Last Updated : 17 Jul, 2018 10:30 AM

 

Published : 17 Jul 2018 10:30 AM
Last Updated : 17 Jul 2018 10:30 AM

சேதி தெரியுமா? - நீட்: தமிழில் தேர்வர்களுக்கு 196 மதிப்பெண்

நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்புப் பிழைகளுக்குப் பொறுப்பேற்று சிபிஎஸ்இ நிர்வாகம், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜூலை 10 அன்று உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்குத் தலா 4 மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மாற்றத்துடன் இரண்டு வாரத்துக்குள் மருத்துவப் படிப்புக்கான புதிய தரவரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், தமிழில் தேர்வெழுதிய 24,000 மாணவர்களுக்குத் தலா 196 மதிப்பெண் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

22 மொழிகளில் பேசலாம்

மாநிலங்களவையில் வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசலாம் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஜூலை 10 அன்று தெரிவித்திருக்கிறார். மாநிலங்களவையில் புதிய மொழிபெயர்ப்பாளர்களை நியமித்த வெங்கய்யா நாயுடு, “தங்கு தடையில்லாமல் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குத் தாய்மொழியில் பேசுவதுதான் சிறந்தது. அதனால்தான், மாநிலங்களவையில் ஒரே நேரத்தில் 22 மொழிகளை மொழிபெயர்க்கும் வசதியைக் கொண்டுவருவதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டேன்” என்று சொல்லியிருக்கிறார்.

அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, ஒடியா, பஞ்சாபி, உருது ஆகிய 12 மொழிகளை ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதிகள் மாநிலங்களவையில் ஏற்கெனவே இருந்தன. தற்போது, டோக்ரி, காஷ்மீரி, கொங்கணி, சந்தாலி, போடோ, மைதிலி, மராத்தி, நேபாளி, மணிப்பூரி ஆகிய பத்து மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

17CHGOW_AMARTYA_SEN‘மோடி ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி’

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென், 2014-ம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்வதாக ஜூலை 8 அன்று தெரிவித்திருக்கிறார். அவரும், பொருளாதார நிபுணர் ழான் த்ரேஸும் (Jean Dreze) இணைந்து எழுதிய ‘ஆன் அன்செர்ட்டைன் க்ளோரி: இந்தியா அண்ட் இட்ஸ் கான்ட்ரடிக்ஷ்ன்ஸ்’ புத்தகத்தின் இந்திப் பதிப்பு வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

அந்த வெளியீட்டு விழாவில் பேசிய அமர்த்திய சென், “இருபது ஆண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியின் ஆறு நாடுகளில் (இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, நேபாளம், பூட்டான்) பொருளாதாரத்தில் இலங்கைக்கு அடுத்து சிறந்த நாடாக இந்தியா விளங்கியது. ஆனால், தற்போது கடைசியிலிருந்து இரண்டாவது இடத்துக்கு இந்தியா சென்றிருக்கிறது. சமத்துவமின்மை, சாதி அமைப்புமுறை, ஒடுக்கப்பட்டவர்கள் பிரச்சினைகளை மோடி அரசு கண்டுகொள்வதில்லை” என்று சொல்லியிருக்கிறார்.

ஆந்திராவில் ‘அண்ணா’ உணவகங்கள்

ஆந்திர பிரதேசத்தில், தமிழ்நாட்டில் செயல்படும் ‘அம்மா’ உணவகங்களைப் போன்று 60 இடங்களில் ‘அண்ணா’ உணவகங்களை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜூலை 11 அன்று திறந்துவைத்தார். அட்சய பாத்திர அமைப்பு என்ற நிறுவனம் இந்த உணவகங்களை நிர்வகிக்கிறது. இந்த உணவகத்தில் மூன்று வேளையும் ரூ.5 விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவின் நினைவாக இந்த உணவகங்களுக்கு ‘அண்ணா’ உணவகம் என்று பெயரிடப்பட்டிருக்கின்றன. ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் 203 உணவகங்கள் திறக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அம்மா உணவகங்களை ஆய்வுசெய்த ஆந்திர அமைச்சர்களும் அதிகாரிகளும் அதை மாதிரியாக வைத்து இந்த ‘அண்ணா’ உணவகத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

வரையாடுகளுக்கு ஆபத்து

பருவநிலை மாற்றம் காரணமாக, 2030-களில் அருகிவரும் உயிரினமான நீலகிரி வரையாடுகளின் வாழிடங்கள் 60 சதவீதம் அழிந்துவிடும் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. ‘இகலாஜிக்கல் இன்ஜினீயரிங்’ என்ற சர்வதேச இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள், பருவநிலை மாற்றம் இப்படியே தொடர்ந்தால், எஞ்சியிருக்கும் 2,500 நீலகிரி வரையாடுகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையிலும், கேரளாவில் பரம்பிக்குளம், சின்னாறு போன்ற பகுதிகளிலும் வரையாடுகள் வாழ்ந்துவருகின்றன.

மரபணு மாற்றப்பட்ட பயிர்: இந்தியாவுக்கு 5வது இடம்

உலகில் மரபணு மாற்றப்பட்ட பயிர்ப் பகுதியில் 2017-ம் ஆண்டில், இந்தியா ஐந்தாவது பெரிய நாடாக இருப்பது சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ‘ஐ.எஸ்.ஏ.ஏ.ஏ.’ (ISAAA) என்ற சர்வதேச விவசாய-உயரித்தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கான அமைப்பு, ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் வணிகமயமாக்கம் 2017’ என்ற தலைப்பில் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் 1.14 கோடி ஹெக்டர் நிலங்கள் மரபணு மாற்றப்பட்ட பயிர் நிலப் பகுதியாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலக அளவில், மரபணு மாற்றப்பட்ட பயிர் நிலப்பகுதியில் முதலாவது இடத்தில் அமெரிக்காவும் பிரேசில், அர்ஜென்டினா, கனடா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன.

தங்கம் வென்ற ஹிமா தாஸ்

பின்லாந்தில் நடைபெற்ற உலகத் தடகள ஜூனியர் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஹிமா தாஸ் ஜூலை 12 அன்று தங்கம் வென்றார். இதன் மூலம் உலகத் தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை ஹிமா தாஸ் படைத்திருக்கிறார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ், இந்தப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார். இந்தப் போட்டியில், ரோமேனியாவைச் சேர்ந்த ஆன்ட்ரியா மிக்லோஸ் வெள்ளிப் பதக்கமும் அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் மேன்ஸன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ட்ரம்புக்கு எதிராக திரண்ட லண்டன்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் அரசுமுறை பிரிட்டன் வருகையை எதிர்த்து லண்டனில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஜூலை 13 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, அகதிகளுக்குத் தடை, வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதில் கட்டுப்பாடு, இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அவரின் இந்த இனவாதப் போக்கைக் கண்டிக்கும் விதமாக, அரசுமுறை சுற்றுப்பயணம் வந்திருக்கும் ட்ரம்ப்பை எதிர்த்து லண்டனில் 2,50,000 மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பயணத்தின்போது, இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோரை ட்ரம்ப் சந்தித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x