Published : 25 Sep 2018 11:39 AM
Last Updated : 25 Sep 2018 11:39 AM

நான் ஏன் வெற்றிக்கொடி வாசிக்கிறேன்?

பரந்துபட்ட அறிவு பெற!

பிற  இதழ்கள் பெரும்பாலும் பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்களை இணைப்பாக வெளியிட்டுவருகின்றன. அதுபோல வெற்றிக்கொடியும் இருக்குமோ என்று அஞ்சினேன். வழிகாட்டும் நல்லோர் வாழ்க்கையை அறிமுகப்படுத்தியுள்ள ‘வெற்றிக்கொடி’ ஒரு மாறுபட்ட இணைப்பு என்று அறிந்து மகிழ்கிறேன்.

இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயன்படும் வகையில் பல்வகைக் கட்டுரைகள், செய்திகள் நிரம்பி, அவர்கள் பரந்துபட்ட அறிவைப் பெற உதவுகிறது ‘வெற்றிக்கொடி’. மாணவரும் தண்டனைகளும் பற்றிப் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவை அனைத்தும் அனுபவபூர்வமானதாக இருப்பதால் நடைமுறைப்படுத்த இயலும்.  சாதனைச் செல்வர் களையும் பாராட்டும் கட்டுரைகள் பயனுள்ளவை. பல சிறப்புகளைக் கொண்ட ‘வெற்றிக்கொடி’ மேன்மேலும் பொலிவுற்று விளங்க நல்வாழ்த்துகள்.

- ச.சீ.இராஜகோபாலன்,  மூத்த கல்வியாளர்

 

திக்கெட்டும் பரவட்டும்!

‘தமிழ் இந்து’ வாழை இலை நடுவில் வைக்கப்படும் விருந்து என்றால், அதன் இணைப்புகள் விருந்துக்குச் சுவையூட்ட சுற்றிலும் வைக்கப்படும் கூட்டு, பொறியல்கள். ‘வெற்றிக்கொடி’ பற்றி எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை.

ஆங்கில மொழியை மிகவும் எளிமையாக நகைச்சுவை கலந்து கற்பிக்க முடியும் என நிரூபித்து வருகிறார் ஜி.எஸ்.எஸ். சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளிகள், மாணவ விஞ்ஞானிகள், ‘புதுத் தொழில் பழகு’, ‘கேள்வி நேரம்’, அறிவியல் செய்திகள் என இதில் அணிவகுத்து வரும் படைப்புகள் ஒவ்வொன்றுமே கருத்துக் கருவூலம்தான். வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்!

- பேரா. கே. ராஜூ, ஆசிரியர், புதிய ஆசிரியன், மாத இதழ்.

 

உழைப்பாளிகளையும் படைப்பாளி ஆக்கும் பகுதி!

கல்வியின் பன்முகத் தன்மையை ஆய்வு முறையில் அணுகுவதே ‘வெற்றிக்கொடி’யின் சிறப்பு. கல்வியின் முன் எழும் சவால்கள், சிந்தனைகள், கொள்கைகள் குறித்த தலைப்புக் கட்டுரைகள் ஆய்வுக் படைப்பாக மிளிர்கின்றன. 200 வாரங்களைக் கடந்து ‘வெற்றிக்கொடி’யுடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘ஆங்கிலம் அறிவோமே!’ மாணவர்கள் மட்டுமல்லாது எல்லோரும் ஆங்கிலத்தைக் கையாளுவது என்பதை முன்னிறுத்தும் திறன் வளர்ப்புப் பகுதியாகப் பெருமை படைக்கிறது.

‘வேலை வேண்டுமா?’ இளந்தலைமுறையினரை ஈர்க்கிறது. படிப்பாளிகளையும கல்விசார் உழைப்பாளிகளையும் படைப்பாளியாக்கி அவர்கள்  கையில் வெற்றிக்கொடியைக்  கொடுத்து  ‘தமிழ் இந்து’ உயர உயரப் பறக்கிறது.

 -பேரா.பொ.இராஜமாணிக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மதுரை

 

தகவலில் ஒளிந்திருக்கும் ஞானம்

‘புதுத் தொழில் பழகு’, ‘ஆங்கிலம் அறிவோமே!’, ‘பொதுத் தேர்வு ஆலோசனை’ போன்ற வேலைவாய்ப்பு-தொழில், படிப்பு போன்ற பயன்பாட்டு தொடர்கள் ஒருபுறம் இருந்தாலும் உள்ளபடி ‘வெற்றிக்கொடி’யின் சாதனை புதிய புதிய அறிவுத்தளங்களை வாசகர்களிடம் அறிமுகப்படுத்துவதுதான். மரங்களின் தொகுப்பு காடாகிவிடாது என்பதுபோல கூகுளில் எல்லா தகவல்களும் இருந்தாலும் அது மட்டுமே அறிவை வளர்த்துவிடாது. 

கதம்பமாலை போல தகவல்களைச் சேர்த்துத் தொகுத்து அவை சுட்டும் ஞானத்தைத் தருகின்றன ‘வெற்றிக்கொடி’யின்  ‘அக்கினிக்குஞ்சு’, ‘வரலாறு தந்த வார்த்தை’ போன்ற பல்வேறு  கட்டுரைத் தொடர்கள். கணக்கு என்றால் பிணக்கு என்ற பொதுக் கருத்து ஆழமாக ஊறியுள்ள சமூகத்தில் எளிய முறையில் கணிதத்தின் சுவையை விளக்கும் ‘பை’ சிவராமன் போன்றவர்களின் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை.

-த.வி.வெங்கடேஸ்வரன், முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரசார்,  புது டெல்லி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x