Last Updated : 08 Nov, 2016 11:02 AM

 

Published : 08 Nov 2016 11:02 AM
Last Updated : 08 Nov 2016 11:02 AM

வடகிழக்கு மாநிலங்கள் - எல்லைச் சிக்கலில் தவிக்கும் அருணாச்சலப் பிரதேசம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இன்றுவரை நீடிக்கும் எல்லைப் பிரச்சினையின் மையமாக உள்ள மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். 1914-ம் ஆண்டு ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் அன்றைய திபெத் அரசு அப்போது ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசிடம் இப்பகுதியை வழங்கியது. எனினும், திபெத் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததால் அது தனியாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துச் சீனாவின் பிரதிநிதி வெளிநடப்பு செய்தார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே மக்மோகன் எல்லைக்கோடு. எனினும் இந்தக் கோட்டுக்கு உள்ளே தென் பகுதியில் உள்ள தவாங் பகுதி 1951வரை திபெத் அரசு நிர்வாகத்தின் கீழ்தான் இருந்தது.

எல்லையாக மாறிய மாநிலம்

பிரிட்டிஷ் காலத்திலும், இந்திய விடுதலையின்போதும் இப்பகுதி அசாமின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் 1954-ல் வடகிழக்கு எல்லை முகமை (North East Frontier Agency NEFA) உருவாக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் இருந்த இப்பகுதியைக் குடியரசுத் தலைவரின் சார்பில் அசாம் மாநில ஆளுநர் நிர்வகித்தார். 1965-ல் இப்பகுதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. 1967-லிருந்து இப்பகுதியின் நிர்வாகம் ஏஜென்சி கவுன்சில் மூலம் நடைபெற்ற போதிலும் அசாம் மாநிலத்துடனேயே நீடித்தது. 1972-ல் மத்திய அரசின் துணைநிலை மாநிலமாக அசாமிலிருந்து பிரிந்து சென்று, 1987-ல் தனி மாநிலமாக வடிவெடுத்தது.

வடகிழக்குப் பகுதியிலேயே அதிகமான பரப்பளவு கொண்ட இந்த மாநிலம் 61,000 சதுர கிலோமீட்டர் அளவு காடுகளைக் கொண்டதாகும். தெற்கே அசாம்-நாகாலாந்து, மேற்கே பூட்டான், கிழக்கே மியான்மர், வடக்கே திபெத் என்ற எல்லைகளைக் கொண்டது இப்பகுதி. இதிலிருந்து நீண்டு செல்லும் இமய மலைத்தொடர் திபெத்திலிருந்து இம்மாநிலத்தைப் பிரிப்பதாக அமைந்து, தொடர்ந்து நாகாலாந்து நோக்கிச் சென்று இந்தியாவுக்கும் மியான்மருக்குமான எல்லையாக மாறியது.

பெருகி ஓடும் ஆறுகள்

திபெத் பகுதியில் சாங் போ என்ற பெயரிலும், இந்த மாநிலத்தில் சியாங் என்ற பெயரிலும், வடகிழக்கின் வளத்துக்கும் துயரத்துக்கும் காரணமாக உள்ள பிரம்மபுத்திரா பின்னர் அசாமில் நுழைகிறது. இதனோடு கூடவே இமாலய மலைத்தொடரின் மூலம் இம்மாநிலத்தில் பவனி வரும் இதர 5 ஆறுகளும் சேர்ந்து இந்தியாவிலேயே மிக அதிகமான நீர்மின் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலமாக (46.9 ஜிகா வாட்ஸ்) இதை மாற்றியுள்ளன.

வடகிழக்குப் பகுதியில் அசாம், மேகாலயா ஆகியவற்றோடு வங்கத் தேசத்தின் நீர் வளத்துக்கும் விவசாயத்துக்கும் ஆதாரமாக உள்ள பிரம்ம புத்திரா திபெத்திலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வழியாகவே இந்தியா வுக்குள் நுழைகிறது. திபெத்திலிருந்து வரும் இந்த ஜீவநதியின் குறுக்கே அணைகளை உருவாக்கி நீர்மின்சாரத்தை பெருக்க சீனா ஒருபுறம் முயற்சிகளை எடுத்து வருகிறது. திபெத் (சீனா), இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளின் நீர் வளத்துக்கு ஆதாரமான, இவற்றின் ஊடே சுமார் 3,000 கி.மீ. தூரத்துக்குப் பாய்ந்து செல்லும் பிரம்மபுத்திரா ஆற்றுநீர் தொடர்பாக இந்த மூன்று நாடுகளுக்கிடையே நேரடியான மோதல் எதுவும் உருவாகவில்லை. இருந்தாலும் இது தொடர்பான கேள்விகள் இன்றும் நீடித்தே வருகின்றன.

விவசாயம்தான் வாழ்வாதாரம் ஆனால்…

அதே நேரத்தில் இந்தியாவுக்குள் பிரம்மபுத்திராவாக உருவெடுக்கும் இந்த ஜீவநதியின் வளத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முயற்சி எடுத்தது. நீர்வள மேம்பாடு, நீர்மின் உற்பத்தி ஆகியவற்றைச் சமநிலைப்படுத்த வடகிழக்கு நீர்வள ஆதார முகமம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரம்மபுத்திராவின் கீழ்ப் பகுதி மாநிலங்களான அசாம், மேகாலயா போன்றவை இதனால் பயன்பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் கெகாங் அபாங் இந்த முயற்சியைக் கடுமையாக எதிர்த்தார். மத்திய அரசால் இன்றுவரை இந்த அமைப்பை உயிர்பெறச் செய்ய முடியவில்லை.

மாநிலத்தின் பெரும்பகுதி காடுகளாக இருப்பதால் காட்டு விளைபொருட்களுக்கான விற்பனையே மாநிலத்தின் முக்கிய பொருளாதாரமாக அமைகிறது. பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் இருந்தபோதிலும் ஜும் முறையிலான விவசாயம் போதிய அளவு உணவுப் பொருட்கள் கையிருப்புக்கு உதவி செய்வதாக இல்லை.

இங்கு கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலக் கருவிகள் மூலம் சுமார் 11,000 ஆண்டுகளாக இப்பகுதியில் மக்கள் வசித்துவந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தின் இறுதிக்காலத்தில் அங்கிருந்து மக்கள் இங்கு இடம்பெயர்ந்ததாகவும் மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மொத்தம் 101 வகையான பழங்குடிகள் இங்கு வாழ்கின்றனர்.

ஆசியாவிலேயே மிக அதிகமான வகையில் 30 முதல் 50 வரை முற்றிலும் வேறுபட்ட மொழிகளைப் பேசும் மாநிலமாகவும் அருணாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x