Last Updated : 08 Nov, 2016 10:45 AM

 

Published : 08 Nov 2016 10:45 AM
Last Updated : 08 Nov 2016 10:45 AM

பிளஸ் டூ கணிதத் தேர்வுக்குத் தயாரா? - சதம் முதல் பாஸ் வரை

(கணிதம் தொடர்கிறது)

பிளஸ் டூ கணிதப் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 40-ல் சுமார் 30 வினாக்கள் புத்தக வினாக்களில் இருந்தே கேட்கப்படும். மீதமுள்ள 10 ஒரு மதிப்பெண் கேள்விகள், புத்தக வினாக்களுக்கு அப்பாலிருந்து கேட்கப்படும். ‘உருவாக்கப்பட்ட வினாக்கள்’ வகையை சேர்ந்த இவற்றில் பயிற்சி பெற, பள்ளிக் கல்வித்துறை வெளியீடான ‘Come Book’ உதவிகரமாக இருக்கும்.

சதம் சாத்தியம்தான்

ஆறு மதிப்பெண் பகுதிக்கு தயார் செய்கையில், அதிகப்படியான எண்ணிக்கையில் அவ்வினாக்கள் அடங்கிய 4-வது பாடத்தை தவிர்த்துவிட்டு இதர 9 பாடங்களையும், படிக்கலாம். பின்னர் கூடுதல் தயாரிப்பாக வேண்டுமானால் விட்டுப்போன 4-வது பாடத்தின் 6 மதிப்பெண் வினாக்களில் கவனம் செலுத்தலாம். அதே போல 10 மதிப்பெண் பகுதியில் தயாராக, அவ்வினாக்கள் அதிகமுள்ள 5-வது பாடத்தைத் தவிர்த்துவிட்டு ஏனைய பாடங்களை முதலில் படிக்கலாம். அதிலும் 4 பத்து மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும் 7 , 8-வது பாடத்திற்கு கூடுதல் கவனம் அவசியம்.

190 லட்சியம்,170 நிச்சயம்

நூற்றுக்கு நூறு இல்லை யென்றாலும், மதிப்பெண்களை இழக்க விரும்பாத மாணவர்கள் 10 மதிப்பெண் பகுதிக்கான தயாரிப்பில், 2, 4, 6, 9, 10 ஆகிய 5 பாடங்களையும் முதல் சுற்றில் நன்றாகப் படித்துத் தேற வேண்டும். இதில் 2 மற்றும் 4-வது பாடங்களில் இருந்து மட்டுமே, எழுத வேண்டிய 10 வினாக்களில் 5 கேட்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏனைய 6, 9 , 10-வது பாடங்களில் இருந்து தலா ஒரு 10 மதிப்பெண் கேள்வி கேட்கப்படுகிறது. அடுத்த கட்டமாகத் தலா 2 கேள்விகள் கேட்கப்படும் 7 மற்றும் 8-வது பாடங்களைப் படிக்கலாம். இந்த வகையில் 12 வினாக்களுக்குத் தயாராகி அதில் குறைந்தது 9 பத்து மதிப்பெண் வினாக்களில் முழு மதிப்பெண் பெறலாம்.

இதே வகையில்,

> 6 மதிப்பெண் வினாக்களில் தலா 2 ஆறு மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும் 1, 2, 3, 5, 9 , 10 ஆகிய பாடங்களை படிக்கலாம்.

> இதன் மூலம் 12 ஆறு மதிப்பெண் வினாக்களில் தயாராகி, அவற்றில் குறைந்தது 9 வினாக்களுக்கு முழு மதிப்பெண் பெறலாம். வினாத்தாளில் தனியாக 3 மதிப்பெண் வினா கிடையாது. ஆனால் சில 6 மதிப்பெண் வினாக்கள் இரண்டு 3 மதிப்பெண் வினாக்களாகக் கேட்கப்படுகின்றன.

> மேலும் இவை 2, 3, 5, மற்றும் 10 ஆகிய 4 பாடங்களில் இருந்தே வருவதால், அதனை கவனத்தில் கொண்டு தேர்வுக்கு தயாராவது நலம்.

> 1 மதிப்பெண் பகுதியை பொறுத்தவரை, புத்தக வினாக்களை மட்டுமே படித்து 30 மதிப்பெண்களை உறுதி செய்து கொள்ளலாம்.

தேர்ச்சி மிக எளிது

மெல்லக் கற்கும் மாணவர்களைப் பொறுத்தவரை வினாத்தாளை நன்கு படித்து புரிந்துகொண்டு விடையளிப்பதும், அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முயல்வதும் மதிப்பெண் சரிவைத் தடுக்கும். 10 மதிப்பெண்கள் பகுதிக்கு, 2 மற்றும் 4-வது பாடங்களை நேரம் ஒதுக்கிப் படிக்கவும். இந்தப் பாடங்களை படிப்பதன் மூலமாகவே முறையே 2 மற்றும் 3 என மொத்தம் 5 பத்து மதிப்பெண் வினாக்களுக்குத் தெம்பாக விடையளிக்கலாம். அடுத்த கட்டமாக 6, 9-வது பாடங்களைப் படித்துக் கூடுதலாக 2 பத்து மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கலாம். இதே போல 7, 8-வது பாடங்களில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு, உரிய படம் மற்றும் சூத்திரங்களை மட்டுமாவது எழுதுவதன் மூலம் தலா 4 என மொத்தம் 8 மதிப்பெண்களை உறுதி செய்துகொள்ளலாம். இந்த வகையில் தயாராவதன் மூலம் 10 மதிப்பெண் பகுதியிலிருந்தே எளிதாகத் தேர்ச்சி பெறலாம்.

அடுத்தபடியாக 6 மதிப்பெண் பகுதிக்கு, 1, 9-வது பாடத்திலிருந்து தலா 2 கேள்விகள் என மொத்தம் 4 கேள்விகளுக்கு சிரமமின்றித் தயாராகலாம்.

மெல்லக் கற்போர் பொதுவாக, ஒரு மதிப்பெண் பகுதியைத் தவிர்த்து விடுவதால் அவர்களின் தேர்ச்சி தள்ளிப்போகிறது. இதனைத் தவிர்க்க 1, 2, 3, 6, 9, 10 ஆகிய பாடங்களின் புத்தக வினாக்களை மட்டுமே படித்து 17 ஒரு மதிப்பெண்களை உறுதி செய்து கொள்ளலாம். இதற்கு தினத்துக்கு ஒரு பாடம் என தலா 20 நிமிடம் ஒதுக்குவதன் மூலம் ஒரே வாரத்தில் தயாராவது எளிது. இவ்வகைகளில் தேர்ச்சி பெறுவது மட்டுமன்றி சுலபமாக 110 மதிப்பெண்களை கடக்கலாம்.

தேர்வுத் தாளில் கவனம்

ஒரு மதிப்பெண் பகுதியில் சரியாக விடை தெரிந்திருந்தும் கவனக்குறைவு காரணமாகக் கணிசமான மாணவர்கள் மதிப்பெண் இழப்பது தொடர்கிறது. இதனை தவிர்க்க, பக்கத்துக்கு 10 வினாக்கள் என முன்னதாகவே 4 பக்கங்களில் தொடர்ச்சியாக வினா எண்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேர்வின் தொடக்கத்தில் அல்லது நிறைவில் என எப்போது விடையளிப்பதாக இருப்பினும், வினாக்களையும் வினா வரிசையையும் தவற விடுவதைத் தவிர்க்கலாம். அதேபோல இப்பகுதியில், கேள்வி எண் எழுதுவதோடு, உரிய ‘Option’-ஐ எழுதி விடை எழுதுவது கட்டாயம்.

6 மற்றும் 10 மதிப்பெண் பகுதிகளில் தேவையான இடங்களில் படத்தையும் உள்ளடக்கியே மதிப்பெண்கள் அளிக்கப்படும். எனவே உரிய இடங்களில் படம் வரைவதைத் தள்ளிப்போடுவது கூடாது. விடை எழுதும்போதே அக்கருத்தினை ஒட்டிய படத்தை வரைவதே அப்பகுதியைச் செறிவாகக் காட்டும். பின்னர் வரைவது நேரத்தை விரயமாக்கும்.

முதல் பாடத்துக்கான கேள்விகளுக்கு விடையளிக்கும்போது அலட்சியம், கவனக்குறைவால் மாணவர்கள் கணிதப் பிழைகளைச் செய்வது தொடர்கிறது. கணித அடிப்படை செயல்கள் மற்றும் +, - குறியிடலில் இடறும் தவறுகளை தவிர்க்க இப்பாடத் தில் கூடுதல் கவனம் அவசியம்.

(பாடக்குறிப்புகளை வழங்கியவர்: மா.மோகன்ராஜ்,
முதுநிலை கணித ஆசிரியர், இரா.புதுப்பாளையம், நாமக்கல் மாவட்டம்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x