Last Updated : 19 Jun, 2018 10:44 AM

 

Published : 19 Jun 2018 10:44 AM
Last Updated : 19 Jun 2018 10:44 AM

பொறியியல் சேர்க்கை பின்தங்கும் பெண்கள்

ள்ளிகளின் பொதுத் தேர்வு முடிவுகளில் மாணவிகள் கையே ஓங்கி இருக்கும். ஆனால், அடுத்தகட்ட உயர் படிப்புகளில் முக்கியமாகப் பொறியியல் படிப்பில், சேர்க்கை அளவிலேயே மாணவிகள் பின்தங்கிவிடுகிறார்கள். பொறியியல் துறையைப் பொறுத்தவரை படிக்குமிடத்திலும் பணியிடங்களிலும் பாலினச் சமத்துவம் தடுமாறவே செய்கிறது. இந்த நிலையை மாற்ற, பொறியியல் படிப்புகளில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் மேற்கொள்ள வேண்டி பல்வேறு முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பக் கல்வி பெறுவதில் சரிவு

நாட்டின் முன்னணிக் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. சேர்க்கைக்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுக்கு 2015-ம் ஆண்டில் விண்ணப்பித்த கிட்டத்தட்ட 10 லட்சம் பேரில் மாணவிகள் 18 சதவீதம் மட்டுமே என்கிறது ஓர் ஆய்வு.

அப்போது ஐ.ஐ.டி. நிறுவனங்களில் 9 சதவீதமாக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை 2016-ல் 8 சதவீதமாகக் குறைந்தது அதிர்ச்சியானது. எனவே, 2020-ல் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கையை 20 சதவீதமாக உயர்த்தும் நோக்கில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான இருக்கைகளைக் குறைக்காது இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி.யைத் தொடர்ந்து என்.ஐ.டி. நிறுவனங்களும் மாணவிகளுக்கான இருக்கைகளை 4 சதவீதம் உயர்த்தி உள்ளன. கடந்த ஆண்டு மாணவிகளின் எண்ணிக்கை 22 சதவீதமாக இருந்தது நடப்பாண்டில் 14 சதவீதமாகக் குறைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நாட்டின் முன்னணிப் பொறியியல் கல்வி நிறுவனங்களிலேயே இந்த நிலை என்றால் அடுத்தகட்ட நிறுவனங்களிலும் மாணவிகளின் சேர்க்கை வேறுபல காரணங்களால் குறைந்துவருகிறது. இங்கே தகுதி இருந்தும் மாணவிகள் தங்கள் முன்னுரிமையில் பொறியியல் கல்வியைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றனர்.

குடும்ப நெருக்கடிகள்

பொறியியலை மாணவிகள் புறக்கணிக்கக் காரணம் அவர்களின் பெற்றோர், குடும்பத்தினர் ஆகியோரது அழுத்தமே. தரமான கல்லூரி, பிடித்தமான பாடப் பிரிவு ஆகியவற்றைவிட அருகில் அமைந்திருப்பது, பாதுகாப்பான சூழல், வீட்டிலிருந்து சென்று வரும் வசதி ஆகியவற்றுக்கே மாணவிகளின் பெற்றோர் முன்னுரிமை தருகின்றனர். அப்படியே பெண்கள் பொறியியலில் சேர்ந்தாலும் மெக்கானிக்கல், சிவில் போன்ற துறைகளைத் தவிர்க்கவே முயல்கிறார்கள்.

பளு மிகுந்த பணிச் சூழல், களப்பணிக்கான அவசியம், அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருப்பது ஆகியவையே இந்தத் தயக்கங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. மாறாக கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., இ.சி.இ., உள்ளிட்ட பிரிவுகளில் ஒப்பீட்டளவில் மாணவிகள் அதிகம் சேருகிறார்கள். அலுவலகச் சூழலில் அடங்கிவிடும் மேசைப் பணி, வசதியான பணி நேரம் ஆகியவற்றுடன் அதிக ஊதியம் காரணமாகவும் ஐ.டி., துறைப் படிப்புகளுக்குப் பெண்கள் முன்னுரிமை தருகின்றனர். பெண்களுக்கு இவையே பாதுகாப்பு எனக் குடும்பத்தினர் தரும் நெருக்கடி காரணமாகவே மாணவிகள் இவ்வாறு தங்களைச் சுருக்கிக்கொள்கின்றனர்.

தொழில்நுட்ப உலகில் ராணி

நிதர்சனத்தில் மேற்கண்ட வேறுபாடுகளை எல்லாம் பாராது பொறியியலில் பல்வேறு பிரிவுகளில் நுழைந்து சாதித்து ஆண்களைவிட ஒரு படி மேலான உயரங்களைத் தொட்ட பெண் பொறியாளர்கள் இருக்கிறார்கள். கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற விண்வெளி வீர மங்கைகள், ஆண்களுக்கு மட்டுமே என்று இருந்த ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் பெண்கள் சேரக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

மேலும் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் பெண்களே பரவலாகிவருகின்றனர். ஃபேஸ்புக் நிறுவனத்தின் சீஃப் ஆபரேட்டிங் ஆபீசர் பொறுப்பில் இருக்கும் ஷெரில் சாண்ட்பெர்க், கூகுளின் தாய் நிறுவனமான ‘அல்ஃபாபெட்’ தலைமை நிதி அலுவலராக இருக்கும் ரூ போரட், யூ ட்யூப் நிறுவனத்தின் சி.இ.ஓ., சூசன், ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான ஏஞ்சலா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.எஃப்.ஓ. ஏமி ஹுட் என உலகம் முழுக்க இந்தப் பட்டியல் நீளமானது. இந்தியாவிலும் பொறியியல் படித்து டி.ஆர்.டி.ஓ.வில் விஞ்ஞானியாக இருக்கும் டெஸி தாமஸ் அக்னி-4 ஏவுகணையின் திட்ட இயக்குநராகப் பணியாற்றி இந்தியாவின் ஏவுகணைப் பெண்ணாக அறியப்படுகிறார்.

தேவை ஊக்குவிப்பு

கலை அறிவியல் படிப்புகளுக்கு இணையாகப் பொறியியல் கல்வி பரவலாகத் தொடங்கப்பட்டபோது, பொறியியல் கல்லூரியில் மாணவிகளின் சேர்க்கை கணிசமாக அதிகரித்தது. பொறியியலில் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பல மகளிர் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. ஆனால், ஏ.ஐ.சி.டி.இ. தகவலின்படி 2014-15 ஆண்டில் இந்தக் கல்லூரிகளின் மொத்தமுள்ள மாணவிகளுக்கான 50,537 இடங்களில், 18,305 மட்டுமே நிரம்பின.

தோராயமாக 32 ஆயிரம் இருக்கைகள் காற்றுவாங்கின. அடுத்தடுத்த வருடங்களில் பல்வேறு காரணங்களால் பல கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலை மாறப் பெற்றோர், குடும்பத்தினரின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும். அதுபோலவே பொறியியல் கல்விக்கு ஆகும் செலவுகளும் குறைந்துவரும் வேலைவாய்ப்புகளும் பெற்றோரின் தயக்கத்தை அதிகரித்துள்ளன. இதனால் செலவு குறைந்த கலை அறிவியல் படிப்புகளில் மாணவிகளைப் பெற்றோர் சேர்க்கின்றனர்.

ஆனால், பொறியியலில் ஆர்வம் உடைய மாணவிகள் இவ்வாறு புறக்கணிக்கப்படுவதும் அதற்குக் காரணமான அம்சங்களும் களையப்படுவதும் முக்கியம். ஐ.ஐ.டி., என்.ஐ.டி. நிறுவனங்களைப் பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களைக் கொண்டுவரலாம். மாணவிகள் மத்தியிலும் அவர்களுக்குப் பொறியியல் துறை மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டங்கள் தொடங்கி மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x