Last Updated : 31 May, 2016 11:53 AM

 

Published : 31 May 2016 11:53 AM
Last Updated : 31 May 2016 11:53 AM

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் 1: வெற்றிக்கு அடிப்படை இலக்கு!

வாழ்க்கையில் எதையும் வெல்ல இலக்கு முக்கியம் என்பதைத் தன் அனுபவத்திலிருந்து கண்டறிந்தவர் எஸ்.இராஜேஷ் ஐ.பி.எஸ். உத்தரப் பிரதேசத்தின் 2011 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் ஆக்ரா, ஜான்சி, லக்னோ ஆகிய நகரங்களில் ஏ.எஸ்.பி.யாகவும், கான்பூர் நகர எஸ்.பி.யாகவும் இருந்தவர். தற்போது அலிகரில் உள்ள பி.ஏ.சி. (Provincial Armed Constabulary) சிறப்புப் படையின் கமாண்டராகப் பதவிவகிக்கிறார்.

இராஜேஷ் நான்காம் வகுப்பு படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர், “படித்து என்னவாகப் போகிறீர்கள்?” எனக் கேட்டார். எல்லோரும் வெவ்வேறு பதில் சொல்ல இராஜேஷ் மட்டும் ஐ.ஏ.எஸ். ஆக விரும்புவதாகச் சொன்னார். “இந்தக் கல்வியின் அர்த்தம் தெரியுமா உனக்கு?” எனக் கேட்க “தெரியாது!”

என்னும் பதில்தான் குட்டிப் பையனிடமிருந்து வந்தது. இந்தத் துறையில் வெற்றி பெறுவது கஷ்டம் என ஆசிரியர் சொல்லக் கேட்டுச் சோர்ந்துபோனது சிறுவனின் மனம். சரி, மருத்துவராகலாம் என முடிவெடுக்க அதுவும் நுழைவுத் தேர்வில் நூலிழையில் எட்டாமல் போனது. பிளஸ் டூ முடித்து கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்தார்.

அறிவுக் கண் திறப்பு

“கல்லூரி நாட்களில் எனது சொந்த ஊரான கரடிக்குளம்,கோவில்பட்டிக்குச் சென்றபோது ஒரு நாள் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையை எதேச்சையாக வாசித்தேன். கிராமப் பெண்களின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். எழுதிய அந்தக் கட்டுரையைப் படித்து எங்களுடைய கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள் சுயதொழில் செய்யத் தொடங்கினார்கள். ஒரு ஐ.ஏ.எஸ்.

அதிகாரியால் ஏற்படுத்த முடிகிற தாக்கத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்” என்கிறார் இராஜேஷ். பிறகு அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க இராஜேஷூக்கும் சமூக அக்கறை துளிர்த்தது. விடுமுறை நாட்களில் சொந்தக் கிராமத்து பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுத்தார். “அப்போதுதான் எங்க ஊரு பிள்ளைகளுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பின்தங்கியிருப்பது கண்கூடாகத் தெரிந்தது. இந்த நிலையை மாற்ற நிச்சயமாக நானும் மாவட்ட ஆட்சியாளராக விரும்பினேன்” என்கிறார்.

ஆனால், கிராமம் வரும்போது மட்டுமே இந்த உணர்வு மேலெழுந்தது. கல்லூரி திரும்பியதும் நீர்த்துப்போனது. இதனிடையே,மதுரையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தனித்தொகுதியாக இருந்தும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் போட்டியிட முடியாத நிலை இருந்தது. இதை அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியரான உதயசந்திரன் தலையிட்டு வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நிகழ்வு இராஜேஷின் மனதில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

என்ன படிக்கிறோம், எப்படிப் படிக்கிறோம்

கல்லூரி இறுதியாண்டில் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி சென்னை ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார் இராஜேஷ். அப்போது தேசிய வங்கியின் முதன்மை மேலாளரான இராஜேஷின் அப்பா சுந்தரராஜ் இது அவருக்கான வேலை அல்ல என்பதைப் புரியவைத்தார்.

ஒரு கட்டத்தில் ஐ.டி. வேலையை ராஜினாமா செய்தார் ராஜேஷ். டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர ரயில் பயணச்சீட்டு முதற்கொண்டு எல்லா ஆயத்தப் பணிகளும் செய்த பின்னர் திடீரென சிக்குன் குனியா வந்துவிட்டது. இதனால் டெல்லி போக முடியாமல் சென்னையிலேயே ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்துள்ளார். ஆனால், முதல் தேர்வில் தோற்றதால் மிகுந்த சங்கடத்துக்கு ஆளானார்.

