பயத்தையும் பதற்றத்தையும் விரட்டும் வழி

Published : 09 Jun 2014 12:05 IST
Updated : 09 Jun 2014 12:05 IST

பயங்களிலேயே மிகப் பெரியது எதுவென உளவியல் ஆராய்ச்சி செய்தார்கள். அதாவது அநேகருக்கு எது மிகப் பெரிய பயம் என்று. மரணம் தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. மரண பயத்திற்கு இரண்டாம் இடம்தான். முதலிடம் பிடித்து அனைவரையும் பயமுறுத்தும் விஷயம் எது தெரியுமா?

ஒரு கூட்டத்தைப் பார்த்துப் பேசுவதுதான்! கூட்டத்தில் உரையாற்றத் தேவை இல்லாதவருக்கு வேலைக்கான நேர்காணல் அனுபவம் தான் மிகப் பெரிய பயம் எனத் தாராளமாகச் சொல்லலாம். இதைப் பயம் என்பதைவிடப் பதற்றம் என்பதுதான் சரி. தன்னை யாரோ சோதிக்கிறார்கள் என்பதே ஒருவிதப் பதற்றத்தை உருவாக்குகிறது. இது எல்லா வயதினருக்கும் எல்லாத் தரப்பினருக்கும் பொருந்தும்.

ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு பயம் இல்லையா என்ன? தங்கள் மேற்படிப்புக்கான தேர்வு எழுதும்போது மாணவர்களைப் போலவே ஆசிரியர்களையும் கடைசி நிமிடப் படிப்பு, தேர்வு பயம் எல்லாம் தொற்றிக்கொள்கிறது. அதே போல் பெரும் பதவிகளில் இருப்பவர்களும் நேர்காணல்களில் பதற்றப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.

புதிய ஆட்களைச் சந்திக்கும் பயத்திலேயே புது வேலை தேடாத ஆட்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். நேர்காணலில் சிலருக்குப் பிரத்யேகப் பயங்கள் உண்டு. மேலதிகாரிகள் அல்லது பெரும் புள்ளிகளைச் சந்திப்பதில் சிலருக்குப் பயம். ஆங்கிலம் பேசுபவர்களைக் கண்டால் பயம் சிலருக்கு. பெண்கள் நேர்காணலில் கேள்வி கேட்டால் பதற்றத்தில் ஆண்களையே பார்த்துப் பேசும் ஆண்களும் இருக்கிறார்கள். (கல்யாணமானவர்கள் பெண்கள் கேள்விகளுக்குப் பெரிதும் பழகியிருப்பார்கள் என்பது வேறு விஷயம்!)

பயத்தை மறைக்கச் செய்யும் அனைத்தும் பயத்தைத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கும் என்பதுதான் விந்தை. என் பால்ய கால நண்பன் ஒருவன் எந்த பிரசண்டேஷன், இண்டர்வியூ என்றாலும் ஒரு அரைக்கால் (க்வாட்டரில் பாதி...ஹி ஹி!) போட்டுக்கொண்டு அதை மறக்க பீடா, பழம், சூட மிட்டாய் என சுகந்தமாய் வருவான். அவன் கேனச் சிரிப்பே காட்டிக் கொடுத்துவிடும். தைரியம் வருவதற்காக உட்கொண்ட வஸ்து தெரிந்த விஷயத்தையும் மறக்கடித்துவிடும். பின்னர் சொதப்பல்தான்.

பதற்றம் சிலரைப் பேச விடாது. சிலரை அதிகம் பேசவைக்கும். சிலரை விநோதமாக நடந்துகொள்ள வைக்கும். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். பசிக்காது. சிறு நீர் வருவது போலத் தோன்றும். வராது. எதற்கு என்று தெரியாமல் மனம் கலவரமாய் இருக்கும். மொத்தத்தில் நம் இயல்பை மாற்றிக் காண்பிக்கும்.

சில இண்டர்வியூக்கள் ‘ஸ்ட்ரெஸ் இண்டெர்வ்யூ’ வகையைச் சேர்ந்தவை. அதாவது நீங்கள் பதற்றம் அடைகிறீர்களா? அல்லது எந்த அளவு பதற்றம் தாங்குவீர்கள் எனப் பார்ப்பதற்கே கேள்விகள் கேட்பார்கள். உங்களைக் கோபப்படுத்தும் கேள்விகளைக் கூடக் கேட்பார்கள். இது மன வலிமையைச் சோதிக்கும் முயற்சி. சில நிர்வாகப் பள்ளிகளிலும் ராணுவத் தேர்விலும் இதை வாடிக்கையாகச் செய்வார்கள்.

சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒரு கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள்: நல்லா தயார் செய்தா இந்தப் பயமெல்லாம் வராது. தெரியலைன்னாதான் பயம் வரும்.

இது முற்றிலும் தவறு. பயத்திற்கும் பாடம் அறிவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நன்கு படித்துப் பதில் தெரிந்த பலர் பதற்றத்தில் தவறாக விடை சொல்வார்கள். அவர்களுக்கு மறந்துபோவதும் இயற்கை. இது மன இயல்பு சார்ந்த விஷயம்.

ஒரு நேர்காணல் முழுவதும் ஒரு கேள்விக்குக்கூடப் பதில் சொல்லாதவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணுவது பேதமை. அவர்களிடமிருந்து பதில் வரவழைக்கச் செய்வது ஒரு சவால். ஒரு நேர்காணல் கலை. அவ்வளவு தான்.

சரி, நேர்காணலில் பதற்றம் வந்தால் என்ன செய்யலாம்? ‘மனதை நிதானமாக வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட மூச்சு விடுங்கள். புன்னகை செய்யுங்கள். தெரிந்ததைப் பேசுங்கள்’ போன்ற புராதன அறிவுரைகள் வேலை செய்யாது.

அந்த நிகழ்ச்சிக்குச் செல்லும்போது செய்துகொள்ள இது முக அலங்காரம் அல்ல. இது அக அலங்காரம். அதனால் நிறைய காலம் பிடிக்கும்.

பதற்றம், பயம், துக்கம், கோபம் போன்ற எதுவும் உங்கள் தினசரி வாழ்க்கையைப் பாதித்தால் உளவியல் உதவி அவசியம். நேர்காணலில் மட்டும் பதற்றப்படும் ஆளா அல்லது பொதுவாகப் பதற்றமான ஆளுமை கொண்டவரா என்பதை முதலில் அலச வேண்டும். State Anxiety சூழ்நிலை சார்ந்தது. Trait Anxiety ஆளுமை சார்ந்தது. இதற்கேற்பத்தான் இதைக் கையாள வேண்டும்.

இன்று பலர் பதற்றத்திற்கு உளவியல் சோதனை, சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். யோகா தொடர்ந்து செய்தால் ஒட்டுமொத்த பதற்றம் குறையும். ஆனால் ஸ்டேட் ஆங்க்சைடிக்கு உளவியல் உதவி நல்லது. நம் வேலையை, வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் ஒரு பிரச்சினைக்கு ஆலோசனை எடுத்துக் கொள்வது தவறு இல்லையே? இது மேற்கத்தைய நாடுகளில் கல்விக் கூடங்களிலேயே நடக்கிறது!

தன் இருப்பு பற்றிய கவலை வருகையில் பயமும் பதற்றமும் வருகின்றன. தன்னை ஒருவர் கூர்ந்து நோக்குவதே ஓர் அசௌகரிய உணர்வுதான். பிறர் உற்று நோக்கினால் செய்யும் வேலையைக்கூடச் சரியாகச் செய்ய முடியாது.

சரி, எப்போதும் நேர்காணல் தரும் பதற்றத்தை எப்படிக் குறைப்பது? நிறைய நேர்காணல்கள் எடுத்துக் கொள்வதுதான் சிறந்த வழி. பதற்றத்தைத் தவிர்க்கும்போது ஏற்படும் நிவாரணம் அடுத்த முறை பதற்றத்தின் வீரியத்தை அதிகரிக்கும். பதற்றத்தைத் தொடர்ந்து எதிர்கொள்ளும்போது அது பலம் இழக்கும்.

எந்த வயதானால் என்ன? உங்களுக்குத் தகுந்த வேலைகளுக்கு விண்ணப்பியுங்கள். சில இண்டெர்வியூக்களுக்குச் செல்லுங்கள். பதற்றமும் குறையும். சந்தை நிலவரமும் தெரியும். வேலைச் சந்தையில் உங்கள் மதிப்பும் தெரியும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor