Last Updated : 31 Jan, 2017 10:31 AM

 

Published : 31 Jan 2017 10:31 AM
Last Updated : 31 Jan 2017 10:31 AM

தேர்வுக்குத் தயாரா? - கைவரப்பெறும் கணிதம்!

கணிதம் என்றாலே நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவது மாணவர்களின் இலக்காக உள்ளது. ஆனால் அதற்கான திட்டமிடல், உழைப்பு ஆகியவற்றில் அதிகக் கவனம் தேவை.

நூற்றுக்கு நூறு உறுதி

ஒரு மதிப்பெண் வினாக்களே வினாத்தாளின் கடினத் தன்மையையும், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதையும் உறுதி செய்கின்றன. மொத்தமுள்ள 12 பாடங்களில், 10 மதிப்பெண்களுக்குரிய செய்முறை வடிவியல், வரைபடங்களுக்கான 2 பாடங்கள் தவிர்த்த ஏனைய 10 பாடங்களில் இருந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகின்றன. இந்த வகையில் 2, 3, 5, 6, 7 ஆகிய பாடங்களில் இருந்தும் தலா 2 வினாக்கள், ஏனைய 5 பாடங்களில் இருந்து தலா 1 வினா என மொத்தம் 15 வினாக்கள் கேட்கப்படும் (கேள்வி எண் 1-15).

கணித வினாத்தாளில் சாய்ஸ் இல்லாத பகுதி இது என்பதால், நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களும் இப்பகுதியில் தவறிழைக்க நேரிடும். பெரும்பாலும் புத்தகத்தின் பயிற்சி வினாக்களே இப்பகுதியில் இடம்பெறும். இவ்வகையில் 10 பாடங்களின், மொத்தமுள்ள 205 ஒரு மதிப்பெண் வினாக்களை அடிக்கடி திருப்புதல் மேற்கொள்ள வேண்டும். கேள்வி எண், சரியான விடைக்குரிய குறியீடு, விடை ஆகியவற்றை முறைப்படியும், விரைவாகவும் எழுதப் பயிற்சி பெற வேண்டும். கேள்வியைப் படித்ததும் விடையை நினைவு கூர்ந்த பின்னரே, அதனைக் கொடுக்கப்பட்ட நான்கில் சரியான விடையுடன் சரி பார்க்க வேண்டும்.

கட்டாய வினாவில் கவனம்

2 மதிப்பெண் பகுதியில் (கேள்வி எண் 16-30) இடம் பெறும் 15 வினாக்களில் முதல் 14-ல் இருந்து நன்கு தெரிந்த 9 வினாக்களை எடுத்து எழுதலாம். இந்த 14 வினாக்களில் பாடநூலின் எடுத்துக்காட்டுப் பகுதியில் இருந்து 6, பயிற்சி வினாக்களில் இருந்து 8 என அமைகின்றன. கடைசி வினா (கேள்வி எண் 30) கட்டாய வினாவாகும். 1, 3, 4, 5, 7, 8 ஆகிய பாடங்களில் இருந்தும் தலா 2 வினாக்களும், 2, 6, 11, 12 ஆகிய பாடங்களில் இருந்தும் தலா 1 வினா என 2 மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும். ‘அல்லது’ பாணியில் கேட்கப்படும் கட்டாய வினா பெரும்பாலும் 2, 3, 5, 8 ஆகிய பாடங்களில் இருந்தே இடம்பெறுகிறது. சமயங்களில் இந்தக் கணிப்பிற்கு மாறாகவும் கட்டாயப் பகுதி வினாக்கள் அமைவதுண்டு.

‘சாய்ஸ்’ அதிகமுள்ள பகுதி

5 மதிப்பெண் பகுதியின் 15 வினாக்களில் (கேள்வி எண் 31-45) முதல் 14-ல் இருந்து நன்கறிந்த 8 வினாக்களைத் தெரிவு செய்து எழுத வேண்டும். இந்த 14 வினாக்களில் 8 பயிற்சி பகுதியில் இருந்தும், 6 எடுத்துக்காட்டு வினாக்களில் இருந்தும் கேட்கப்படும். வினாத்தாளின் சாய்ஸ் அதிகமுள்ள பகுதி என்பதால் ஐயத்துக்கு இடமளிக்காததும், நன்கு தெரிந்ததும், எளிமையானதுமான விடைகளை எடுத்து எழுதலாம். இந்த வகையில் நிறுவுக, சரிபார் வகையிலான வினாக்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். எழுதுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதும், தவறுகளுக்கு வாய்ப்பளிப்பதுமான புள்ளியியல் பாடம், முக்கோணவியல் பாடத்தின் உயரங்களும் தூரங்களும் பகுதி உள்ளிட்டவற்றைத் தவிர்க்கலாம்.

