Last Updated : 22 Aug, 2018 12:04 PM

 

Published : 22 Aug 2018 12:04 PM
Last Updated : 22 Aug 2018 12:04 PM

ஆங்கிலம் அறிவோமே 227: என்ன நடக்குமோ அதுவே நடக்கும்!

கேட்டாரே ஒரு கேள்வி

“என் மகளின் பள்ளியில் ஒரு அழகான ஆங்கிலப் பாடலைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதில் 'கே சரா, சரா' என்று இரு சொற்கள் அடிக்கடி வருகின்றன. அகராதியிலும் அர்த்தம் கிடைக்கவில்லை. இணையத்திலும் கிடைக்கவில்லை. பள்ளி ஆசிரியரிடம் கேட்டபோதும் தெரியவில்லை. நீங்கள் உதவுங்க​ளேன்’’.

*************

“Whodunnit story என்றால் என்ன பொருள்?’’

சிலர் இதை Whodunit என்றும் குறிப்பிடுவார்கள். இதுபோன்ற கதைகள் துப்பறியும் கதைகளாக இருக்கும். யார் குற்றவாளி என்பது கடைசியில்தான் தெரியவரும். Who has done it (Who did it) என்பதுதான் whodu​nnit என்று மாறி இருக்கிறது.

சமீபகாலமாக Howcatchem என்று சில கதைகளைக் குறிப்பிடுகிறார்கள். கதையின் தொடக்கத்திலேயே யார் குற்றவாளி என்பது தெரிந்துவிடும். அவனைத் துப்பறியும் நிபுணர் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதைப் போக்காக இருக்கும்.

*************

கேட்டாரே ஒரு கேள்வி நண்பரே, அது 'Que sera sera'. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் படமான 'The Man who knew too much' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. மிகவும் அருமையான வரிகளையும் இசையையும் கொண்ட பாடல். 'தலைசிறந்த பாடல்' என்று 1956-ல் இதற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்தப் பாடலை ஜே.லிவிங்ஸ்டன், ரேஇவான்ஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதினார்கள்.

“சிறு வயதில் நான் அம்மாவைக் கேட்டேன், ‘நான் வளர்ந்த பிறகு அழகாக இருப்பேனா‘ என்று?’’, “கொஞ்சம் வளர்ந்த பிறகு அம்மாவைக் கேட்டேன். ‘எனக்கு அழகான கணவன் வாய்ப்பானா?’ என்று. இப்படிப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அந்த அம்மா அளிக்கும் விடைதான் கே சரா சரா.

‘கே சரா சரா' என்பதற்குப் பொருள் 'என்ன நடக்குமோ அதுவே நடக்கும்' என்பதுதான். அதாவது whatever will be, will be.

‘கே சரா சரா' என்பது ஸ்​பானிஷ் மொழி என்கிறார்கள். இத்தாலிய மொழி என்பவர்களும் இருக்கிறார்கள்.

(“ ‘புகார்' என்ற இந்திப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கே சரா சரா' என்று தொடங்கும் ஒரு பாடலை வேறு டியூனில் உருவாக்கியுள்ளார் என்பதையும், பழங்காலப் பாடலான ‘சின்ன ​பெண்ணான போதிலே' என்ற ஜி​க்கி பாடிய பாடலைக் கேட்டிருந்தால் ஆங்கிலப் பாட​லின் தோராயமான பொருளும், இசையும் உங்களுக்கு விளங்கியிருக்கும்” என்பது கூடுதல் தகவல்)

Sera என்று ஓர் ஆங்கிலச் சொல்லும் உண்டு. அது serum என்பதன் பன்மை.

Serum என்பது ரத்தத்தின் மெல்லிய மஞ்சள் திரவப் பகுதி.

*************

Clap என்றாலும், applause என்றாலும் ஒரே பொருள்தானே?

பாராட்டைத் தெரிவிப்பதற்காகக் கை தட்டுவதுதான் clapping. பலரும் சேர்ந்து கைதட்டுவதை applause என்பார்கள். இதை ‘அப்ளோஸ்' என்று உச்சரிக்க வேண்டும்.

*************

Venture – Adventure

Venture என்றால் ரிஸ்க் உள்ள ஒன்றை மேற்கொள்வது. Joint Venture என்றால் இப்படிக் கூட்டாகச் செய்வது.

