Last Updated : 13 Feb, 2018 11:25 AM

 

Published : 13 Feb 2018 11:25 AM
Last Updated : 13 Feb 2018 11:25 AM

புதிய கல்வியும் புதுவிதமான கலாச்சாரமும்! - தி இந்து’ சர்வதேசக் கல்விக் கண்காட்சி 2018

அயல் நாடுகளுக்குச் சென்று படிக்கும் ஆர்வம் நம் மாணவர்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், அதற்கான சரியான வழிகாட்டுதல் கிடைப்பதற்காகப் பலர் காத்துக்கிடக்கின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று மேற்படிப்பு படித்து, அதற்குரிய பணிவாய்ப்பையும் பெறுவதற்கான சிறப்பு வழிகாட்டுதல் கண்காட்சியை சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ‘தி இந்து’ நடத்திவருகிறது.

கல்வியும் ஆரோக்கியமும்

சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ரீஜன்ஸி ஹோட்டலில் பிப்ரவரி 4, 5-ம் தேதிகளில் நடைபெற்ற 10-வது ‘தி இந்து சர்வதேசக் கல்விக் கண்காட்சி 2018’-ல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

இக்கண்காட்சி தொழில்முறைப் படிப்புகளை மேற்கொள்ள முனைபவர்களுக்கு மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், அறிவியல், பாலின ஆய்வுகள் ஆகிய வெவ்வேறு கல்வி புலத்தைச் சேர்ந்த படிப்புகளையும் மேற்கொள்ள நினைப்பவர்களுக்குமானது என்று ‘தி இந்து’ என்.ராம் தெரிவித்தார். கல்வியும் ஆரோக்கியமும் அதிமுக்கியமானவை என்று வலியுறுத்தி அவர் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

இனி விசா கிடைக்கும்

தற்போது கிட்டத்தட்ட 1.8 லட்சத்து இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்துவருவதாகவும் அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இளநிலை பட்டப் படிப்பு மாணவர்கள் என்றும் நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கிய சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் பர்ஜெஸ் தெரிவித்தார். விசா கட்டுப்பாட்டை அமெரிக்க அதிபர் டிரம்பு தளர்த்தி இருப்பதால் இனி இந்திய மாணவர்கள் எளிதில் அமெரிக்காவுக்குச் சென்று படிப்பதற்கான வாய்ப்புவசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி

இளநிலை, முதுநிலைப் படிப்புகள் மட்டுமின்றி முனைவர் பட்டப் படிப்புகளையும் இந்திய மாணவர்களுக்கு வழங்க ஜெர்மனியில் உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக, ‘ஜெர்மனியில் உயர்கல்வி, ஆராய்ச்சி வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் டாட் அமைப்பின் கவுரவ இயக்குநர் ஜோனஸ் வென்ஸல் ஆற்றிய உரை பெரிதும் வரவேற்பு பெற்றது.
 

கவர்ந்திழுத்தத் தேர்வு

ஆங்கிலப் புலமையைச் சோதிக்கும் ஐஎல்ஸ் (IELTS) தேர்வை எதிர்கொள்வதற்கான அடிப்படைகள் விளக்கப்பட்ட அமர்வில் மாணவர்களைக் காட்டிலும் பெற்றோர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். மாணவர்களின் ஆங்கிலத் திறனைச் சோதித்து பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் 10 ஆயிரம் பவுண்டு பரிசுக்கான ‘குளோபல் ஸ்டடி அவார்ட்’-ஐ வெல்வதற்கான ஆர்வம் பங்கேற்பாளர்கள் இடையில் அதிகமாக வெளிப்பட்டது.

என்ன படிக்கலாம், எங்குப் படிக்கலாம் என்பனவற்றையும் தாண்டி கல்வி ஊக்கத்தொகை, உதவித்தொகை குறித்த தகவல்களும் ஒவ்வொரு தூதரகத்துக்கும் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களில் கல்வி நிபுணர்களால் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இதன் மூலம் தங்களுடைய எதிர்ப்பார்பை இந்நிகழ்ச்சி பூர்த்திசெய்திருப்பதாகப் பங்கேற்ற மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்தனர். அயல்நாடுகளில் எம்.எஸ்., எம்.பி.ஏ. படிப்பதற்கு அவசியமான ஜி.ஆர்.இ.-ன் மாதிரித் தேர்வு இரண்டு நாட்களும் இலவசமாக நடத்தப்பட்ட மாணவச் சமூகத்தைப் பெரிதும் கவர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x