Last Updated : 10 Apr, 2018 11:45 AM

 

Published : 10 Apr 2018 11:45 AM
Last Updated : 10 Apr 2018 11:45 AM

பயனுள்ள விடுமுறை: வீட்டிலிருந்தே இணையம் பயிலலாம்!

 

பொ

துத் தேர்வுகளை எழுதியிருக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கோடை விடுமுறையைச் சுவாரசியமாகத் திட்டமிடலாம். இசை பழகுதல், ஓவியம் தீட்டுதல், நீச்சல் பழகுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பயனுள்ள பொழுதுபோக்குகளைத் தாண்டி உயர்கல்விக்கு உதவும் வகையிலும் விடுமுறை காலத்தைத் திட்டமிடலாம்.

வேற்று மொழிகள், ஒளிப்படக் கலை போன்றவற்றைக் கற்பது எதிர்காலத்தில் நம் பணிவாழ்க்கையாக மாறவும் கூடும். இது தவிர நுழைவுத் தேர்வுகளுக்கு இப்போதிருந்தே தயாராவது போன்ற பாடம் சார்ந்த சாத்தியங்களும் உண்டு. இந்த வரிசையில் பெரும்பாலானோரின் ஆர்வம் ‘கம்ப்யூட்டர் கோர்ஸ்’.

இணையத்தில் இணையலாமே!

பொதுத் தேர்வு எழுதியவர்கள் மட்டுமன்றிப் பள்ளி மாணவர்கள் அனைவரும், கணினி சார்ந்த அடிப்படையைக் கற்றுக்கொள்வது அவசியம். இதற்குத் தனியாகக் கணினிப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டுமென்பதில்லை. கடும் கோடையில் அவதியடைவதைத் தவிர்ப்பதற்காகவே பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, நண்பர்களாக நான்கைந்து பேர் கூடி, ஒருவர் இல்லத்தில் இருக்கும் கணினியில் பெரியவர்களின் அனுமதியுடன் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இணைய இணைப்புகளை செல்போன் மூலமே எளிதாக அமைத்துக்கொள்ளலாம். இதற்கெனத் தனியாகப் பாடநூல்களும் அவசியமில்லை. இணையத்திலேயே அழகு தமிழிலும் ஆங்கிலத்திலும் எளிமையான வழிகாட்டுதல் பயிற்சிகள், வீடியோக்கள் கிடைக்கின்றன.

கூடுதலாக உள்ளூர் நூலகத்தின் உதவியை நாடலாம். மாவட்ட மைய நூலகங்கள் ஏராளமான பயனுள்ள நூல்களைக் கொண்டிருப்பதுடன், மாணவர்கள், போட்டி தேர்வர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் இணைய வசதியுடனான கணினிகளை அனுமதிக்கின்றன.

தட்டச்சுக்கான செயலி

முதல் கட்டமாகக் கணினியை இயக்குதல், விசைப்பலகையில் தட்டச்சு செய்தல் போன்ற அடிப்படைகளைப் பழகலாம். இணைய இணைப்புடன் கூடிய கணினி வீட்டிலிருந்தால் தட்டச்சு கற்க வெளியே அலைய வேண்டியதில்லை.

முறைப்படி தட்டச்சு பயிலவும், திருத்திக்கொள்ளவும், வேகம் பழகவும் பிரத்யேக இணையதளங்கள், செயலிகள் உள்ளன. ஆங்கிலத்தில் தட்டச்சு பழகியவர்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு எனத் தனியாகக் கற்க வேண்டியதில்லை. தட்டச்சு பயிற்சிக்கான பிரத்யேகக் குறுவட்டுகள் ரூ.50-ல் தொடங்கிக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கியும் பயன்படுத்தலாம்.

Browsing -1_colதேடுபொறியின் சூட்சுமம்

தட்டச்சுக்கு அடுத்தபடியாக ‘மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்’ கூறுகளில் வேர்ட், பவர்பாயிண்ட், எக்ஸல் போன்றவை குறித்து அறிந்துகொள்ளலாம். ‘புராஜெக்ட் சிக்‌ஷா’ என்ற திட்டத்தின் கீழ் மைக்ரோசாஃப்ட் அங்கீகாரம் பெற்ற வழிகாட்டி நூல் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எளிமையான, பெரிய படங்களுடன் கூடிய இந்த வழிகாட்டி உதவியுடன் கணினிசார் அடிப்படைகளைப் பழகலாம்.

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருட்களுடன் மின்னஞ்சல் அறிமுகம், பயன்பாடு குறித்தும் அறிந்துகொள்ளலாம். இவற்றுடன் தேடுபொறிகளை முறையாகப் பயன்படுத்துவது, தேவையான தலைப்புகளைக் குறைவான நேரத்தில் சரியாகத் தேடிப் பெறுவது குறித்தும் கற்றுக்கொள்ளலாம். மேலும் பாடம் சார்ந்த பயனுள்ள இணையதளங்கள் போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

திட்டமிட்டுத் தேர்ந்தெடுப்போம்

வழக்கமாக 3 முதல் 6 மாதங்கள்வரை குறுகியகாலக் கணினிப் பயிற்சிகள் பள்ளிப் பாட வேளைகளைப் போல முழு நாள் வகுப்புகளாக நடத்தப்படும். இவை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அயர்ச்சி அளிக்கலாம். எனவே, காலை அல்லது மாலை என ஒருவேளையாகப் பயிற்சி வகுப்புகளைத் திட்டமிடுவதுடன், எஞ்சிய வேளையில் பாடம் தொடர்பான செய்முறைப் பயிற்சிகளைப் பயிற்சி நிலையத்திலோ வீட்டுக் கணினியிலோ பழகுவது புத்திசாலித்தனம்.

இந்த வகையில் பள்ளி திறந்த ஓரிரு மாதங்களுக்குக் கணினிப் பயிற்சியை மாலை வகுப்பாகவோ வாரயிறுதி விடுமுறை கால வகுப்பாகவோ பெற வேண்டியிருக்கும். முறையான சான்றிதழ் அல்லது டிப்ளமோ பயிற்சிகள் எனில் இந்த அவகாசம் மாணவர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x