Last Updated : 09 Oct, 2018 11:37 AM

 

Published : 09 Oct 2018 11:37 AM
Last Updated : 09 Oct 2018 11:37 AM

ஆங்கிலம் அறிவோமே 232: நூறு தடவை சொல்லியாச்சு!

கேட்டாரே ஒரு கேள்வி

I plugged the DVD player in.

Rewrite the above sentence so that the meaning is the opposite of the original.

எது சரியான விடை?

a) You plugged the DVD player in.

b) I unplugged the DVD player in.

c) I plugged the CD player in.

d) I plugged the DVD player out.

**********************

“மிகவும் பசி உள்ள நாடு எது?” என்று கேட்ட ஒரு நண்பர் “Hungary” என்று பதிலையும் கூறினார். காரணம் Hungary என்பதற்குள் Hungry என்பது இருக்கிறதாம். இந்த இதழில் நான் உருவாக்கியுள்ள புதிரை அதற்கான ஐடியாவைக் கொடுத்த அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.

ஒரு நாட்டின் பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதிலுள்ள ஒரு சில எழுத்துகளை நீக்கிவிட்டால் கீழே உள்ள குறிப்புகளுக்குச் சமமான ஆங்கிலச் சொல் கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக 'ஓடினான்' என்பது குறிப்பாக அளிக்கப்பட்டிருந்தால் விடை Iran அல்லது France என்பதாக இருக்கலாம். (இரண்டிலும் ‘ran’ என்ற சொல் உள்ளது). மொழிபெயர்ப்புப் பகுதியை அடிக்கோடிட்டு அனுப்பினால், நான் நினைத்திராத சரியான மாற்றுப்பதில் கிடைத்தால் இனம் கண்டுகொள்ள எளிதாக இருக்கும். எ.கா. – France.

இன்னொரு க்ளூ – ஆங்கில மொழிபெயர்ப்பு அடுத்தடுத்த எழுத்துகளாகத்தான் இருக்கும். France, Iran என்பதில் இருப்பதைப் போல. Hungary-ல் இருப்பதைப் போல இடையில் இடைவெளி விட்டு இருக்காது.

பதினாறு நாடுகளையும் கண்டுபிடித்த கையோடு உங்கள் விடைகளை மின்னஞ்சலில் எங்களுக்கு உடனடியாக அனுப்புங்கள். உங்களது பெயர், ஊர் ஆகிய இரண்டையும் குறிப்பிடுங்கள்.

1. சுரப்பி

2. காதல்

3. நுண்துளை

4. மழை

5. மதிப்பெண்

6. கிருமி

7. கந்தல்

8. இஸ்ரேலில் இயங்கும் ஒரு பிரபலத் தீவிரவாத இயக்கம்

9. குடிசை

10. மந்திரக்கோல்

11. வழி

12. கனவானின் சுருக்கம்

13. முகவாய்க்கட்டை

14. ஆலங்கட்டிமழை

15. காத்திரு

16. துறைமுகம்

**********************

இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டினால் அதை ‘V sign’ என்கிறார்களே. இந்தப் பழக்கம் எப்போதிலிருந்து தொடங்கியது?

இரண்டாம் உலகப்போரின்போது வெற்றியைக் குறிக்கும் விதமாக இது பயன்படுத்தப்பட்டது. Victory sign என்பதுதான் ‘V sign’. இதை மிகவும் பரவலாக்கியவர் பிரிட்டிஷ் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில். தமிழகத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இதே ‘V sign’-ஐக் காட்டியபோது வெற்றி என்பதைத் தவிர, இரட்டை இலை என்பதை அந்த இரு விரல்கள் சுட்டிக்காட்டுவதாகக் கூடுதல் அர்த்தம் அளிக்கப்பட்டது.

**********************

கேட்டாரே ஒரு கேள்விக்கான விடைகள் புன்னகையை வரவழைக்கின்றன. வம்படியாக எல்லா விடைகளுமே சரிதான் எனலாம். எனினும் ‘I unplugged the DVD player in’ என்பதுதான் சரியானது. மற்றபடி குறிப்பிடவில்லை என்றால் verb-க்கு எதிர்ச் சொல்லாகத்தான் விடை இருக்க வேண்டும்.

 The price of rice has come down again என்பதற்கு எதிர் வாக்கியம் The price of rice has gone up again என்பதுதானே.

**********************

“Centipede என்ற பூச்சிக்கு நூறு கால்கள் என்று தெரியும். Cent என்றால் 100. Pede என்றால் கால் என்று பொருளா?”

உண்மைதான் நண்பரே, லத்தீன் மொழியில் centipeda என்ற சொல் உண்டு. Centum என்றால் 100 என்று பொருள். Ped என்றால் பாதம்.

ஆனால், centipede பூச்சிக்குச் சரியாக நூறு கால்கள் இருப்பதில்லை (வேண்டுமென்றால் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்). முப்பதிலிருந்து 190 கால்கள்வரை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்).

