Last Updated : 12 Jun, 2018 10:38 AM

 

Published : 12 Jun 2018 10:38 AM
Last Updated : 12 Jun 2018 10:38 AM

வெற்றி நூலகம்: மாணவர்களைப் பந்தாடும் ‘இரட்டைக் கல்வி’

‘பனிக்காலைப் பொழுதில் பனி மூட்டத்தைத் தொட்டு நின்றது நாளந்தா பல்கலைக்கழகத்தின் கம்பீரமான கோபுரம்’ என்று 1,500 ஆண்டுகளுக்கு முன்பே வர்ணித்தார் சீன பெளத்தத் தத்துவ மேதை சுவான் சாங். அவர் பார்த்து வியந்தது நாளந்தா பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் கண்காணிப்பு கோபுரம். உலகின் பழமைவாய்ந்த பல்கலைக்கழகமான நாளந்தாவில் அன்றே வானியல், கணிதம், வரலாறு, சட்டம், மொழி, மதம், மருத்துவம், பொதுச் சுகாதாரம், கட்டிடக்கலை உள்ளிட்ட பல புலங்களில் கற்பித்தலும் ஆராய்ச்சியும் நடைபெற்றன.

இவ்வாறு கல்வியை வளர்த்தெடுத்த இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அன்று வயதுவந்த இந்தியர்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் 18 சதவீதம் மட்டுமே. இன்றைய தேதியில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஒரு இந்தியப் பல்கலைக்கழகம்கூட இடம்பெறவில்லை. அவ்வளவு ஏன் சமீபத்தில் இந்தியப் பள்ளி மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கு வாசிக்கும் திறன், கடிகாரம் பார்த்து நேரத்தைக் கணக்கிடும் திறன் உள்ளிட்ட அடிப்படைத் திறன்கள்கூட இல்லை என்பது பட்டவர்த்தனமானது.

உயர்கல்வியில் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஒரு நாடு இன்று கல்வியில் மிகவும் பின்னடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டது எதனால், உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, சாதனைகளும் குறைபாடுகளும் எவை, தனியார் பள்ளிக் கல்வி இதற்கு மாற்றாகுமா, அனைவருக்கும் தரமான கல்வியைக் கொண்டுசேர்ப்பது எப்படி, கல்விக்கும் சுகாதாரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பது போன்ற பல கேள்விகளை நுட்பமாக அலசி ஆராய்ந்து விடை தேடிக் கண்டறிந்திருக்கும் புத்தகம்தான் ‘கல்வியும் சுகாதாரமும் – கொள்கைகள், பிரச்சினைகள், தீர்வுகள்’.

பொருளாதார அறிஞர்கள் அமர்தியா சென், ஜீன் டிரீஸ் இணைந்து 2014-ல் எழுதிய ‘An Uncertain Glory- India and its Contradictions’ என்ற புத்தகம் பேராசிரியர் பொன்ராஜின் மொழிபெயர்ப்பில் தமிழில், ‘நிச்சயமற்ற பெருமை- இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்’ என்று வெளிவந்தது. அந்தப் புத்தகத்தில் கல்வி, சுகாதாரம் குறித்து எழுதப்பட்ட பகுதிகளைப் பிரித்தெடுத்துச் சிறிய புத்தகமாகத் தற்போது வெளியிட்டிருக்கிறது பாரதி புத்தகாலயம்.

பள்ளிக் கல்வித் தொடர்பான சிக்கல்களை வெறும் தகவல்களின் அடிப்படையிலோ அல்லது சித்தாந்தம் மீதான உணர்வுபூர்வமான சாய்வினாலோ அணுகாமல் நுணுக்கமான விவாதப் புள்ளிகளை எழுப்பி, அவற்றின் வழியாக வாசகர்களை சிந்தித்துச் செயல்படத் தூண்டுகிறது இந்தப் புத்தகம். உதாரணத்துக்கு, கல்வித் தரம் இந்தியாவில் மோசமடையக் காரணம் பொதுக்கல்வி முறைதான் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதற்கு மாற்று தனியார் கல்வி நிலையங்களே என்றும் சொல்லப்படுகிறது. இத்தகைய வாதத்துக்கு எதிர்வாதத்தை நிரூபணங்களின் ஊடாக அமர்தியா சென்னும் ஜீன் டிரீஸூம் முன்வைக்கிறார்கள்.

book

2011-ல் விப்ரோ நிறுவனமும் ‘எஜூகேஷன் இனிஷியேட்டிவ்ஸ்’ நிறுவனமும் இணைந்து டெல்லி, பம்பாய், சென்னை, பெங்களூரூ போன்ற நகரங்களில் உள்ள ‘தலைசிறந்த’ 83 தனியார் பள்ளிகளில் நடத்திய ஆய்வின்போது அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மிகக்குறைவான அறிவும் திறனும் இருப்பது தெரியவந்தது. இவ்வாறாக தனியார் பள்ளிகளிலும் தரம் குறைவான கல்வியே புகட்டப்படுவது வெட்ட வெளிச்சத்துக்கு வருகிறது.

அதேநேரத்தில் அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்பது அமெரிக்க அதிபர் தேர்தலில்கூட எதிரொலித்தது. இப்படி சிலரை ஏணியின் மேல் தட்டில் வைப்பதும் பெரும்பகுதி மாணவர்களை ஏணியில் மிகவும் கீழே நின்றுவிடுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் ‘இரட்டைக் கல்வி’ முறை கொடிய அநீதியாகும் என்பதை விமர்சனப்பூர்வமாக இந்தப் புத்தகம் நிறுவுகிறது.

இந்திய மாநிலங்களுள் இமாசலப் பிரதேசமும் தமிழ்நாடும் சிறந்த கல்வித் தேர்ச்சி நிலையைப் பெற்றிப்பதையும் அமர்தியா சென், ஜூன் டிரீஸ் ஆகிய இருவரும் சுட்டிக்காட்டுகிறார்கள். சர்வதேசப் பார்வையில் இம்மாநிலங்களின் கல்வியும் தரமும் குறைபாடுடையதாக இருந்தாலும் இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நிச்சயமாகக் கல்வித் தரத்தில் உயர்ந்துள்ளன என்கிறார்கள். மொத்தத்தில் கல்வி தொடர்பான சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் சமூக, அரசியல், பொருளாதார விசாரணை மூலம் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.

கல்வியும் சுகாதாரமும் - கொள்கைகள், பிரச்சினைகள், தீர்வுகள்

ஜீன் டிரீஸ், அமர்தியா சென் | தமிழில்: பேரா. பொன்னுராஜ்
ரூ.80/-
| பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018 | தொலைபேசி: 044 24332924

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x