Published : 31 Jan 2017 10:32 AM
Last Updated : 31 Jan 2017 10:32 AM

சென்னையில் தேர்வு இனிது: ரசித்துப் படித்தால் வெல்லலாம்!

தி இந்து, எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி சென்னையில் இணைந்து நடத்திய ‘இனிது இனிது தேர்வு இனிது’ விழா பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற மாணவர் திருவிழாவைத் தி இந்து தமிழ் நாளிதழும், சென்னை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்திவருகின்றன. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூரைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் ஜனவரி 22 அன்று நடைபெற்றது. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பி.ஏ.நரேஷ், வடசென்னை மாவட்டக் கல்வி அதிகாரி எத்திராஜுலு, எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி தலைவர் கே.ராமதாஸ், இயக்குநர் சுகந்தி ராமதாஸ், செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் குத்துவிளக்கேற்ற, விழா இனிதே தொடங்கியது.

பயத்தை விரட்டு!

“பிளஸ் 2 பொதுத் தேர்வு கடினமான தேர்வே அல்ல காலாண்டு, அரையாண்டு தேர்வைப்போல அதுவும் ஒரு தேர்வுதான்” என்று தனது பேச்சைத் தொடங்கினார் இணை இயக்குநர் நரேஷ். புகழ்பெற்ற கல்லூரிகளில், முக்கியமான பாடப் பிரிவுகளில் இடம் வேண்டுமானால் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தாக வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். “பயத்தோடு தேர்வெழுதினால் நன்கு படித்த பாடம்கூட மறந்துபோகும், தன்னம்பிக்கையோடு தேர்வைச் சந்தித்தால் லேசாகப் படித்த பாடங்கள்கூடத் தேர்வறையில் நன்கு நினைவுக்கு வரும். எனவே, பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்” என்று உற்சாகப்படுத்தினார் மாவட்டக் கல்வி அதிகாரி எத்திராஜுலு.

கனவு காண விடுங்கள்!

தன்னம்பிக்கை பேச்சாளரான கோவை நன்னெறிக் கழகத் தலைவர் இயகோகா என்.சுப்ரமணியத்தின் பேச்சு மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தது. வாழ்க்கையில் கசப்பு என்பதே கிடையாது. அனைத்துமே இனிதுதான் தேர்வு உள்பட என்று பேசத்தொடங்கிய அவர். “நாம் அனைவருமே வெற்றியாளர்களாகத்தான் பிறந்திருக்கிறோம். இந்திய மாணவர்களுக்கு இணையாக வேறு எந்த மாணவர்களும் கிடையாது” என்றபோது மாணவர்களின் கரவொலி அரங்கை அதிரவைத்தது. “இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கனவு காண விடுவதில்லை. தங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்கிறார்கள். பிள்ளைகளை அவர்களுக்குப் பிடித்த படிப்பைத் தேர்வுசெய்ய அனுமதியுங்கள்” என்று பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்தார். “மதிப்பெண் குறைந்துவிட்டது என்று ஒருபோதும் தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் நிறைய சாதித்திருக்கிறார்கள்” என்று மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டினார் இயகோகா சுப்ரமணியம்.

பழைய தவறை மறந்திடு!

எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில் பாடங்களுடன் கூடுதலாக அதற்குத் தொடர்புடைய இதர படிப்புகளும் கூடுதலாக நடத்தப்படுவதாகவும் செய்முறை பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுவதாகவும் குறிப்பிட்டார் அக்கல்லூரியின் முதல்வர் எம்.செந்தில்குமார். கடினப் பயிற்சி, தொடர் உழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கிய சென்னை ஸ்ரீ வித்யா கல்வி மையத்தின் கவுரவ இயக்குநரான கல்வியாளர் எஸ்.பி.சுப்ரமணியம், “பழைய தேர்வுகளின் தவறுகளையே நினைத்துக்கொண்டி ருக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அந்தச் சிந்தனை அடுத்த தேர்வையும் பாதிக்கும்” என்றார். தொடர்ந்து உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதப் பாட ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கான உத்திகளை மாணவர்களுக்குப் பட்டியலிட்டுச் சொன்னார்கள்.

“உயிரியல் தேர்வில் தாவரவியல் பகுதியில் ஒரு மார்க் கேள்வி உள்பட அனைத்துக் கேள்விகளும் 85 சதவீதம் புத்தக வங்கியில் இருந்துதான் கேட்கப்படும். அதேநேரத்தில் விலங்கியல் பகுதியில் 20 சதவீதக் கேள்விகள்தான் இதுபோன்று இடம்பெறும். விலங்கியல் பாடத்தில் கோட்பாடு சார்ந்த கேள்விகள் அதிகம் கேட்பார்கள்” என்றார் உயிரியல் ஆசிரியர் என்.குமாரவேல்.

குருட்டு மனப்பாடம் வேண்டாம்!

இயற்பியல் ஆசிரியர் ஏ.திருமாறன், “பொதுவாக இயற்பியல் பாடத்தில் கணக்கு சார்ந்த வினாக்கள் மீது அதிகக் கவனம் செலுத்துவது நல்லது” என்றார். வேதியியலில் புளூ பிரிண்ட் கேள்விகளைத் தாண்டி வேறு கேள்விகளே வராது என்று அடித்துக்கூறிய வேதியியல் உதவி பேராசிரியர் ஏ.பரீத் அஸ்லாம் ரசித்துப் படித்தால் வேதியியல் பாடமும் மிகவும் ஈஸியாக இருக்கும் என்றார். ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பகுதியில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் மிக எளிதாக முழு மதிப்பெண்ணை அள்ளிவிடலாம் என்றும் மாணவர்களுக்கு ஆலோசனை கூறினார்.

“குருட்டு மனப்பாடம் வேண்டாம். புரிந்து படியுங்கள்” என்ற கணித ஆசிரியர் ஆர்.மணிமாறன், கணக்கைத் திரும்பத் திரும்பச் செய்துபார்த்தால் எளிதில் 200-க்கு 200 வாங்கிவிடலாம் என்றார்.

நிகழ்ச்சியை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியின் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின் தலைவர் பேராசிரியர் ஆர்.சங்கர் தொகுத்து வழங்கினார். கல்லூரியின் செயலாளர் சுரேஷ்பாபு நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சியைச் சென்னை அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர் அண்டு டிசைன் கல்வி நிறுவனம், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்தின.

மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி

வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா பள்ளி மாணவர் எஸ்.ராமகிருஷ்ணன், “பிளஸ் 2 தேர்வில் கணிதத்தில் 150 மதிப்பெண் எடுப்பேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 200-க்கு 200 வாங்கிவிடுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார். அதேபோல், ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநித்யா, “இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்போது எனது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது பிளஸ் 2 தேர்வில் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன்” என்றார். உற்சாகமாகப் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர் களுக்கு பார்முலா புத்தகம், முக்கிய வினாக்கள் அடங்கிய கையேடு ஆகியவை வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x