Last Updated : 03 Mar, 2018 04:23 PM

 

Published : 03 Mar 2018 04:23 PM
Last Updated : 03 Mar 2018 04:23 PM

ஆளுமை மேம்பாடு: பயம் தேர்வைப் பற்றியது அல்ல!

தேர்வை எதிர்கொள்வது எப்படி?

தேர்வு அறையில் நுழைந்தவுடன் மாணவர்கள் பலருக்கு உள்ளூர ஒருவிதப் பதற்றம் பரவும். தேர்வு அறையும் அங்கு நிலவும் அமைதியும் கண்காணிப்பாளரின் கண்டிப்பான பார்வையும் காகிதங்களைப் புரட்டும் ஓசையும் அவர்களுக்கு நடுக்கத்தை அளித்து அவர்களின் தன்னிலையை இழக்கச் செய்யும்.

சிலருக்குத் தேர்வு முடிவைப் பற்றிய எண்ணங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டுப் பதற்றமடையாமல் அச்சமின்றித் தேர்வை எதிர்கொள்ளும் திறன் இயல்பிலேயே இருக்கும். மற்றவர்கள் கீழே உள்ள எளிய பயிற்சிகளைத் தேர்வுக்கான நேரம் தொடங்குவதற்கு முன்பாகச் செய்துபார்க்கலாம்.

மூச்சுப் பயிற்சி

பயம் ஏற்பட்டாலே பதற்றம் உண்டாகும். பதற்றம் நேரமின்மை போன்ற தோற்ற மாயையை ஏற்படுத்தும். அது யோசிக்கவிடாமல் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று விரைவாகச் செயல்படவைக்கும். ஆழ்ந்த மூச்சை இழுத்து விடுவது நம்மைச் சற்று ஆசுவாசப்படுத்தும். இது பதற்றத்தையும் பயத்தையும் குறைக்கும். தேர்வு அறையில் வினாத்தாளைக் கையில் வாங்கியவுடன் அதைப் பார்ப்பதற்கு முன் மூச்சை ஐந்து முதல் பத்து முறைவரை ஆழமாக இழுத்துவிடுவதன் மூலம் பயத்தையும் பதற்றத்தையும் வென்று தெளிவான மனநிலையில் தேர்வை எதிர்கொள்ளலாம்.

எழுதுவதற்கு முன்னால்

வினாக்களைத் தவறாகப் புரிந்துகொள்வது என்பது மாணவர்கள் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று. இது கவனக் குறைவு, பதற்றம் போன்றவற்றால் நிகழும் தவறு. இதை சரிசெய்வது சுலபம். ஆழ்ந்து மூச்சு இழுத்துவிட்ட உடனே கையில் பேனாவை எடுக்காமல் வினாத்தாளை மட்டும் எடுங்கள். கேள்விகளை ஒன்றுக்கு இரண்டுமுறை படியுங்கள். இது கேள்வியைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவுவதுடன், உடனே விடை எழுத வேண்டும் என்ற உந்துதலையும் தடுக்கும்.

மனதுக்குள் சொல்லிப் பார்த்தல்

விடையை எழுதுவதற்கு முன் அதை மனதுக்குள் சொல்லிப் பாருங்கள். காலாண்டுத் தேர்விலோ வகுப்புத் தேர்விலோ அந்த விடையை நாம் எழுதியிருக்கிறோமா என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். அப்போது அந்தக் கேள்வியை எப்படி எதிர்கொண்டு எழுதினோம் என்பதை மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள். இது உங்களுக்கு என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்பதைப் பற்றிய சரியான புரிதலை அளிக்கும். அந்தப் புரிதலின் துணையுடன் நீங்கள் எழுதும் விடை தெளிவாக இருப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும்.

சுற்றத்தின் மதிப்பீட்டைப் புறந்தள்ளுங்கள்

தங்கள் மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண் குவிக்க வேண்டும் என்பது ஆசிரியர்களின் விருப்பம். தங்கள் குழந்தைகள் எப்போதும் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பம். ஆனால், எல்லா மாணவர்களின் திறனும் ஒரே மாதிரி இருப்பதில்லையே!

