Last Updated : 11 Sep, 2018 12:32 PM

 

Published : 11 Sep 2018 12:32 PM
Last Updated : 11 Sep 2018 12:32 PM

துறை அறிமுகம்: வேலைக்கு வழி செய்யும் அயல்மொழி

உலகமயமாக்கலும் கட்டுப்பாடில்லா பொருளாதாரமும் தகவல் தொடர்புப் புரட்சிகளும் உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வந்திருக்கின்றன. இந்த உள்ளங்கை மாற்றங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள, பணி தேடுவோரும் கூடுதலாகப் பொருளீட்ட விரும்புவோரும் அயல் மொழிகளில் அவசியமான சிலவற்றை கற்றுக்கொள்வது அவசியம். ஆனால், தாய்மொழி, பிழைப்புக்காக மற்றுமோர் அதிகாரபூர்வ மொழி ஆகியவற்றுக்கு அப்பால் கூடுதல் மொழிகளை நம்மில் பெரும்பாலோர் விரும்பிக் கற்க முன்வருவதில்லை.

மாறாக பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், சீன மொழி, இத்தாலி, கொரியன், அரபு மொழி என பல வகையான மொழிகளில் தனக்கானதைத் தேர்வுசெய்து கற்றுக்கொள்வோருக்கு அரசு முதல் தனியார் நிறுவனங்கள்வரை வேலைவாய்ப்பு  காத்திருக்கிறது. பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், வேலை தேடுவோரும் இவற்றில் கவனம் செலுத்தலாம்.

மொழி படித்தால் வழி விரியும்

மொழிபெயர்ப்புப் பணிகள், தகவல் தொடர்பு உதவியாளர், சுற்றுலா வழிகாட்டி, பி.பி.ஓ./கே.பி.ஓ. (Knowledge Process Outsourcing) பணிகள், மொழி கற்பிக்கும் ஆசிரியர், ஆராய்ச்சி உதவியாளர், பன்னாட்டு நிறுவனப் பணிகள், தூதரகங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள், ஊடகம், மக்கள் தொடர்பு, மார்க்கெட்டிங் எனப் பல நிலைகளில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

மொழியை அடிப்படையாகக் கொள்ளாத பிற பணிகளிலும்கூட அயல் மொழி ஒன்றிரண்டை அறிந்து வைத்திருப்பது உதவக்கூடும். உதாரணமாக, வெளிநாட்டினருடன் அலுவல் ரீதியாக உரையாடுவது, அவர்களின் கலாச்சாரக் கூறுகளை அறிந்துகொள்ள முயல்வது, வெளிநாட்டில் பயிற்சி அல்லது பணியைச் சில காலம் மேற்கொள்ள நேரிடுவது போன்ற தவிர்க்க முடியாத சூழல்களில் இந்தக் கூடுதல் மொழித் திறன் வெகுவாகக் கைகொடுக்கும்.

அயல் மொழி கற்றிருப்பதைப் பணியாளர்களின் கூடுதல் திறனாகப் பாவிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. முக்கியப் பொறுப்புகளை வழங்குவதிலும், பணித்திறனைக் கணக்கிடும்போதும், பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகிய பரிசீலனைகளின்போதும் இந்த மொழித் திறன் முக்கியப் பங்காற்றும். சீன, ஜெர்மானிய, கொரிய நிறுவனங்கள் பல இந்தியாவில் தங்களது வாகன உற்பத்தி, செல்போன், வீட்டு பயன்பாட்டுப் பொருட்களைப் பெருமளவு கடைவிரித்துள்ளன.

இந்த நிறுவனங்களில் பணிபுரிவோர் நிறுவனத்தின் தாயக மொழியை அறிந்து வைத்திருப்பதைக் கூடுதல் தகுதியாகக் கணிப்பார்கள். பிரெஞ்சு, ஸ்பானிஷ், சீனம், ரஷ்யன், அரபு, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் குறைந்தது மூன்றில் இடைநிலைவரை படித்தால் பல நிலைகள் கொண்ட ஐ.நா. பணிகளுக்கும் ஐ.நா.சார்பு நிறுவனங்களின் பணிகளுக்கும் அது அடிப்படைத் தகுதியாக அமையும்.

கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்பவர்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் தனித்துவம் பெறுகிறார்கள். பணிதேடும்போதும் பணியாற்றும் இடத்திலும் தன்னம்பிக்கை, படைப்புத் திறனுடன் கூடியவர்களாக இவர்கள் திகழ்வார்கள். பலமொழி கற்றவர்களின் மூளைத் திறன் மற்றவர்களைவிடக் கூர்மையாகவும் செம்மையாகவும் இருக்கும் என்பது அறிவியல் உண்மை. எனவே, படிக்கும் பருவத்திலேயே விளையாட்டாக விரும்பிய அயல்மொழி ஒன்றை மாணவர்கள் கற்கலாம்.