Venture Capital என்றால் ரிஸ்க் உள்ள ஒரு திட்டத்தில் செய்யும் முத​லீடு. ஒரு நிறுவனத்தைப் புதிதாகத் தொடங்கும்போதோ வணிகத்தைப் புதிய கோணத்தில் விரிவுபடுத்தும்போதோ செய்யப்படும் முதலீட்டை Venture Capital என்று கூறுவதுண்டு.

Adventure என்றால் சாகசம். அதாவது ரிஸ்கோடு மிகுந்த

த்​ரில்லையும் தரும் ஒன்று.

ஆக venture, adventure இரண்டிலும் ரிஸ்க் உண்டு.

*************

“சமீபத்தில் பரபரப்பாகி இருக்கும் ஒரு விஷயத்தில் Casting Couch என்ற சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு என்ன பொருள்?” எனக் ​கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

‘Couch' என்பது சோஃபாவைக் குறிக்கிறது. டாக்டரின் க்ளினிக்கில் நோயாளியைச் சோதிக்க ஒரு உயரமான படுக்கை இருக்கு​மே அதையும் couch என்பார்கள். Cast என்பதை நடிப்பவர்களின் பட்டியலைக் குறிக்கப் பயன்படுத்துவார்கள்.

ஆனால், casting couch என்பது வேறு. ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெறத் தயாரிப்பாளர், இயக்குநர் அல்லது கதாநாயகனுடன் ‘அவரது ஆசைக்கு இணங்குவதுதான்’ casting couch. இப்போதெல்லாம் திரையுலகைத் தாண்டியும் இது பயன்படுத்தப்படுகிறது. அதிகாரம் மிக்கவரிடம் அவருக்குக் கீழே பணிபுரிபவர் பாலியல் தொடர்பு கொண்டு பதவி உயர்வு போன்ற பலன்களைப் பெறுவதை ‘using casting couch’ என்கிறார்கள்.

தொடக்கம் இப்படித்தான்

அயர்லாந்தில் இருந்த ஒரு சிறு நகரம் மேயோ. அதை ஆட்சி செய்து வந்த ஒரு ​ஜமீன்தார், சார்லஸ் பாய்காட் என்பவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டார். இவரது வேலை ஜமீன்தாரின் வீடுகளில் வசிப்பவர்களிடமிருந்து வாடகையைப் பெற்று ஜமீன்தாருக்குக் கொடுக்க வேண்டும். அந்த வீடுகளின் வாடகையையும் அவ்வப்போது உயர்த்த வேண்டும்.

சார்லஸ் பாய்காட் ஏனோ இதயமற்றவராக இருந்தார். வாடகையை அடிக்கடி, எக்கச்சக்கமாக உயர்த்திக் கொண்டிருந்தார். இதன் காரணமாக அயர்லாந்திலுள்ள நில உரிமையாளர்கள் சங்கம் அவரை ஒதுக்கி வைக்கத் தொடங்கியது. கடைக்காரர்கள் அவருக்கு எந்தப் பொருளையும் விற்க மறுத்தனர். ஒரு கட்டத்தில் சார்லஸ் பாய்காட்டின் சொத்துகளை எல்லாம் தாங்களே எடுத்துக்கொண்டு விடுவோம் என்று எச்சரித்தனர். பிரிட்டனை விட்டே வெளியேறினார் பாய்காட். குடியிருந்தவர்களின் இந்த வெற்றி நாளிதழ்களில் முதல் பக்கத்தில் இடம்பிடித்தது. அதற்குப் பிறகு ஒருவருக்குப் பொருளை விற்கவோ, அவரிடமிருந்து பொருளை வாங்கவோ ஒருவர் மறுத்தாலோ, அவரை ஒதுக்கி வைக்கவோ ‘boycott’ செய்வதாகக் குறிப்பிடத் தொடங்கினார்கள்.

 

சிப்ஸ்

#  காதடைப்பான் என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறுவார்கள்?

Earmuff.

# Sooner or later என்றால்?

காலப்போக்கில். மெல்ல மெல்ல. You will know about him sooner or later.

# Topsy turvy என்பதன் பொருள் என்ன?

தலைகீழாக. The car rolled over and ended up topsy turvy.

 

தொடர்புக்கு - aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x