எனவே, எப்போதும் மற்றவர்களின் விருப்பத்தையும் ஆசையையும் உங்களின் மேல் சுமையாக ஏற்றிக்கொள்ளாதீர்கள். உங்களுடைய திறன் உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்களால் முடிந்தவரை படியுங்கள். ஆனால், அதை உண்மையாகவும் முழு ஈடுபாட்டுடனும் படியுங்கள். அவ்வாறு படித்தபின் நீங்கள் பெறும் மதிப்பெண் எதுவாக இருந்தாலும் அதை மகிழ்வாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஆசிரியரோ பெற்றோரோ உங்கள் மதிப்பெண்ணைப் பிறருடன் ஒப்பிட்டால் அந்த மதிப்பீட்டைப் புறந்தள்ளி முன் சென்று அடுத்த தேர்வுக்குத் தயாராகுங்கள்.

ஊகித்து எழுதலாமே

எல்லாக் கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள். விடை தெரியாத கேள்வி என்றாலும் விடையை ஊகித்து எழுதுங்கள். எழுதாமல் வெறுமையாக விடுவதைவிட ஊகித்தாவது எழுதுவதுமேல் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதைவிடப் போட்டியில் பங்கேற்பது மேல்தானே?

திட்டங்கள் வேண்டாமே

எந்த வரிசையில் தேர்வு எழுத வேண்டும் என்று உங்கள் அனைவருக்கும் ஒரு திட்டமிருக்கும். சிலர் அதிக மதிப்பெண் பெற்றுத்தரும் வினாக்களுக்கு முதலில் விடை எழுதுவீர்கள். சிலர் குறைந்த மதிப்பெண் வினாக்களுக்கு முதலில் விடை எழுதுவீர்கள். அந்த முறையில் எழுதுவதற்குத்தான் பயிற்சியும் எடுத்திருப்பீர்கள். அவ்வாறே தேர்வு எழுதவும் முயல்வீர்கள்.

ஆனால், அதன்படி எழுதும்போது தெரியாத வினாக்கள் வந்தால் அது உங்களுக்குத் தேவையற்ற அழுத்தத்தையும் பதற்றத்தையும் அளிக்கக்கூடும். எனவே, திட்டமிடப்பட்ட வரிசையில் எழுதுவதற்குப் பதிலாக நன்கு தெரிந்த கேள்விகளுக்கான விடைகளை முதலில் எழுதுங்கள். அது உங்களுக்கு அளிக்கும் உத்வேகத்தின் துணைகொண்டு விடை தெரியாத கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் விடையளிக்க முயலலாம்.

இடைவெளி அவசியம்

தேர்வு நேரம் முழுவதும் எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டு இருக்க வேண்டாம். ஒவ்வொரு கேள்விக்கும் இடையில் மிகச் சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். ஜன்னலோரம் அமர்ந்திருந்தால் சில நொடிகள் வானத்தையோ மரங்களையோ வேடிக்கை பாருங்கள். ஜன்னலோரம் கிடைக்கவில்லை என்றால் சுழலும் மின்விசிறியைப் பாருங்கள். இது தவிர தாகமில்லை என்றாலும் முப்பது நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிது தண்ணீர் குடித்துவிட்டு தேர்வைத் தொடருங்கள். இவ்வாறு செய்வது களைப்படையாமல் தேர்வு நேரம் முழுவதும் உங்களைப் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும்.

அச்சம் தவிர்

வருடம் முழுவதும் கஷ்டப்பட்டுப் படிப்பதுடன் ஒப்பிட்டால் கண்டிப்பாக மூன்று மணிநேரத் தேர்வு என்பது எளிதானதே. இருப்பினும், தேர்வின்போது ஒரு இனம் புரியாத பயம் ஏன் ஏற்பட வேண்டும்? சற்றுப் பொறுமையாகச் சிந்தித்துப் பார்த்தால், அந்த பயம் தேர்வைப் பற்றியது அல்ல என்பது உங்களுக்குப் புரியும். ஆம், ஒரு வருடப் படிப்போ மூன்று மணிநேரத் தேர்வோ உங்களுக்குப் பயம் அளிப்பதில்லை.

தேர்வுக்குப் பின் வெளிவரும் மதிப்பெண்களும் அவற்றைச் சார்ந்த சுற்றத்தின் மதிப்பீடும்தான் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த அச்சம் தேவைதானா என்றால், கண்டிப்பாகத் தேவையில்லை. பயம் எப்போதும் உங்களுக்குப் பதற்றத்தையே அளிக்கும். அந்தப் பதற்றம் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும். இதனால் உங்கள் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும்.

மேலே உள்ள எளிய பயிற்சிகள்மூலம் நீங்கள் அந்த அச்சத்தையும் பதற்றத்தையும் வென்று உங்கள் முழுக் கவனத்தையும் தேர்வில் குவித்து வெற்றியை உங்கள் வசமாக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x