Last Updated : 10 Jul, 2018 10:34 AM

 

Published : 10 Jul 2018 10:34 AM
Last Updated : 10 Jul 2018 10:34 AM

சேதி தெரியுமா? - சி.பி.எஸ்.இ.யின் சர்வாதிகாரப் போக்கு

நீட் தேர்வு வினாக்கள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜூலை 6 அன்று தெரிவித்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மொழிபெயர்ப்புக் குளறுபடி காரணமாகக் கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நீட் தேர்வில் தவறாகக் கேட்கப்பட்ட 49 வினாக்களுக்குரிய 196 மதிப்பெண்கள் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும், அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் மனுதாரர் கோரியிருந்தார். ஜூலை 2, 6 ஆகிய தேதிகளில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்த வழக்கில், நீதிபதிகள் சி.பி.எஸ்.இ. சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறதா என்றும், பிகார் மாநில மாணவர்கள் நீட் தேர்வில் அதிகமாகத் தேர்வானது எப்படி என்றும், பிழையான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்காமல் எப்படித் தேர்வு முடிவுகளை வெளியிட முடியும் என்றும் கேள்வியெழுப்பினர். இந்த வழக்கின் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.

10CHGOW_SUPREME_COURTதமிழகத்துக்கு நீர் திறக்க உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் ஜூலை 2 அன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது கர்நாடக, தமிழ்நாட்டுக்கு 31.24 டி.எம்.சி. நீரை ஜூலை மாதத்தில் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது காவிரி மேலாண்மை ஆணையம். தமிழ்நாடு, கர்நாடக, புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததை எதிர்த்து கர்நாடகா உச்ச நீதிமன்றத்தை அணுக இருப்பதாக ஜூன் 30 அன்று அறிவித்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

தலைமை நீதிபதிக்கே முழு அதிகாரம்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதற்கான முழு அதிகாரம் இருப்பதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு ஜூலை 6 அன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்ற வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் தார்மீக அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு எனவும், இதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனவும் தீர்ப்பளித்தனர்.

உச்ச நீதிமன்ற வழக்குகள் ஒதுக்கீடு செய்வதில் இந்த முறையே தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 2018 ஜனவரி 12 அன்று நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (செலமேஸ்வர் -பணி ஓய்வுபெற்றவர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப்) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் என்று ஊடகச் சந்திப்பில் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனையுடன்தான் டெல்லி துணைநிலை ஆளுநர் செயல்பட முடியும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு ஜூலை 4 அன்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். யூனியன் பிரதேசமான டெல்லிக்கு மற்ற மாநிலங்களைப் போல் தனி அதிகாரம் இல்லையென்றாலும் டெல்லி அமைச்சரவையின் ஆலோசனையோடுதான் துணைநிலை ஆளுநர் செயல்பட முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்பால், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும் துணை நிலை ஆளுநர் அனில் பைஸலுக்கும் இடையிலான மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோ சோதனை வெற்றி

ஆபத்து நேரிடும்போது விண்கலத்தில் விண்வெளிப் பயணக்குழு தப்பிக்கும் நடைமுறையின் முதல் சோதனை முயற்சியை இஸ்ரோ ஜூலை 5 அன்று வெற்றிகரமாக நடத்தியது. ‘பேட் அபார்ட் டெஸ்ட்’ (PAT) எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தச் சோதனை, விண்கலத்தில் கோளாறு ஏற்படும்போது அதிலிருக்கும் விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. இஸ்ரோவின் இந்தத் தொழில்நுட்பம் முதல் கட்டச் சோதனையில் வெற்றிபெற்றுள்ளது.

மகிழ்ச்சிக்கான பாடத்திட்டம்

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ்ச்சிப் பாடத்திட்ட’த்தை ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் இருந்து எட்டாம் வகுப்புவரையுள்ள மாணவர்களுக்கு ஜூலை 2 அன்று அறிமுகம் செய்தது டெல்லி அரசு. இந்த மகிழ்ச்சிப் பாடத்திட்டத்தை திபெத்திய தலைவர் தலாய் லாமாவும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் இணைந்து வெளியிட்டனர். டெல்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் எட்டு லட்சம் மாணவர்களுக்குத் தினசரி 45 நிமிடங்களுக்கு மகிழ்ச்சி வகுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறை

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு, இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள ஊழலுக்கு எதிரான நீதிமன்றம், ஜூலை 6 அன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மருமகள் சஃப்தாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. பனாமா ஆவணங்களில் பெயர் அடிபட்டதால் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் 2017 ஜூலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் நவாஸ் ஷெரிப். இந்நிலையில், ஜூலை 25 அன்று நடைபெறும் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரிப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்குக்கு எதிரான விளைவுகளை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயரும் கடல்மட்டம்: எகிறும் செலவு

வெள்ளத்தால் உயர்ந்துவரும் கடல்மட்டத்தின் காரணமாக 2100-ம் ஆண்டு முதல் வெள்ள மேலாண்மைக்காக ஆண்டுதோறும் 14 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறது பிரிட்டனின் தேசியக் கடல்சார் மையம் (NOC). இது தொடர்பாக இந்த மையம் நடத்திய ஆய்வு முடிவு ஜூலை 3 அன்று ‘என்விராண்மென்டல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது. உலக சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் கீழே கொண்டுவர முடியாவிட்டால், கடல் மட்டம் உயர்வதைத் தடுக்க முடியாது எனத் தெரிவிக்கிறது இந்த ஆய்வு. இதனால், உலக நாடுகளின் வருடாந்திர வெள்ள மேலாண்மைச் செலவு அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x