Last Updated : 31 Jan, 2017 10:32 AM

 

Published : 31 Jan 2017 10:32 AM
Last Updated : 31 Jan 2017 10:32 AM

சேதி தெரியுமா? - ராஜஸ்தானி மொழிக்கு எதிர்ப்பு

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் எட்டாவது அட்ட வணையின்படி இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக ராஜஸ்தானி விரைவில் சேர்க்கப்படும் என ராஜஸ்தான் மாநிலத்தின் நிதியமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சமீபத்தில் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தானி மொழியை தேசிய அலுவல் மொழி யாக்க வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து இந்தியின் கிளை மொழிபோல் இருக்கும் ராஜஸ்தானி, போஜ்பூரி போன்ற மொழிகளுக்கு அலுவல் மொழி அந்தஸ்து தரக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தி மொழி அறிஞர்கள் கடிதம் எழுதினர்.

எட்டாவது அட்டவணையில் இந்திய தேசிய அலுவல் மொழிகளாக 22 மொழிகள் உள்ளன. முதலில் இந்தி, வங்காளம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 14 மொழிகள்தான் இந்த அட்டவணையில் இருந்தன. பிறகு 1967-ல் 21-வது சட்ட திருத்தத்தின்படி சிந்தி மொழியும், 1992-ல் 71-வது சட்டத் திருத்தத்தின்படி கொங்கணி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகளும், 2004-ல் 92-வது சட்டத்திருத்தத்தின்படி போடோ, டோஹ்ரி , மைதிலி, சந்தாலி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டன.



சாதனைக்கு இஸ்ரோ தயார்

ஒரே ராக்கெட்டில் 103 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்தும் புதிய சாதனையை நிகழ்த்த வுள்ளது. இவற்றில் மூன்று செயற்கைக்கோள்கள் மட்டும் இந்தியாவைச் சேர்ந்தவை. மற்ற நூறு செயற்கைக்கோள்களும் பல் வேறு நாடுகளைச் சேர்ந்தவை. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தத் திட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்படுத்தப்படும். செயற்கைக் கோள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைவேகம் கொண்ட தாக வடிவமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இஸ்ரோ ஒரே ராக்கெட்டில் 20 செயற்கைக்கோள்களை அனுப்பியது. ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைக்கோள்கள் அனுப்பியதில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. 2014-ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களை அனுப்பியது. அதற்கு அடுத்த படியாக 2013-ம் ஆண்டு நாசா ஒரே ராக்கெட்டில் 29 செயற்கைக் கோள்களை அனுப்பியது.



இந்திய மேலாண்மைக் கழகத்துக்கு அதிகாரம்

இந்திய மேலாண்மைக் கழகம் திறமைமிக்க மேலாண்மை ஆளுமைகளை உருவாக்குவதற்கான பயிற்சியை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு பட்டம் (degree) வழங்கும் அதிகாரம், இதுவரை இல்லாமல் இருந்தது. இந்திய மேலாண்மைக் கழகத்துக்கு பட்டம் வழங்கும் அதிகாரம் அளிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் (Institutions of National Importance) இந்திய மேலாண்மைக் கழகத்தை அங்கீகரித்துள்ளது. பட்டயம், முதுநிலைப் பட்டயம் ஆகிய கல்விச் சான்றிதழ்களை மட்டும் இதுவரை இந்திய மேலாண்மைக் கழகம் வழங்கிவந்தது குறிப்பிடத்தகுந்தது.



இந்தியா-ஐக்கிய அரபு நாடுகள் ஒப்பந்தம்

இந்தியா, ஐக்கிய அரபு நாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, எண்ணெய் மேலாண்மை, சாலைப் போக்குவரத்து, விவசாயம் உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடிக்கும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் செய்யது அல் நஹ்யான்னுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 68-வது குடியரசு தினவிழாவின் சிறப்பு விருந்தினராக ஐக்கிய அரபு நாடுகள் இளவரசர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.



பத்ம விருதுகள்

2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 89 பேருக்கு அறிவிக்கப் பட்டுள்ளன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுகிறது. இவற்றில் பத்ம விபூஷண் விருது உயரிய விருது. பத்ம பூஷண், பத்மஸ்ரீ முறையே அதற்கு அடுத்த நிலைகளில் உள்ள விருதுகள். இந்தாண்டு பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், அரசியல் தலைவர்கள் சரத்பவார், முரளி மனோகர் ஜோஷி, ஆன்மிகவாதி ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், தாய்லாந்து இளவரசி மகா சக்ரி சிரிந்தொண், தமிழ்ப் பத்திரிகையாளர் சோ ராமசாமி உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம பூஷண் விருதும், தமிழக விளையாட்டு வீரர் மாரியப்பன் உள்ளிட்ட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் வெளிநாட்டவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், வெளிநாட்டுவாழ் இந்தியர் பிரிவின் கீழ் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 19 பேர் பெண்கள். 6 பேர் மறைந்தவர்கள். பத்ம விருதுகள் கலை, இலக்கியம், சமூகப் பணி, பொதுப் பணி, அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில்துறை, மருத்துவம், கல்வி, விளையாட்டு, ஆட்சிப் பணித் துறை ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x