10 மதிப்பெண் பத்திரம்

செய்முறை வடிவியல், வரைபடங்களுக்கு எனத் தலா ஒரு 10 மதிப்பெண் வினா இடம்பெறுகிறது (கேள்வி எண் 46-47). செய்முறை வடிவியலின் தொடுகோடுகள், முக்கோணங்கள் வரைதல், வட்ட நாற்கரம் வரைதல் என 3 பகுதிகளில் ஏதேனும் 2 பகுதிகளில் முழுமையாகப் படித்திருந்தால், ‘அல்லது’ பாணியில் அவற்றில் ஒரு வினாவுக்குத் தெளிவான பதில் தந்து முழு மதிப்பெண் பெறலாம். இந்த மூன்றில் 3-வது பகுதியில் வினாக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், முதல் 2 பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். வரைபடங்கள் (கிராஃப்) பகுதியில் இதே போன்று இடம்பெற்ற 2 பயிற்சிகளில் 2-ம் பயிற்சிக்கு முன்னுரிமை தரலாம்.

திருத்தமான திருப்புதல்

சாய்ஸ் அடிப்படையில் தவறான விடையை அடித்துவிட்டுச் சரியான மாற்று விடையை எழுதும்போது கவனம் தேவை. தேவையற்ற விடையைப் பேனாவுக்குப் பதில் பென்சிலால் அடிக்கலாம். பின்னர்த் திருப்புதலின்போது, புதிதாக எழுதிய விடையைவிட பென்சிலால் அடித்த விடையே மேல் என்ற தோன்றினால், இம்முறையில் சரி செய்துகொள்வது எளிதாக அமையும். ஏதேனும் ஒரு கணக்கைத் தீர்ப்பதில் குழப்பமோ, இழுபறியோ நீடித்தால் அதை அப்படியே விட்டுவிட்டு, இதர கணக்குகளை விரைவாக முடிக்கலாம். பின்னர் சாவகாசமாக அந்தக் கணக்கைத் தீர்க்க முயற்சிக்கலாம்.

ஐயமின்றி 50 மதிப்பெண்

தேர்ச்சி பெறுவதைச் சவாலாகக் கருதுபவர்களும், திட்டமிட்டுப் படித்தால் குறைந்தது 50 மதிப்பெண் பெறுவது சுலபம். 2011 முதல் தற்போது வரையிலான முந்தைய வினாத்தாள்களில் இருந்து அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களைப் படித்தல் உதவும். வினாத்தாளின் எந்தப் பகுதியையும் விடாது அனைத்து உரிய வினாக்களுக்கும் தெரிந்தளவுக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டும். சூத்திரங்கள், அலகுகள் ஆகியவற்றுக்குத் தனி மதிப்பெண்கள் உண்டு என்பதால் அவற்றைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதேபோலப் படிநிலைகளுக்கும் மதிப்பெண் உண்டு என்பதால், விடை தவறாக அமைந்தாலும் எழுதிய வரையிலான கணக்குக்கு மதிப்பெண் பெற்றுவிட முடியும். பாகைமானியில் அளவுகள் குறிப்பதில் தவறுகள் நேருவதைத் தவிர்க்க வேண்டும்.

நேர மேலாண்மை

கணிதத்தின் பாடங்களைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் எழுதிப் பார்ப்பதைத் தவறாது பழக வேண்டும். திருப்புதல் என்றாலும் கணக்குகளை வெறுமனே பார்ப்பது, அப்போதைக்குப் புரிவதாகத் தோன்றினாலும், தேர்வறையில் இடர்பாடுகளை ஏற்படுத்தும். எனவே, ஒவ்வொரு முறையும் எழுதிப் பார்ப்பது அவசியம். அப்போதுதான் விரைவு, துல்லியம், தெளிவு ஆகியன கைவரப்பெறும். கணிதத் தேர்வின் நேர மேலாண்மைக்கு இந்த அணுகுமுறையே கைகொடுக்கும். ஒரு மதிப்பெண் பகுதிக்கு 15 நிமிடங்கள், 2 மதிப்பெண் பகுதிக்கு அதிகபட்சம் 30 நிமிடங்கள், 5 மதிப்பெண் பகுதிக்கு அதிகபட்சம் 45 நிமிடங்கள், 10 மதிப்பெண் பகுதிக்கு அதிகபட்சமாக 30 நிமிடங்களில் விடையளித்துப் பழக வேண்டும். அப்போதுதான் திருப்பிப் பார்க்கவும் சிறு தவறுகளைச் சரிபார்க்கவும் நேரம் கிடைக்கும்.

(பாடக்குறிப்புகளை வழங்கியவர் ஆர்.முருகானந்தம்.
பட்டதாரி கணித ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,
உலகப்பம்பாளையம், நாமக்கல் மாவட்டம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x