Published : 18 Sep 2018 11:48 AM
Last Updated : 18 Sep 2018 11:48 AM

நான் ஏன் வெற்றிக்கொடி வாசிக்கிறேன்?

மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகளும் ‘வெற்றிக்கொடி’யை தொடர்ந்து வாசித்துவருகிறார்கள். ‘வெற்றிக்கொடி’ பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

உணர்வுபூர்வமாக இயங்குகிறது!

ஊடகங்கள் உணர்வுபூர்வமானவர்களைக் கொண்டு இயங்கினால் உழைக்கும் மக்களுக்குப் பயன்படும் ஆயுதமாகத் திகழும் என்பதற்கு எடுத்துக்காட்டு ‘வெற்றிக்கொடி’. அறிவியல், விளையாட்டு எனப் பல தளங்களிலும் புதிய வாசகர்களை உருவாக்கும் யுக்தியை ‘வெற்றிக்கொடி’ கையாள்கிறது.

‘ஆயிரம் வாசல்’, ‘அக்கினிக்குஞ்சு’ உள்ளிட்ட பகுதிகள் அனைத்து வயதினரும் ரசித்துப் படிக்கக்கூடியவை. அரசுப் பல்கலைக்கழகங்கள், கல்விநிலையங்களே கல்வியின் மீது சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த இணைப்பிதழில் வெளியான பல கட்டுரைகள் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன. கிண்டி பொறியியல் கல்லூரியின் 225-வது ஆண்டை ஒட்டி வெளியான கட்டுரை அதற்கு சிறந்த உதாரணம்.

- பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்

 

விரிவான அக்கறை

தமிழகத்தின் இன்றைய கல்விச் சூழல், எதிர்காலத்தில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள், மாற்றங்களை முன்னெடுப்பதற்கான விவாதங்கள், உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள், முன்னோடி கல்விச் சிந்தனையாளர்கள் என்று ‘வெற்றிக் கொடி’யின் நான்கு பக்கங்களிலும் தமிழகத்தின் கல்வி மீதான அக்கறை மிளிர்கிறது.

இருட்டுக்குள் புதைந்துபோன அரிய விஷயங்களின் மேல் வெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. வழக்கமாக, தகவல்கள் கிடைப்பதில்லை என்பதே ஆய்வாளர்களின் வருத்தமாக இருக்கும். தரவுகள் மட்டுமே குவிந்து கிடக்கும் எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகம் கவனிப்பாரின்றி இருப்பதை வருத்தத்துடன் பதிவுசெய்த சமீபத்திய ‘வெற்றிக் கொடி’ கட்டுரை, அதற்கு நல்ல உதாரணம்.

- அ. வெண்ணிலா, எழுத்தாளர், பள்ளி ஆசிரியை

 

கல்வி வாசிப்பில் தனியிடம்

கல்வி தொடர்பான நுணுக்கமான செயல்பாடுகளை ‘வெற்றிக்கொடி’ ஆவணப்படுத்தி வருகிறது. மாற்றுக் கல்வி முயற்சிகள், கல்வி தொடர்பான உரையாடல்கள்-விவாதங்கள், நகரங்கள் - கிராமங்களில் கல்வியின் நிலை, கல்விக் கட்டமைப்புகள், எங்கே சென்று எதைப் படிக்கலாம், வாசிப்புப் பழக்கம் என்று கல்வி தொடர்பான விரிவான வழிகாட்டியாகத் திகழ்கிறது.

தமிழ் நாளிதழ்களில் எப்போதுமே கல்வி தொடர்பான பகுதிகள் மாணவர்களால், பெற்றோர்களால், ஆசிரியர்களால் ஆழமாக வாசிக்கப்படுகின்றன. இந்த வாசிப்புப் பரப்பில் ‘வெற்றிக் கொடி’ தனி இடத்தைப் பிடித்துள்ளது.

- அ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர்

 

வாழக் கற்றுக்கொடுக்கும் பக்கம்

எண்பது, தொண்ணூறுகளில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வரும், ‘காம்படிஷன் சக்ஸஸ் ரெவ்யூ’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள்தான் கலங்கரை விளக்கமாக இருந்தன. தமிழ்ச் சூழலில் அந்த வெற்றிடத்தை முழுமையாக பூர்த்திசெய்துள்ளது ‘இந்து தமிழ்’-ன் ‘வெற்றிக் கொடி’.

என் பெரும்பாலான தொடர்கள் வெற்றிக் கொடியில் வெளியானவை என்பதில் எனக்குப் பெருமையே. ஒரு வாசகனாக தொடர்ந்து படிப்பது நண்பர் ஜி.எஸ்.எஸ்.-ன் ‘ஆங்கிலம் அறிவோமே’ பகுதி. பிழைப்பைப் பார்க்க சொல்லிக்கொடுக்காமல், வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுக்கும் வெற்றிக் கொடியின் தொண்டு மகத்தானது.

- டாக்டர் ஆர். கார்த்திகேயன்
 

வெற்றிக்கொடியில் வாசகர்கள் விரும்பிய மாற்றங்கள்

‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை, ’நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற படிவத்தில் பூர்த்திசெய்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுப்பியிருந்தார்கள். வெற்றிக்கொடியில் வெளியாகும் படைப்புகளில் வேலைவாய்ப்பு-தொழில், ஆளுமைகள், பொது அறிவு, ஆசிரியர்-மாணவர் உறவு, அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பானவற்றை பெரும்பாலோர் தங்கள் விருப்பமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தொடர்களில் நீண்டகாலமாக வெளியாகிவரும் ‘ஆங்கிலம் அறிவோமே’ உடன், ‘வரலாறு தந்த வார்த்தை’, ‘புதுத் தொழில் பழகு’ ஆகியவை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘அக்கினிக்குஞ்சு’, ‘பொதுத் தேர்வு ஆலோசனை’களும் வாசகர் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டல், உயர் கல்வித் துறை சார்ந்த கட்டுரைகள், நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சித் தொடர்பான கட்டுரைகள் இன்னும் அதிகம் வேண்டும் என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதேபோல பல வாசகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு, தேர்வு பயத்தைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டல் பகுதி இந்த இதழிலேயே தொடங்கப்பட்டுள்ளது.

‘வெற்றிக்கொடி’யில் வெளியாகும் பெரிய கட்டுரைகள் பலரது விருப்பத் தேர்வாக இருப்பது ஆச்சரியம் கலந்த உற்சாகத்தைத் தருகிறது. சிலர் ‘டேப்ளாய்ட்’ வடிவில் ‘வெற்றிக்கொடி’யை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துகளை கவனத்தில் கொண்டு அடுத்து வரும் வாரங்களில் ’வெற்றிக்கொடி’யை புது மெருகுடன் படைக்கத் தயாராகி வருகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x