Last Updated : 08 Nov, 2016 11:14 AM

 

Published : 08 Nov 2016 11:14 AM
Last Updated : 08 Nov 2016 11:14 AM

சேதி தெரியுமா? - மவுலிவாக்கம் கட்டிடம் தகர்ப்பு

சென்னை மவுலிவாக்கத்தில் சர்ச்சைக்குரிய தனியார் வீட்டுக் குடியிருப்பு, நவம்பர் 2-ம் தேதி அன்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் தகர்க்கப்பட்டது. அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் உள்தகர்ப்பு முறையில் (implosion) துல்லியமாகத் தகர்க்கப்பட்ட, சென்னையின் முதல் அடுக்குமாடிக் கட்டிடம் இது. ஜூன் 28-ம் தேதி 2014-ல், மவுலிவாக்கம் குன்றத்தூர் பிரதான சாலையில் தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு வீட்டுக்குடியிருப்புகளில் ஒரு கட்டிடம் இடிந்து 61 பேர் பலியாகினர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கட்டிடத் தொழிலாளர்கள். பாதுகாப்பு விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டதால் அருகிலிருந்த கட்டிடத்தையும் இடித்துத் தகர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் மறுசீரமைப்பு

மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் அமைப்பையும் அதன் நிலைக் கமிட்டியையும் மத்திய அரசு மறுசீராக்கம் செய்துள்ளது. மாநிலங்களுக்கிடையான கவுன்சில் உத்தரவு,1990-ன் இரண்டாவது பிரிவின் கீழ் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான அரசியல் சாசன உறுப்பாக மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் செயல்படுகிறது. இதன்படி இந்தக் கவுன்சிலின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார். உறுப்பினர்களாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களும் இருப்பார்கள். இவர்களுடன் ஆறு மத்திய அமைச்சர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் நிலைக்கமிட்டியின் தலைவர் பொறுப்பை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வகிப்பார்.

எட்டு சிமி உறுப்பினர்கள் பலி

தடை செய்யப்பட்ட இயக்கமான சிமி அமைப்பைச் சேர்ந்தவர்களென்று சொல்லப் படும் எட்டு பேர் போபால் சிறையிலிருந்து தப்பிச் சென்றபோது, போலீசாருடன் நடந்த சண்டையில் அக்டோபர் 31-ம் தேதி கொல்லப்பட்டனர். போபால் மத்திய சிறையில் சிறைப்பாதுகாவலரைக் கொன்றுவிட்டு, அதிகாலையில் சிறை மதிலில் ஏறி குதித்துத் தப்பித்த அவர்கள், சிறையிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அச்சர்புரா கிராமத்துக்கு அருகே காவல்துறையினரால் வளைக்கப்பட்டபோது நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த மோதல் சாவு தொடர்பாக உள்ளூர் தொலைக்காட்சி வெளியிட்ட மொபைல் கருவியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் கொல்லப்பட்ட கைதிகள் யாரிடமும் ஆயுதம் இல்லை. சிமி அமைப்பைச் சேர்ந்த கைதிகள் சிறையிலிருந்து தப்பித்தது மற்றும் மோதல் சாவில் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையை மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்தார். இந்தச் சம்பவம் தொடர்பான பத்திரிகை செய்திகளைத் தானாக முன்வந்து வழக்காக எடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்தியப் பிரதேச மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆசிய ஹாக்கி சாம்பியன்

மலேசியாவில் குவாண்டன் நகரத்தில் நான்காவது ஆசிய சாம்பியன் கோப்பைப் போட்டிகள் அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி அக்டோபர் 30 வரை நடைபெற்றன. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா நாடுகள் பங்கேற்றன. இறுதியாட்டத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதிபெற்றன. இறுதிப்போட்டி அக்டோபர் 30 அன்று நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆசிய சாம்பியன் கோப்பையை வென்றது. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணிக்குக் கிடைத்த முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி இது. இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த ரூபிந்தர் பால் சிங் இத்தொடரில் அதிகபட்சமாக 11 கோல்கள் அடித்தார்.

காஷ்மீரில் 32 பள்ளிக்கூடங்கள் பாதிப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தால் இதுவரை 32 பள்ளிக்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது. நவம்பர் 4-ம் தேதி நள்ளிரவில் பந்திபோரா மாவட்டத்திலுள்ள சைத்நராவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டிடம் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் முயன்றும் கட்டிடத்தைக் காப்பாற்ற இயலவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த நான்கு மாதங்களாக ஏற்பட்டிருக்கும் நிம்மதியின்மையைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்களால் இதுவரை 32 பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கடந்த ஜூலை 8-ம் தேதி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினரோடு நடந்த மோதலில் கொல்லப்பட்டதிலிருந்து இந்தப் பதற்ற நிலை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவுகிறது. பள்ளிகள் தாக்கப்படும் சம்பவத்தை தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம், பள்ளிகளைப் பாதுகாக்க மாநில அரசுக்கு வழிகாட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x