சரியாக நூறு கால்கள் இல்லை என்றால் centipede என்று ஏன் பெயர் வைக்க வேண்டும் என்கிறீர்களா? நம் பெற்றோர்கூட “உனக்கு இதுவரை நூறு தடவை சொல்லியாச்சு. அப்பவும் உன் மண்டையில் ஏறல” என்று சொல்லியிருக்கக் கூடும். அவர்களும் சரியாக நூறு தடவையா சொல்லி இருப்பார்கள்?

Centipede நம் நாட்டில் உண்டா என்ற கேள்வி வேண்டாம். பூரான்தான் அது. சொல்லப்போனால் இது பூச்சி அல்ல. கணுக்காலி (Arthropod).

பூரான், சென்டிபீட் என்ற சொற்களெல்லாம் உச்சரிக்கக் கஷ்டமாக இருக்கிறது என்பவர்கள் இதைக் குறிக்கும் ரஷ்ய சொல்லைப் பயன்படுத்தலாம் – sorokonozhka.

**********************

“Downhill என்பது எதிர்மறையான சொல்லா, நேர்மறையான சொல்லா?’’

சுவாரசியமான கேள்விதான். பயன்படுத்தப்பட்ட விதத்தைக் கொண்டுதான் இதைத் தீர்மானிக்க முடியும்.

When the Bank refused to lend money, the profit of the organization went downhill. இந்த வாக்கியத்தில் downhill என்பது negative-ஆன பொருளைக் கொடுக்கிறது. அதாவது கடன் கொடுக்க மாட்டேன் என்று வங்கி மறுத்ததால் அந்த நிறுவனத்தின் லாபம் சரிந்தது.

After you switched to the diet, it will all be downhill for your weight loss programme. உணவுக் கட்டுப்பாட்டைத் தொடங்கிய பிறகு எடைக்குறைப்பு என்பது எளிதாகிவிடும் என்று இதற்குப் பொருள். மலையில் ஏறுவது கஷ்டம். இறங்குவது எளிது. இந்த விதத்தில் downhill என்ற சொல் இங்கே பயன்பட்டிருக்கிறது.

english 2jpg100 

போட்டியில் கேட்டுவிட்டால்?

It was very difficult to dig as the ground was very ______.

a) soft

b) adamant

c) rigid

d) hard

e) penetrable

நிலத்தைத் தோண்டுவது மிகக் கடினமாக இருந்தது என்பதைக் கூறும் வாக்கியம் அதற்கான காரணத்தையும் கூறுகிறது. அந்தக் காரணம்தான் ஐந்து பதில்களில் ஒன்று.

நிலம் soft ஆக இருந்தால் தோண்டுவது கஷ்டமாக இருக்காது.

Penetrable என்றால் எளிதில் ஊடுருவிச் செல்லக்கூடிய என்று பொருள். இப்படிப்பட்ட மண்ணை எளிதில் தோண்ட முடியும் என்பதால் அது ஏற்ற பதில் அல்ல.

 Adamant என்றால் பிடிவாத குணம் கொண்ட. ஆங்கிலக் கவிதைகளில் ‘adamant ground’ என்று கூறலாமே தவிர, வழக்கமான வாக்கியங்களில் இப்படிப்பட்ட உருவகங்கள் இடம்பெறுவதில்லை (வழக்கமான வாக்கியத்துக்குப் பொருந்துகிற பதில் கொடுக்கப்பட்டிருப்பதால் இதுபோல ‘கவிதைகளுக்கு மட்டுமே பொருந்துகிற’ சொற்களைத் தேர்வு செய்யக் கூடாது).

Rigid என்றால் இறுக்கமான என்று பொருள். வாக்கியத்தில் இதற்கான அர்த்தம் பொருந்துகிறது. என்றாலும் நிலம் மற்றும் மண்ணின் தன்மைகளைக் குறிக்க rigid என்பதைப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை.

மாறாக, hard soil என்பது பயன்பாட்டில் உள்ள ஒன்று. அதாவது கடினமான நிலம். இது பொருத்தமாக உள்ளது. எனவே, It was very difficult to dig as the ground was very hard என்பதே சரி.
 

சிப்ஸ்

# தாலாட்டு என்பது ஆங்கிலத்தில்?

Lullaby

# I like films that increase suspense என்று என் C.V.யில் குறிப்பிட்டுவிட்டேன். ஆனால், increases என்பது பொருத்தமானதா என்பது புரியவில்லை.

‘Increase’ என்பதற்குப் பதிலாக ‘build’ என்ற சொல்லை இனிப் பயன்படுத்துங்கள்.

# Pebbles என்றால் சிறு கற்கள்தானே?

வழவழப்பாக இருக்கும் சிறு கற்கள். பெரும்பாலும் நதிக்கரைகளில் காணப்படும் கூழாங்கற்கள்.சிப்ஸ்ஓவியம்: வெங்கிஜெயலலிதாசர்ச்சில்

 


தொடர்புக்கு - aruncharanya@gmail.com |
ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x