இரண்டாவது முறைக்குத் தயாரானபோது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வுக்கும் சேர்த்துப் பயின்றார். “ஆனால் இலக்கில்லாமல் படித்ததால், யூ.பி.எஸ்.சி-யில் கோட்டைவிட்டு டி.என்.பி.எஸ்.சி-யின் குருப்-1 மட்டும் பாஸ் செய்தேன்” என்கிறார். எனினும், விடாமல் 3 ஆவது முறை திட்டமிட்டுப் பயிற்சி எடுத்தார்.

“முதல் கட்டமாக சென்னையில் தங்கிய அறையை மாற்றிக்கொண்டு, என்னைப் போலவே தயாராகும் புதிய நண்பர்களுடன் இணைந்தேன். ஒரே அறையில் அனைவரது நோக்கமும் ஒன்றாக இருந்தது உத்வேகத்தை அளித்தது” என்கிறார். இம்முறை பிரிலிம்ஸ், மெயின்ஸ் இரண்டிலும் நல்ல மதிப்பெண் வாங்கினாலும் நேர்முகத் தேர்வில் பதற்றம் அடைய ஐ.ஏ.எஸ். பிரிவில் மீண்டும் தோற்று இராணுவ வருவாய்த் துறை பிரிவில் வேலை கிடைத்தது.

மறுவருடம் நான்காவது முறையாக எழுதியதில் ஐ.பி.எஸ். கிடைத்தது. இந்த நம்பிக்கையில் ஐ.பி.எஸ். பணியாற்றியபடியே மேலும் இருமுறை முயற்சி செய்தும் கைகூடவில்லை. “வேறு வழியின்றி ஐ.பி.எஸ்.ஸில் விருப்பம் இன்றி சேர்ந்தாலும் ஒரு கட்டத்தில் விருப்பம் உண்டானது. யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை ஐந்து முறை எழுதி இரண்டு முறை பாஸ் செய்தும், ஐ.ஏ.எஸ். கிடைக்காமல் போனதற்கான காரணங்களை எண்ணிப் பார்க்கிறேன். முதல் இரு முயற்சிகளில் உறுதியான இலக்கு இன்றி இருந்ததுதான் அடிப்படைக் காரணம். ஒரு இலக்கை முடிவுசெய்து அதை நோக்கிச் செல்வதுதான் வெற்றியைத் தரும் என்பது எனது அனுபவம் சொல்லும் பாடம் ஆகும்” என்கிறார் இராஜேஷ்.

இராஜேஷ் வெற்றியின் ரகசியம்

படிக்கும் வசதி இல்லாமல்கூடத் தேர்ச்சி பெறலாம். ஆனால், இலக்கின்றி திட்டமிடாமல் வெற்றி பெற முடியாது.

பி.இ. பட்டம் பெற்றது எனக்குப் பெரிய பலனை அளிக்கவில்லை. நான் யூ.பி.எஸ்.சி-யில் பொறியியல் பிரிவுப் பாடங்களையும் எடுக்காமல் பொதுக்கல்வி, ஆங்கிலம், கணிதம் ஆகிய கட்டாயப் பாடங்களுடன் பொது நிர்வாகம் மற்றும் தமிழ் இலக்கியம் எடுத்து எழுதினேன். இவற்றில், பி.இ. கல்வி எனக்குக் கணிதப் பாடத்தில் உதவியது. தமிழ் மொழி ஆர்வமும், பள்ளித் தமிழ் ஆசிரியர் திரு. சின்னசேகர் சொல்லித்தந்த முறையும், நாகு ஐயாவிடம் பெற்ற திறமையான தமிழ்ப் பயிற்சியும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தந்தன.

யூ.பி.எஸ்.சி.க்கான இலக்கை ஒருவர் மேல்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே முடிவு செய்து கலைக் கல்லூரிப் பாடப்பிரிவுகள் படித்தால் எளிதாக வெல்லலாம்.

இதுபோன்ற போட்டித் தேர்வில் நாம் எந்த அளவுக்குப் படித்தோம் என்பதைக் காட்ட எழுதக் கூடாது. இந்தப் போட்டியில் வெல்வதற்காக எழுத வேண்டும். இதில் வெல்லும்படி உங்களுக்கு வசதியான பாடங்களைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x