Last Updated : 29 May, 2018 10:45 AM

 

Published : 29 May 2018 10:45 AM
Last Updated : 29 May 2018 10:45 AM

பிளஸ் 2-வுக்குப் பிறகு: என்றென்றும் அறிவியல்!

ல்வியாண்டுதோறும் புதிது புதிதாக உயர்கல்விப் படிப்புகள் அறிமுகமாகிவருகின்றன. ஆனபோதும் ஒரு சில அடிப்படையான பாரம்பரியப் படிப்புகள், தலைமுறைகள் தாண்டியும் வரவேற்பு இழக்காமல் இருக்கின்றன. கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அந்த வரிசையில் சேரும். பிளஸ் டூ-வில் இவற்றை முதன்மைப் பாடங்களாகப் படித்தவர்கள், கல்லூரிகளில் இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வாய்ப்பு நிறைந்த அறிவியல்

இயற்பியல், வேதியியல் உயர்கல்வித் துறைகள் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிகளுக்கு அப்பால் அதிகக் கவனம் பெறாதிருக்கின்றன. பி.எஸ்சி. இயற்பியல் படித்தவர்களுக்கு ஏரோ ஸ்பேஸ், எண்ணெய், எரிவாயு, பொறியியல், உற்பத்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. முதுநிலையில் இயற்பியல் அல்லது அப்ளைய்டு பிஸிக்ஸ், ஆராய்ச்சிப் படிப்புகள், எம்.பி.ஏ. போன்றவை மூலம் உயர்கல்வித் தகுதியை மாணவர்கள் உயர்த்திக்கொள்ளலாம்.

பி.எஸ்சி. வேதியியல் படித்தவர்களுக்கு வேதிப்பொருள் ஆய்வகங்கள், மருந்துவ, மருந்து பரிசோதனைக் கூடங்கள், சுகாதாரம்-ஆரோக்கியம் சார்ந்த நிறுவனங்கள், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு - ஆராய்ச்சி நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பணிகள் காத்திருக்கின்றன. தொடர்ந்து எம்.எஸ்சி.யில் பயோ கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, ஃபார்மாசூட்டிகல் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவற்றைப் படித்துப் பொதுத் துறை, தனியார் துறைகளில் பணிவாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளலாம்.

இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்குச் சில மாதங்கள் பயிற்சியளித்து ஐ.டி. துறை பணியில் அமர்த்திக்கொள்கிறது. மருத்துவ சேவை, அழகுசாதனங்கள், மருந்துப் பொருள் தயாரிப்பு தொடர்பிலான பி.பீ.ஓ. நிறுவனங்களும் இதேபோன்று இளம் அறிவியல் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளித்துப் பணியில் சேர்த்துக்கொள்கின்றன.

இளம் அறிவியல் படிப்புடன் முதுநிலையை மேற்கொள்ள விரும்புவோர், எம்.எஸ்சி. நானோ டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் சென்னையில் உள்ள மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம் (https://www.clri.org/), காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்(http://www.cecri.res.in/), மொஹாலியில் உள்ள INST (http://www.inst.ac.in/) ஆகிய மையங்களில் அவற்றைப் பயிலலாம்.

கணிதத்தைக் கைப்பற்றுவோம்!

ஆரியபட்டா முதல் சகுந்தலாதேவிவரை கணித உலகுக்கு நம் நாடு வழங்கிய கொடைகள் ஏராளம். ஆனால், இன்று பள்ளியில் கணிதப் பாடத்தில் நன்றாகப் பிரகாசிக்கும் மாணவர்களைப் பெரும்பாலும் பொறியியல் உயர்கல்வியில் தள்ளும் போக்கே காணப்படுகிறது. இயல்பாகக் கணிதத்தில் ஆர்வம்கொண்ட மாணவர்களுக்கு அந்தத் துறை சார்ந்தே உயர்கல்வியைத் தீர்மானிக்கப் பெற்றோர் விடுவதில்லை.

ஆசிரியர் பணிக்கு அப்பால் பரவலாக இருக்கும் வாய்ப்புகளை நாம் அறியாமல் இருப்பதே இதற்குக் காரணம். எதிர்காலம் தகவல் சுரங்கங்களின் கையில் இருப்பதும், தகவல்களை அலசுவதும் ஆராய்வதும், அதன் அடிப்படையில் வணிக அடிப்படையிலான முடிவுகளை எட்டுவதும் கணிதப் பட்டதாரிகளின் தேவைகளை அதிகமாக்குகின்றன.

மேலும் கணிதத்தைப் படிப்பவர் இயற்பியல், நிதி, புள்ளியியல், பொருளாதாரம் எனப் பல துறைகளில் தங்கள் உயர்கல்வியை முன்னெடுக்கவும், அவை சார்ந்த உறுதியான பணியிடங்களைக் கைப்பற்றவும் வாய்ப்பாகிறது.

பி.எஸ்சி. கணிதம் என்ற மூன்றாண்டு இளம் அறிவியல் படிப்பு, கிட்டத்தட்ட அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் கிடைக்கிறது. பி.எஸ்சி. கணிதம் முதன்மைப் பாடமாகவும் இயற்பியல், வேதியியல் போன்ற இதர அறிவியல் பாடங்கள் உதவிப் பாடங்களாக அமைவதுபோல, பி.ஏ., கணிதமும் சில கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.

கணிதத்தை சென்னை கணித அறிவியல் நிறுவனம் (https://www.cmi.ac.in/admissions/) போன்ற சிறப்பான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வது நல்லது. பெங்களூரு புள்ளியியல் நிறுவனம் மூன்றாண்டு படிப்பாகவும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (https://www.iisc.ac.in/) 4 ஆண்டு படிப்பாகவும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (https://www.iiseradmission.in/) மற்றும் பல ஐ.ஐ.டி. நிறுவனங்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பாகவும் கணிதத்தை வழங்குகின்றன.

பிளஸ் டூ-வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தனி நுழைவுத் தேர்வுகள் வாயிலாக முன்னணிக் கல்வி நிறுவனங்களின் சேர்க்கை அமைந்திருக்கும். ஒரு சில தனியார் கல்லூரிகள் JEE தேர்வில் பெறும் நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் முதுகலையுடன் ஆராய்ச்சி நிலைவரை கணித உயர்கல்வியைக் கொண்டு செல்லலாம்.

முதுநிலை படிப்பைக் கணிதம் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் சார்ந்த நவீனத் துறைகளில் மேற்கொள்வோருக்குச் சிறப்பான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சைபர் செக்யூரிட்டி, ஆட்டோமேஷன் இன்டெலிஜென்ஸ், நியூமரிக்கல் அனலிடிக்ஸ், கிரிப்ட் அனலிடிக்ஸ், டேட்டா அனலிடிக்ஸ் துறைகள் இவற்றில் அடங்கும். இவை தவிர்த்துக் கணிதமும் புள்ளியியலும் கலந்த Actuarial Science துறை, நிதிச்சந்தை, காப்பீடு, தொழில் வணிகம், கணினி சார்ந்தவை எனக் கணிதம் படித்தவர்களுக்கான பெரும் உலகம் காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x