எங்கே, எப்படிக் கற்கலாம்?

மொழி கற்றலை முழு நேரமாகவோ அல்லது மாணவர்கள், பணிபுரிவோர் போன்றோர் பகுதி நேரமாக மாலை அல்லது வார இறுதியிலான பயிற்சி வகுப்பாகவோ மேற்கொள்ளலாம். இவற்றுடன் மாணவர்களுக்கு என நடைபெறும் கோடைக்காலச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட பள்ளி, கல்லூரி வளாகங்களிலேயே கூடுதல் கட்டணத்தில் கணினிப் பயிற்சி போன்றே, மொழிப் பயிற்சிகளையும் வழங்குகிறார்கள்.

முழுமையான மொழிப் பயிற்சி என்பது அந்நாட்டுக் கலாச்சாரம், இலக்கியம், மொழி ஆளுமையில் புலமை பெற்றவர்களின் வாயிலாக பெறுவதன் மூலமே சாத்தியமாகும். உதாரணத்துக்கு,

# பிரெஞ்சு மொழி கற்க சென்னையிலுள்ள அலியான்ஸ் ஃபிரான்செய்ஸ் ஆஃப் மெட்ராஸ் மையம் உதவுகிறது http://madras.afindia.org/course-details/). இங்கே பல்வேறு சான்றிதழ், டிப்ளமோ பயிற்சிகளைப் பெறலாம்.

# ஜெர்மன் மொழியை கற்றுத் தரும் சென்னை கதே கல்வி நிறுவனம், நேரில் மட்டுமன்றி ஆன்லைனிலும் பயிற்சிகளை வழங்குகிறது (https://www.goethe.de/ins/in/en/spr.html).

# ஜப்பானிய மொழி கற்றுத் தரும் ஹயகவா நிறுவனம் (http://www.hayakawa.in/) வகுப்பறை பயிற்சியில் தொடங்கி ஆடியோ வீடியோ விநியோகித்தும் ’ஸ்கைப்’ வரையிலுமாக சகல வழிகளிலும் கற்றுத் தருகிறது.

இதுபோன்ற பெரு நகரங்களில் அணுக முடிந்த வேறு சில மையங்கள் அயல் மொழிகள் பலவற்றையும் ஒரே இடத்தில் கற்றுத்தருகின்றன.

ஒரே தளத்தில் 40 மொழிகள்

பிளஸ் 2வுக்குப் பின்னரான உயர் கல்வியை அயல் மொழி கற்றலில் மேற்கொள்ள விரும்புவோர் இளங்கலைப் பட்டப் படிப்பாக அவற்றை மேற்கொள்ளலாம். டெல்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்றவை நாட்டின் முதன்மையான அயல் மொழிப் பயிற்சியை வழங்குகின்றன. இங்கு இளங்கலை முதல் ஆய்வு நிலைவரை பல்வேறு மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நேரடி, தொலைநிலை படிப்புகளை வழங்குகின்றன. ஆங்கிலம், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் பகுதிநேரமாக ஏதேனும் ஓரிரு அயல் மொழிகளைக் கற்றுக்கொள்வது அவர்களின் பணிவாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

இவற்றுக்கு அப்பால் ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஸ், ஜாப்பனீஸ், சைனீஸ் மொழிகளை கற்றுக்கொள்வது தொடர்பாக இலவச உதவிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணத்துக்கு பி.பி.சி. நிறுவனம் தனது இணையதளம் (http://www.bbc.co.uk/languages/) வாயிலாக 40 அயல்மொழிகளைக் கற்றுக்கொள்ள வழி செய்திருக்கிறது.

ஆங்கிலம் வழியாக மட்டுமன்றி தமிழ் வாயிலாகவும் இந்த மொழிகளை ஓரளவுக்கு கற்றுக்கொள்ள முடியும். இணையத்தில் கிடைக்கும் வீடியோக்கள் நேரடி மொழிப் பயிற்சி பெறும் உணர்வைத் தரக்கூடியவை.

பயிற்சிக்குப் பின்னர் தங்களது வழக்கமான முழுநேரப் பணியில் ஈடுபட்டவாறே, இணையத்தின் உதவியுடன் உலகின் எந்த மூலைக்குமான மொழி சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம். இவை வருமானத்துக்கு அப்பால் தகவல் தொடர்பையும் நட்பு வட்டத்தையும் விரிவாக்கி மகிழ்ச்சியும் நிறைவுமான வாழ்க்கைக்கு அடித்தளமிடும்.துறை அறிமுகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x