சிந்தித்து உருவாக்கியிருக்க முடியும். இதையெல்லாம் படித்து நீ ஆச்சரியப்பட்டுக்கிட்டு இருப்ப, இன்னொன்னும் சொல்றேன்.

21-ம் நூற்றாண்டு மனிதர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் வாழைப்பழத் தோலையோ காபி கோப்பையையோ உணவுப் பொட்டலங்களையோ பார்க்கும் இடங்களில் எல்லாம் விட்டெறிந்துகொண்டு இருக்கிறோம். ஆனால், திடக்கழிவைச் சேகரிக்கவும் அந்தக் காலத்தில் செங்கல் தொட்டிகளைக் கட்டி வைத்திருந்தார்கள் சிந்துவெளி மக்கள். அவற்றில் சேகரமான திடக்கழிவை ஊருக்கு வெளியே கொட்டியிருக்கிறார்கள்.

அதனால், குப்பையும் நாற்றமும் இல்லாமல் ஊர் சுத்தமா இருந்திருக்கு. ஆனா, நாகரிக மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம், குப்பையள்ளும் இயந்திரம் நம்மைக் கடந்து போகும்போது என்ன செய்கிறோம்? துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை மூடிக்கொள்கிற நிலையில்தான் இன்னும் இருக்கோம்.

குப்பையை முறைப்படி அகற்ற வேண்டியது, அரசோட கடமை. ஆனா அதைச் செய்றதை விட்டுட்டு, 'ஸ்வச் பாரத்'னு மக்கள்ட்ட கூடுதல் வரி வசூலிச்சு குப்பை அள்ளுறதை ஃபேஷனா செய்ற நாடு, உலகத்துலயே நம்ம நாடு மட்டும்தான். சிந்துவெளி மக்கள் நம்மைவிட ஏன் சிறந்தவங்க அப்படிங்கிறதுக்கு, இந்த ஒரு உதாரணம் போதும்.

அன்புடன்,
குழலி

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x