Published : 17 Jul 2018 10:30 AM
Last Updated : 17 Jul 2018 10:30 AM

வேலை வேண்டுமா? - பொறியாளருக்குக் காவல்துறைப் பணி

மிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) பதவியில் 309 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மாநிலச் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் பாடத்தில் டிப்ளமோ படித்தவர்களும், இதே பாடத்தில் பட்டப் படிப்பு (பி.இ., பி.டெக்.) படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேவையான தகுதி

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 28 ஆகவும், பி.சி., பி.சி.-முஸ்லிம், எம்.பி.சி. வகுப்பினருக்கு 30 ஆகவும், எஸ்சி, எஸ்.டி. வகுப்பினருக்கு 33 ஆகவும், ஆதரவற்ற கைம்பெண்களுக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவல்துறைப் பணியில் இருந்தால் வயது வரம்பு 45 ஆகும். மொத்தக் காலியிடங்களில் 20 சதவீதம் காவல்துறையில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெறும். இதில் பொது அறிவு பகுதியில் 60 வினாக்களும் தொழில்நுட்பப் பாடத்தில் 100 வினாக்களும் இடம்பெறும். 3 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் அரை மதிப்பெண் வீதம் எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 80 மதிப்பெண்.

கூடுதல் கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டு பங்கேற்பு ஆகியவற்றுக்கு 5 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண். ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் நேர்முகத் தேர்வுக்குத் தகுதிபெற முடியும். ‘ஒரு காலியிடத்துக்கு 3 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

உரிய கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடல் திறன் தகுதியும் உடையவர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆகஸ்டு மாதம் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x