Last Updated : 13 Feb, 2018 11:26 AM

 

Published : 13 Feb 2018 11:26 AM
Last Updated : 13 Feb 2018 11:26 AM

வேலை வரும் வேளை 11: கவுன்சலிங் படித்தவர்கள் குறைவு!

நான் சென்னை சிப்பெட்டில் மேனுஃபாக்சரிங் இன்ஜினீயரிங் படித்துவருகிறேன். விருப்பப் பாடமாகப் பிராடக்ட் டிசைன் தேர்ந்தெடுக்கலாமா? மேற்படிப்பில் என்ன, எங்கே படிக்கலாம்?

- நிவேதா, சென்னை.

இந்தியாவின் சில நகரங்களில் மட்டுமே உள்ள மத்திய அரசு உயர் கல்வி நிறுவனமான சிப்பெட்டில் நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். செல்ஃபோன், தொலைக்காட்சிப் பெட்டி முதல் மோட்டார் வாகனம், படகுகள்வரை ஏகப்பட்ட சாதனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் படிக்கும் படிப்புக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நிச்சயமாக புராடக்ட் டிசைன் நல்ல தேர்வுதான். அதன் பின்னர் முதுகலை படிப்பாக எம்.இ./ எம்.டெக். பிளாஸ்டிக் இன்ஜினீயரிங், எம்.இ. புரொடக்ஷன் இன்ஜினீயரிங், எம்.இ./ எம்.டெக். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், எம்.இ. இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் போன்ற முதுகலை பட்டப்படிப்புகளைப் படிக்கலாம்.

எம்.இ. பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் படிப்பு டெல்லி, பிகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இல்லையெனில், ஜி.ஆர்.இ. எழுதி தேர்ச்சி அடைந்து அமெரிக்காவிலும் இந்தப் பாடப் பிரிவுகளில் எம்.எஸ். மேற்கொள்ளலாம். ஜெர்மனியிலும் இப்பிரிவுகளில் சிறப்பாகக் கல்வி வழங்கப்படுகிறது.

இளங்கலை முதலாமாண்டு உளவியல் படிக்கிறேன். குற்றவியலில் முதுகலை படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்குப் படிக்கலாம்?

-பிரவீன், சென்னை.

நீங்கள் படிக்கும் உளவியல் படிப்புக்கு இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி நல்ல வாய்ப்பு உள்ளது. இன்றைய வேலைவாய்ப்பு சந்தையில் மட்டுமின்றி மனிதர்களின் அன்றாட வாழ்விலும் உளவியல் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. போட்டித் தேர்வுகளில் உளவியல் சோதனைக் கேள்விகள் அதிகம் இடம்பெறுகின்றன. இளம்பருவத்தினர் முதல் முதியவர்கள்வரை ஏதேனும் ஒரு கட்டத்தில் மனஉளைச்சல் ஏற்பட்டு மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள். ஆனால், முறையாக கவுன்சலிங் படித்தவர்கள் குறைவாகவே உள்ளனர். மேலும் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களின் பின்னால் உளவியல் ஆலோசகர்களின் பங்கு பெரிய அளவில் உள்ளது. எனவே இத்துறையில் முதுகலை படிப்பது உங்களுடைய எதிர்காலத்துக்கு வலு சேர்க்கும்.

அடுத்து, நீங்கள் விரும்பியது போல எம்.ஏ. கிரிமினாலஜி படிப்பு சென்னை பல்கலைக்கழகத்திலும் வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கான வேலைவாய்ப்பு பெரிதாக இல்லை. எனவே உங்களுடைய துறையிலேயே மேற்படிப்பு படித்து முன்னேறுங்கள்.

‘வேலை வரும் வேளை’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முன்னாள் இணை இயக்குநர் இரா. நடராஜன். வாசகர்கள் தங்களுடைய படிப்பு மற்றும் பணி வாழ்க்கை தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002, மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x